அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்” என்றேன் நான். “செய்திகளுக்கா பஞ்சம்? நீங்கள் வெங்காயத்தை வீசினால் நான் வெடிகுண்டை வீசுவேன் என்று ஒருவர் கூறுகிறார். நீங்கள் வெங்காயத்தை வீசினால், நான் செய்து மூட்டைகளை வீசுவேன்” எனக் கூறி விட்டு கருத்து மூட்டைகளை அவிழ்த்தார் வாக்காளர் சாமி.
வாக்காளர் சாமிக்கு ஒரு வெங்காய தோசை கொடுத்து “யார் சாமி வெடிகுண்டு வீசுவது?” என்றேன் நான். “அவரைப் பற்றி பின்னர் கூறுகிறேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தார் வாக்காளர் சாமி.
“இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா? என்ற அச்சம் நீங்கிய நிலையில் உலகிலேயே அதிகமாக கடன் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது அமெரிக்காதான். ஆனால், அதே அமெரிக்காதான் உலக நாடுகளை ஆட்டுவிக்கும் பொருளாதாரப் போரை தொடங்கியுள்ளது.” என்றார் வாக்காளர் சாமி. “பொருளாதார போர் என்றால் என்ன ? சாமி” என்றேன் நான்.
“அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி செய்யும் நாடு வரியை குறைக்காவிட்டால் எங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகமாக வரி விதிப்போம் என்ற அமெரிக்காவின் வரி விதிப்பு போரை தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவை ஒட்டி உள்ள கனடாவில் இருந்து ஏராளமான பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு 25 சதவீத வரியை விதித்தார் ட்ரம்ப். உடனடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வருட சதவீத வரியை விதித்தது கனடா. அமெரிக்காவை ஒட்டி உள்ள மற்றொரு நாடான மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியையும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் விதித்தார் ட்ரம்ப்” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“அமெரிக்காவின் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 50 சதவீதத்துக்கு மேல் கனடா, சீனா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். இதனால் அமெரிக்க வணிகர்கள் கூடுதல் இறக்குமதி வரியை செலுத்தி வியாபாரத்தை செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திற்கும் தோராயமாக இந்திய மதிப்பில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஒரு லட்சம் கூடுதலாக செலவாகும்” என்றேன் நான்.
“சரி சாமி தமிழக செய்திகளுக்கு வாருங்கள்” என நான் கூறியதற்கு பொறு அவசரப்படாதே” என்றார் வாக்காளர் சாமி.
“பனாமா கால்வாயை சீனா கட்டுப்படுத்துகிறது என குற்றம் சாட்டி அதனை கைப்பற்ற அமெரிக்கா தற்போது முயல்கிறது. இதனால், பனாமா நாடு சீனாவுடன் செய்து கொண்டுள்ள தங்கப் பாதை திட்டத்தை புதுப்பிக்கவில்லை. மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றினார் ட்ரம்ப். இன்னும் கனடாவை 51 வது மாநிலமாக்குவேன் – கிரீன்லாந்து நாட்டை அமெரிக்காவுடன் இணைப்பேன் என முழக்கமிடும் ட்ரம்பின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கப் போகின்றன? என்று தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“தென்னாப்பிரிக்காவில் கொண்டுவரப்படும் நிலச் சீர்திருத்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. நிலச் சீர்திருத்தம் மூலம் தென் ஆப்பிரிக்கா அடிமை நாடாக இருந்தபோது வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை பறித்தால் தென்னாப்பிரிக்கா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டி உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“ஐக்கிய நாடுகள் சபைக்கும் பல வெளிநாடுகளுக்கும் நிதி உதவி வழங்கும் அமைப்பான யூ எஸ் எய்டையை (USAID) மூடுவதாக டிரம்பின் செயல் திறன் துறை தலைவரானஎலன் மாஸ்க் அறிவித்துள்ளார். இந்த செய்தி பல நாடுகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“அமெரிக்காவின் நடவடிக்கைகளால் அந்த நாட்டிலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பங்குச்சந்தைகள் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளன. அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயம் உருவாக்குவதை ஆதரித்த இந்தியாவின் நிலைப்பாடு பின் தங்கும் என்றே கருதப்படுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் அமெரிக்கா புறப்படுகிறார் இந்திய பிரதமர். இந்திய பிரதமர் அமெரிக்க அதிபரை சந்திக்க தேதி குறித்து ஆயிற்று. உலகச் செய்திகள் போதும் தமிழகத்துக்கு வாருங்கள் சாமி” என்றேன் நான்.
“ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் வெங்காயம் வீசினால் நான் வெடிகுண்டு பேசுவேன் என்று சீமான் பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேடையில் தடை செய்யப்பட்ட “கள்” குடித்துள்ளார் சீமான். சாதாரணமானவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் அரசு உடனடியாக கைது செய்யுமே? தமிழகம் முழுவதும் சர்ச்சை பேச்சுக்களாலும் தடையை மீறிய நடவடிக்கைகளாலும் சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாயுள்ளன. தமிழக முதலமைச்சர் சீமானை இன்னும் கைது செய்ய உத்தரவிடாமல் இருப்பது ஏன்?” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! சீமானை கைது செய்ய நாள் குறித்து இருப்பார்கள் ஈரோடு இடைத்தேர்தல் முடியட்டும் பார்ப்போம். ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக பெரியார் மீதான பிம்பத்தை உடைக்க சீமான் கை பாவையாக செயல்படுகிறார் என்றும் பிரபாகரனின் மகனை கொலை செய்யச் சொன்னது இந்திய தலைவர்கள்தான் என்றும் இன்னும் பல வதந்தி மூட்டைகளை சீமான் அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளார் எனவும் தமிழீழ தலைவர் பிரபாகரனின் பிம்பத்தை உடைக்க அடுத்து செயல்படுவார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். சைமன் செபஸ்டியன் என்ற பெயரை கெஜட்டில் மாற்றி கொடுத்தது நான் என்று நாம் தமிழர் கட்சியில் முன்பு தீவிரமாக இருந்து தற்போது திமுகவில் இருக்கும் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்” என்றேன் நான்.
“மத்திய அரசின் பட்ஜெட் மாயாஜால பட்ஜெட் என்றும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் நலன்களுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தமிழக முழுவதும் எடப்பாடி போராட்டம் நடத்தலாமே?” என்றார் வாக்காளர் சாமி.
“திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுன் அந்தக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவியை பெற்றுள்ளார். பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் தொல். திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். என்னதான் நடக்கிறது? என்று தெரியவில்லை. வரும் தேர்தலில் திமுகவுடன்தான் கூட்டணி – விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தொல். திருமாவளவன் அறிவிப்பாரா?” என்றார் வாக்காளர் சாமி.
“பெரியார் தமது கட்சியின் கொள்கை தலைவர் என்று பிரகடனம் செய்தார் தமிழக வெற்றி கழகத்தின் விஜய். ஆனால் பெரியாரை போட்டு தாக்கி வருகிறார் சீமான். இதற்கு எவ்வித பதிலையும் தராமல் இருக்கிறார் விஜய். பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்களுக்கு பதில் சொல்வாரா விஜய்? என்றார் வாக்காளர் சாமி.
“உலகின் சக்தி மிகுந்த நாடுகளின் பட்டியலை போபோர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம் பிடிக்கவில்லை. 12 ஆம் இடத்தையாவதுபிடித்துள்ளது என்று நினைத்துக் கொள்வோம்” கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நாட்டு நடப்புகளை விவரிக்கும் வாக்காளர் சாமிக்கு நன்றி.