அவமானத்தை வெகுமானமாக்கு – தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி அவர்களின் பதிவு

ஒவ்வொருவர் உள்ளும் அற்புதமான ஒரு காந்த சக்தி குடி கொண்டுள்ளது. அதை வெளிக்கொணறுகிற ஆற்றலும் திறமையும் அவரவர்களுக்குள்ளேயே கண் உறங்காது ஆணைகளுக்காக காத்து நிற்கும். ஏளனமோ, அவமானமோ, துயரமோ எதிரான விளைவுகளை சந்தித்தால் சோர்வடையலாகாது .என்ன காரணங்களால், தவறான செயல்களால், தீமைகளால், மன உளைச்சலைப் பெற்றோம் என்ற காரணத்தை. ஆராய்ந்து அறிந்து அதனை அனுபவமாக்குவதே வாழ்க்கை. நமது சோகத்தையும் பிறரது விமர்சனங்களையும் துன்பத்தையும் எதிர்கொண்டு சாதகமாக ஆக்குவதே சிறப்பு.
நம் மீது வந்து விழுகின்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும். நம் மீது வீசப்படுகின்ற விமர்சனங்களை பகுத்துப் பார்க்க வேண்டும். நியாயமற்ற விமர்சனத்தை உதாசீனப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நியாயமான விமர்சனத்திற்கு தலை வணங்கினால் வெற்றி நம் பக்கமே. சொற்களால் தாக்கப்பட்டால் கோபப்படலாகாது. காரணத்தை கண்டறிந்து செயல்பட வேண்டும். நியாயமாக தாக்கியதாக இருந்தால் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் வருத்தம் தெரிவிக்கலாம். இதில் வெட்கமோ கூச்சமோ பட தேவையில்லை . விமர்சனங்களை வரவேற்கிற பக்குவத்தை பெற்று விட்டால் நியாயம் எது என்பதை நம்மால் உணர முடியும்.
பிறரைக் குறை கூறுபவர்கள், கேலியாக பேசுபவர்கள், கிளிப்பிள்ளை போல இழித்தும் பழித்தும் பேசுவதையும் வாடிக்கையாக் கொண்ட வாத நோய் காரர்களை சிலந்தி போல் சிக்கலை தந்து கொண்டிருப்பவர்களைக் கண்டால் அவர்களிடமிருந்து நம்மை துண்டித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் காற்றே நம் மீது படக்கூடாது.
நம்மைப் புகழ்வோர், இகழ்வோர், வெறுப்போர், விமர்சிப்போர், இடையறாது தொல்லை கொடுப்போர் ஆகியோரிடம் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அவமானப்படுத்தப்பட்டு ஏளனப்படுத்தப்பட்டவர்கள் சோம்பி நின்று விடுவதில்லை. உன் பல்வரிசை சீராக இல்லை என ஒதுக்கப்பட்டவர் தான் நடிகர் சிவாஜி. உன் முகத்தில் உள்ள தழும்பும் குழி விழுந்த தோற்றமும் ஒத்து வராது என அவமானப் படுத்தப்பட்டவர் தான் நகைச்சுவை நடிகர் நாகேஷ். பள்ளிப்படிப்பை படிக்க லாயக்கற்றவர்கள் என்று அனுப்பப்பட்டவர்கள்தான் தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றிஃபோர்டு, ராபர்ட் கிளைவ், ஐன்ஸ்டீன். உனக்கு நடிப்பு எல்லாம் வராது என்று திருப்பி அனுப்பப்பட்டவர் தான் சார்லி சாப்ளின். உனக்கு இலக்கணம் தெரியாது என்று அவமானப்படுத்தப்பட்டவர் தான் ரவீந்திரநாத் தாகூர். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .
விமர்சனங்கள், தாக்குதல்கள், கண்டனங்கள், பக்குவம் போதாது, வயது போதாது, பயிற்சி இல்லை, படிப்பில்லை என்பது போன்ற எத்தனையோ அவமானங்கள் வரத்தான் செய்யும். உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவரைக் கண்டு எல்லாமே ஓடிப் போகும். அவமானம், படுதோல்வி எல்லாமே உரமாகும். எப்போது நாம் விமர்சனத்திற்கும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றோமோ. அப்போதே நாம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம் என்பது உண்மை.
சின்ன பறவையை பறக்க வைத்து அரை நிமிட கதை
சின்னஞ்சிறு பறவை ஒன்று தன்னுடைய கூட்டில் இருந்து, குடும்பத்தைப் பிரிந்து வெகு தூரம் வந்து விட்டது. அந்த சிறிய பறவைக்கு சரியாக, ஒழுங்காகப் பறக்கக் கூடத் தெரியாத நிலை. சற்று முன்னர்தான், பறக்கக் கற்றுக் கொண்டது. பறவையின் கூட்டில் மற்ற பறவைகள் கவலையோடு காத்துக் கொண்டு இருந்தன.
சிறிய பறவையால், ஒரு சிறிய உயரத்துக்கு மட்டுமே பறக்க முடிந்தது. சற்று நேரத்தில், இரண்டு பறவைகள் சிறிய பறவைக்கு அருகில் வந்தன. சிறிய பறவை முதலில் பயந்தாலும், அவர்கள் நம்மை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நினைத்தது. சிறிய பறவை, “நான் எனது கூட்டுக்குச் செல்லும் வழியை மறந்து விட்டேன். இருட்டுவதற்கு முன் கூட்டுக்குப் போய்ச் சேர வேண்டும். எனக்கோ எப்படிப் பறப்பது, என்பது தெரியாத நிலைமை. எனது குடும்பத்தார் கவலையோடு இருப்பார்கள். உங்களால் எனக்கு பறக்க சொல்லித் தர இயலுமா?“ என்று கேட்டது.
அதில் ஒரு பறவை, “நாங்கள் எங்கே வேண்டும் என்றாலும் பறந்து போக முடியும்”என்று கிண்டலாகக் கூறிவிட்டு விதவிதமாகப் பறந்து காட்டியது. இவ்வாறாகப் பறந்து காட்டிவிட்டுத் திரும்ப வரும்போது, சிறிய பறவை அங்கே இல்லை. அங்கிருந்த தன் உடன் வந்த பறவையிடம், “சிறிய பறவை, பறந்து போய் விட்டது, இல்லையா?” என்று மகிழ்ச்சியில் முகம் ஒளிரக் கேட்டது. என்றது அந்தப் பறவை, “சிறிய பறவை, பறந்து போய் விட்டது. ஆனால் நீ ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்? நீயோ, சிறிய பறவையிடம் வேடிக்கை அல்லவா செய்து கொண்டு இருந்தாய்?” என்று கேட்டது உடன் வந்த பறவை.
“நீ என்னுடைய எதிர்மறையை மட்டும் கவனித்தாய். ஆனால், சிறிய பறவை என்னுடைய எதிர்மறைக்கு குறைந்த அளவு கவனமும், என்னுடைய நேர்மறைக்கு அதிக அளவு கவனமும் கொடுத்தது. அதாவது சிறிய பறவை எனது கிண்டல்களைத் தவிர்த்து விட்டு, எனது பறக்கும் முறையில் கவனம் செலுத்தியது. தன்னைப் பறப்பதற்குத் தயார் செய்தது; பறந்து சென்றது” என்றது அந்தப் பறவை.
“நீ சிறிய பறவைக்குப் பறப்பதற்கு சொல்லிக் கொடுக்க விரும்பினாய் என்றால், ஏன் கிண்டலும், கேலியும் செய்து கொண்டு இருந்தாய்?” என்றது உடன் வந்த பறவை. “சிறிய பறவைக்கு, நான் ஒரு அந்நியன். நான் அதற்கு நேரடியாகப் பறப்பதற்குக் கற்றுக் கொடுத்தால்,அது வாழ்க்கை முழுவதும், என்னைச் சார்ந்தே அடிமையாக இருக்கும். தானாகவே பறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளாது. சிறிய பறவையின் பேரார்வத்தை நான் பார்த்தேன். அதற்கு சிறிது திசை காட்டுவது மட்டுமே தேவையாக இருந்தது. அதை அந்தப் பறவை அறியாதவாறு கொடுத்தேன். தொடர்ந்து தான் போய் சேர வேண்டிய இடம் சென்று அடையும் நிலை பெற்றது” என்றது அந்தப் பறவை.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நமது வெகுமதியை, பொருள் சார்ந்தவற்றால் அளவீடு செய்யக்கூடாது. நாம் மற்றவருக்கு உதவி செய்து, எப்படி அவர் லட்சியத்தை அடைந்திடச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. சில நேரங்களில் அங்கே தேவையானது சிறிய உந்து சக்தியும், ஊக்கமும்தான்!