இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“அமெரிக்காவின் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்கரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில் அத்தகைய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்களை உக்கரைனுக்கு எதிராக பயன்படுத்த ரஷ்ய அதிபர் அனுமதி அளித்துள்ளார். அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச சட்டம் உள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் உலகப் போர் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்ற அறிக்கைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கிவிட்டன” என்றார் வாக்காளர் சாமி.
“அப்படியானால் மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமா? சாமி என்றேன் நான். “வரும்! ஆனால் வராது! அணு ஆயுத போர் வராமல் இருக்க அணு ஆயுத குவியலே காரணம் என்று ஏற்கனவே பூங்கா இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது ஞாபகம் உள்ளதா? என்றார் வாக்காளர் சாமி. பூங்கா இதழில் வெளியான கட்டுரை ஆசிரியரான எனக்கு ஞாபகம் இல்லாமல் போய்விடுமா? சாமி” என்றேன் நான்.
“வங்கதேசத்தின் சுதந்திரம் முதல் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வங்கதேச அரசின் ஆட்சி மாற்றம் வரை இந்தியாவுக்கு நெருக்கமாக வங்கதேசம் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது வங்கதேச பிரிவினைக்கு பின்னர் முதல் முறையாக பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்திற்கு கப்பல் சென்றுள்ளது சென்றுள்ளதை இந்தியா உற்று நோக்கி வருகிறது. பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் ஏற்பட்டுள்ள புதிய உறவு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தாலாக அமையலாம்” என்றார் வாக்காளர் சாமி.
“ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயக் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார். பாராளுமன்றத்தில் அவரது கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலாக அவரது தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மேலும், நியமன எம்பிக்களின் ஆதரவுடன் பார்த்தால் பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட இடங்களை அந்த தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதனால், அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எந்த புதிய சட்டங்களையும் இலங்கையின் அதிபராக உள்ளவரால் மேற்கொள்ள இயலும் என்ற நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவும் ஓரளவுக்கு அதிபருக்கு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது. இதனால், நிலையான அரசு இலங்கையில் அமைந்துள்ளது என்று சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி. “சாமி! உலக செய்திகள் போதும், உள்ளூர் செய்திகளுக்கு வாருங்கள்” என்றேன் நான்.
“ஓரிரு நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவு வெளியாகிவிடும். தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலில் எதிரொலிக்கும். மேலும், நடைபெற உள்ள பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கான மசோதா தாக்கல் செய்யப் போவதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தேசிய அரசியல் அனல் பறக்கும் என்று கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“திருமணங்களை பதிவு செய்வதற்கு பதிவுத்துறையின் கீழ் திருமண பதிவாளர்கள் இருக்கிறார்கள். விசாரணைக்கு பின்னர் விவாகரத்துக்கு வழங்க குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால், நோட்டரி பப்ளிக் ஆக நியமனம் செய்யப்பட்ட சிலர் திருமண ஒப்பந்தம், விவாகரத்து ஒப்பந்தம் போன்றவற்றை செய்வதை முழு நேர பணியாக வைத்துக் கொண்டு இருப்பதாக பல மாநிலங்களில் புகார் எழுந்தது. இது குறித்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் நோட்டரி பப்ளிக்களின் இந்த நடவடிக்கைகள் தவறானது என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் நோட்டரி பப்ளிக்காக நியமனம் செய்யப்பட்டவர்கள் திருமண ஒப்பந்தம், விவாகரத்து ஒப்பந்தம் போன்றவற்றை செய்யக்கூடாது என்றும் மீறி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நோட்டரி பப்ளிக் நியமனம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“அதெல்லாம் இருக்கட்டும் சாமி. நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் ஏதோ பெரிய பிரச்சனை என்று கேள்விப்பட்டேனே? அதைப்பற்றி தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றேன் நான். “எவ்வளவு முக்கியமான சங்கதிகளை கூறிக் கொண்டிருக்கிறேன். நயன்தாராவுக்கும் தனுசுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஏதோ பொதுமக்களுக்கு பெரிய ஆபத்து போலவும் இந்த பிரச்சனை ஏற்பட்டால் பொதுமக்கள் வாழவே முடியாது என்பது போலவும் இந்த கேள்வியை நீ கேட்கிறாய்” என்று கோபப்பட்டார் வாக்காளர் சாமி. “நடிகை நயன்தாரா, அவரது திருமணத்தை ஒரு குறும்படமாக எடுத்து பொதுமக்களும் ரசிகர்களும் காண வேண்டும் என்பதற்காக அவர் ஒன்றும் இலவசமாக யூடியூபில் வெளியிடவில்லை. மாறாக, கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனத்திற்கு அதனை வழங்கியுள்ளார். பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் இன்னொரு நபரின் காப்பிரைட் சொத்தாக உள்ள படத்தை ஒரு வினாடி வெளியிட்டாலும் உரிமையாளர் பணம் கேட்பது நியாயம் தானே? நயன்தாரா பக்கம் நியாயமா? தனுஷ் பக்கம் நியாயமா? என்பதை நீயே முடிவு செய்து கொள்” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.