இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு முக்கிய பதவிகளில் நியமனங்கள் நடைபெற உள்ளன என்று தெரிவித்தீர்கள். ஆனால், பெரிதாக எதுவும் நடைபெறவில்லையே? சாமி” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்.
“கடந்த ஜூன் மாதத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (கமிஷன்) (National Human rights Commission) தலைவர் ஓய்வு பெற்ற போதிலும் இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் காலியாக இருந்த உறுப்பினர்களின் இடங்களில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. தமிழகத்தை சேர்ந்தவரும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான வி. ராமசுப்பிரமணியன் ஓரிரு தினங்களுக்கு முன்பு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை போலவே இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக பிரியங்க் கனூங்கோ மற்றும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிரியங்க் கனூங்கோ ஆவார்.” என்றார் வாக்காளர் சாமி.
“நான் கூறியபடி காலியாக உள்ள உயர் பதவிகளில் நியமனங்கள் தொடங்கிவிட்டன. இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய தகவல் ஆணையத்தில் ((கமிஷன்) (Central Information Commission) எட்டு ஆணையர் பதவிகளுக்கும் தேசிய குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் (National Child Rights Commission) பதவிகளுக்கும் புதியவர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகலாம்” என்றார் வாக்காளர் சாமி.
“தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு (Lokayuktha) தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் முடிந்து விட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் நியமிக்கப்படாததால் அந்த அமைப்பில் ஐந்தாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர் ஓய்வு தேதிக்குப் பின்னரும் புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையை மாற்றிட மாநில ஆளுநர் விரைவில் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை இன்னும் நான்கு ஐந்து நாட்களில் கூட நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான லோக் ஆயுக்தாவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர் காலதாமதம் செய்ய மாட்டார் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“மன்னித்து விடுங்கள் சாமி! நீங்கள் கூறியது போல நியமனங்கள் தொடங்கிவிட்டன என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்றேன் நான். “கேரளாவின் ஆளுநர் பீகார் மாநிலத்திற்கும் பீகார் மாநிலத்தின் ஆளுநர் கேரள மாநிலத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகத்தில் ஆளுநர் (Governor) மாற்றம் எதுவும் தற்போது இருக்காது என்றே கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“2026 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பிரதான கட்சிகளும் சிறிய கட்சிகளும் தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நடிகர் விஜயின் கட்சி உட்பட ஓரிரு கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாது என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்” என்றார் வாக்காளர் சாமி. “இவ்வாறு கூறுபவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை பார்க்கவில்லை போலும்” என்றேன் நான். “கலைஞருக்கு வராத கூட்டமா? ஆனால், அவர் எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை முதலமைச்சராக முடியவில்லை. ஆனால், அடிக்கும் காற்றின் காரணமாக கூட்டணி மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் எந்த மேகமும் நகர்ந்து கூட்டணிகள் மாறலாம்” என்றார் வாக்காளர் சாமி.
“தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ள மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) தலைவர் பதவிக்கு போதுமான விண்ணப்பங்கள் வராததால் கடந்த வாரம் மீண்டும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்திலும் தலைவரும் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படலாம். தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“பங்குச்சந்தைகளை வரைமுறைப்படுத்துவதற்காக “செபி” (SEBI – Securities and Exchange Board of India) என்ற பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான லோக்பால் (Lokpal) இந்த பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து செபி அமைப்பின் தலைவரை லோக்பால் விசாரணைக்கு அழைத்துள்ளது. டெல்லி முதல்வரை விரைவில் கைது செய்ய சதித்திட்டம் நடைபெறுவதாக டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேசரிவால் கூறியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசவருக்கு போலி ஆதார் (Adharr) தயாரித்துக் கொடுத்த 11 பேர் கும்பலை டெல்லி போலீசார் ஓரிரு நாட்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர்” என்றார் வாக்காளர் சாமி.
“போலி ஆவணங்களை உருவாக்கி வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது குறித்து ஏற்கனவே பலமுறை தாங்கள் தெரிவித்துள்ளீர்கள் சாமி! இன்று சர்வதேச செய்திகள் எதனையும் நீங்கள் கூறவில்லை சாமி! நான் ஒரு செய்தியை சொல்லுகிறேன். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்துக்கு கிரீன்லாந்து நாட்டின் அதிபர் பதிலளித்துள்ளார். அதில் கிரீன்லாந்து நாடு விற்பனைக்கு அல்ல என்று மறைமுகமாக அமெரிக்காவை சாடியுள்ளார்” என்றேன் நான். “நீயும் நன்றாக தகவல் தேடலில் உள்ளாய்” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
கட்டுரையாளர் என் சின்னச்சாமி பூங்கா இதழின் ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்