Friday, April 25, 2025
spot_img

செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக தொடர்வாரா? கைது செய்யப்படுவாரா? அதிகரிக்கும் அநாகரீக அரசியல், வலை பின்னல்களில் தமிழக அரசியல் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “பொதுவெளியில் தனி நபர்கள் மீது அநாகரிகமான வார்த்தைகளை பேசுவது தமிழக அரசியலில் அதிகரித்து இருக்கிறது சாமி” என்றதும் கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

“நீ சொல்வது புரிகிறது! ஒரு கட்சியின் மாநில தலைவரும் எப்போதும் தேர்தலில் தனித்து களமிறங்கும் கட்சித் தலைவரும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் விஜய் உள்ளிட்ட மாற்று கட்சியினரையும் ஒருமையிலும் மரியாதை குறைவாகவும் தரக்குறைவான வார்த்தைகளிலும் பொதுவெளியில் பேசுகிறார்கள். இதற்கு பதில் தரக்கூடிய ஆளும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தனிமனித தாக்குதல்களை நடத்துகிறார்கள்.  இதனால் ஊக்கமடையும் முதலிரண்டு கட்சிகளின் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாமலும் மரியாதை குறைவாகவும் தகவல்களை பகிர்கிறார்கள். இத்தகைய நிலை தொடர்வது வருத்தம் அளிக்கக் கூடியது. இதனால் மக்களுக்கும் உண்மை எது? பொய் எது? என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “உண்மைதானே சாமி!?” என்றேன் நான்.

“அமலாக்கத்துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி   சுமார் ஒரு வருட காலம் சிறையில் இருந்து கடந்த 26 செப்டம்பர் 2024 உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் வெளிவந்தார். சிறையில் இருந்த போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த அவர் ஜாமினில் வந்த மூன்று நாட்களில் தமிழக அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இதன் பின்பு அவருக்கு எதிரான வழக்கில் சாட்சி சொல்ல சாட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவின் விசாரணையில் சில வாரங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை ஆம்/ இல்லை என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் பதில் சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்! பத்து நாட்கள் அவகாசம் வழங்குகிறோம்! இதுதான் இறுதி வாய்ப்பு!” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக தொடர்வாரா? மாட்டாரா? கைது செய்யப்படுவாரா? என்பது தான் தற்போது தமிழக மக்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “அடுத்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள10 நாட்கள்தானே? காத்திருப்போம் சாமி!?” என்றேன் நான்.

“சவுக்கு சங்கர் வீட்டில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து வீடு முழுவதும் மலத்தை கொட்டி சென்றுள்ளது. தான் வீட்டில் உள்ள இல்லாதபோது இந்த சம்பவம் நடந்ததால் நான் தப்பித்தேன் எனக் கூறும் அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மீது குற்றம் சாட்டியுள்ளார். தான் இனிமேல் ஊடகப் பணியை மேற்கொள்ளப் போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. அரசியல் தலைவர்கள் மீது உண்மையான குற்றச்சாட்டுகளையும் உண்மையற்ற சங்கதிகளையும் கலந்து பரப்பும் சமூக ஊடகங்களால் ஏற்பட்டுள்ள அவல நிலை இது” என்றார் வாக்காளர் சாமி. “சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? பார்ப்போம்! சாமி!?” என்றேன் நான்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
 வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

“வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப் போகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கிறது. ஆனால், உண்மையில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை இத்தகைய தகவல்களை சமூக வலைத்தளத்தில் திட்டமிட்டு பரப்பி திமுக கூட்டணியை உடைக்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி உடைய வேண்டும் என்பதும் விஜய் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதும் அப்போதுதான் தங்களுக்கு களம் சாதகமாக இருக்கும் என்பதும் ஒரு கட்சியினரின் எண்ணமாக சமூக வலைதளங்களில் பிரதிபலிக்கிறது. ஆனால், அதிமுகவில் சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் முற்றிலும் இல்லை என்ற நிலையிலேயே காணப்படுகிறது. சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரின் நெருக்கடி, கட்சிக்குள் செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்டோரின் அழுத்தம், டெல்லியில் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், இதற்கிடையே விரைவில் வர உள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் உள்ள இடியாப்ப சிக்கல்கள் போன்றவற்றை கையாளுவதற்கு கட்சியின் தலைமைக்கு நேரம் சரியாக இருக்கிறது” என்றார் வாக்காளர் சாமி. “சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்துவிடும்! சாமி!?” என்றேன் நான்.

“அமெரிக்காவில் கல்வித்துறையானது மத்திய அரசின் கையிலும் மாநில அரசுகளின் கையிலும் உள்ளது. ஆனால், கல்வியை முற்றிலும் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பட்டியலுக்கு மாற்றிவிட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்தியாவில் கல்வி என்பது மாநிலங்களின் அதிகார பட்டியல் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மற்றும் மாநிலங்களின் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கல்வியை மாநில அரசுக்கு பட்டியலுக்கு வழங்கி விட வேண்டும் என்று தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார் வாக்காளர் சாமி. “இங்கு விட்டுக் கொடுத்ததை ஒருபோதும் திரும்ப பெற முடியாது அல்லவா? சாமி!?” என்றேன் நான்.

“உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சுல்பிகார் ஹைதர், அலி அகமது ஆகிய வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரது வீடுகள்மாநில அரசால் புல்டோசர் கொண்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில அரசுக்கு எதிரான இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதன் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. சட்ட நடைமுறையை பின்பற்றாமல் செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. மேல்முறையீடு செய்ய போதுமான அவகாசம் வழங்கி மாநில அரசு நியாயமான முறையில் செயல்பட வேண்டும். நியாயமற்ற செயலை ஒருமுறை பொறுத்துக் கொண்டால் மீது மீண்டும் அது தொடரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியில் கருத்து தெரிவித்ததோடு நோட்டீஸ் வழங்கி 24 மணி நேரத்துக்குள் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளிய உத்திரப்பிரதேச அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்றார் வாக்காளர் சாமி. “நம்ம உச்ச நீதிமன்றம் தானே? சொல்லட்டும் சாமி!?” என்றேன் நான்.

“இன்னும் ஒரு மாதத்துக்குள் தமிழக அரசியலில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: அரசியல் களத்தை புரியும் படியாக, எளிமையாக விளக்கிய வாக்காளர் சாமிக்கு நன்றி.

இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles