இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“சில தினங்களுக்கு முன்னர் குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தில் ஆறு ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தியதாக மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த மன்றம் என்ற பெயரில் நண்பர்களையே நீதிமன்ற ஊழியர்கள் போல நடிக்க வைத்து நீதிமன்றம் போன்ற அலுவலகத்தை உருவாக்கி 500-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை இவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இவரது நண்பர்களே இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக நடித்துள்ளார்கள். இவர்கள்தான் சொத்து பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்களை வலை வீசி இந்த நீதிமன்றத்தில் பிரச்சினையை முடித்து கொள்ளலாம் என்று பணத்தையும் நிலத்தையும் அபகரிக்க காரணமாக இருந்தவர்கள் ஆவார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“அவர் எத்தனை வருஷம் வக்கீலாக இருந்துள்ளார்? சாமி” என்றேன் நான். “அவர் இந்தியாவில் எந்த சட்ட பட்டத்தையும் பெறவில்லை. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளதாக கூறி பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராகி உள்ளார். ஆனால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்கறிஞர் அல்ல. இவர் வழங்கிய தீர்ப்பின் மீது மேல்முறையீடு சென்ற போதுதான் உண்மையான நீதிமன்றத்தால் போலியான தீர்ப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொதுவாக, இவர் தீர்ப்பு வழங்கிய விட்டு இருதரப்பையும் அழைத்து மிரட்டி பேசி பிரச்சனைகளை முடித்து விடுவார். இதனால் மேல்முறையீடுகள் இவரது தீர்ப்புகள் மீது செல்வது கிடையாது. ஏற்கனவே மோசடி வழக்கில் சிறிது காலம் சிறையில் இருந்துள்ளார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது தரமான பணியை செய்து வந்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
“சில காலத்திற்கு முன்பு குஜராத்தில் போலி சுங்கச்சாவடி நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளார்கள் அல்லவா, சாமி! என்றேன் நான். கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் ஐந்து நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் போலி சுங்கச்சாவடி நடத்தி வந்தது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உண்மையான சுங்கச்சாவடியில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதால் இந்த சுங்கச்சாவடி வழியாக கிராமத்துக்குள் சென்று, உண்மையான சுங்கச்சாவடியை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லுமாறு சாலை அமைத்து இந்த வசூலை 12 ஆண்டு காலம் நடத்தி வந்துள்ளார்கள். உண்மையான சுங்கச்சாவடியில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட மிகக்குறைவாக கட்டண வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்தி உள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஏராளமாக நிதி உதவி செய்தால் இந்த சுங்கச்சாவடி போலி அதிபர்களுக்கு உள்ளூர் மக்களும் ஆதரவாக இருந்துள்ளனர்” என்றார் வாக்காளர் சாமி.
“தமிழக செய்திகள் இல்லையா? சாமி” என்றேன் நான். “ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக தான் கிருஷ்ணகிரியில் பள்ளி ஒன்றில் என்.சி.சி-யின் போலி முகாமை நடத்தியதாக, இந்த முகாமில் கலந்து கொண்டு பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்சிசி என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படையின் சார்பில் நடப்பதாக கூறி போலி முகாமை நடத்தியது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பெயரில் போலி இணையதளம் செயல்பட்டு வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் gmckrinishagiri.org என்ற பெயரில் உள்ள போலி இணையதளத்தை நம்பி யாரும் யாரும் ஏமாற வேண்டாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
“தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வந்த ராஜசேகரன் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணத்தை பலரிடம் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தார் வாக்காளர் சாமி
“இன்று போலிகள் குறித்த வகுப்பா? சாமி என்றேன் நான். “என்னதான் வகுப்பெடுத்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகளாக, ஐபிஎஸ் அதிகாரிகளாக, அமலாக்கத்துறை அதிகாரிகளாக, வருமானவரித்துறை அதிகாரிகளாக நடித்து பணம் சம்பாதிக்கும் போலிகள் உலா வருகிறார்கள். டாக்டர்களாக, வக்கீல்களாக சிலர் நடித்து வருகிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வும் அரசின் தீவிர கண்காணிப்பும்தான் போலிகளின் வளர்ச்சியை தடுக்கவும் முற்றிலும் களை எடுக்கவும் முடியும்” என கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
எங்கே இருக்கிறார் கடவுள்? https://theconsumerpark.com/where-is-god