இருண்டதெல்லாம் பேய் ஒரு ஊர்ல ரெண்டு திருடனுங்க இருந்தானுங்க. ஒருநாள் பெரிய மாம்பழ தோட்டத்துல திருடிட்டு இருக்குறப்போ அந்த தோட்டத்தோட முதலாளி அங்க வந்துட்டு இருக்குறத பார்க்குறானுங்க. இவனுங்க மாம்பழங்களை திருடுறத அந்த முதலாளியும் பார்த்துட்டு அவங்கள துரத்துறாரு.
“அசிங்கமா கெட்ட வார்த்தைங்கள சொல்லி திட்டிட்டு துரத்த” இவனுங்க வேகமா ஓடிட்டே இருக்கானுங்க. ரெண்டு பேரும் தூரமா ஒரு சுடுகாடு இருக்குறத பார்த்துட்டு அதுக்குள்ளபோயிட்டா தப்பிச்சிரலாம்னு நெனச்சு அங்க போறானுங்க. கதவு மூடி இருக்குறத பார்த்ததும், உடனே ரெண்டு பேரும் சுவர் எகிறி
குதிச்சு உள்ள போறானுங்க. அப்போ ரெண்டு மாம்பழம் அந்த கதவுக்கு பக்கத்துல கீழே விழுந்துடுது. உள்ள ஓடி போன இவனுங்க ஒரு கல்லறைக்கு பின்னாடி மறைஞ்சிட்டு திருடிட்டு வந்தத சரியா பங்கு போட ஆரம்பிக்குறானுங்க. “ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்குனு”.
ஒரு குடிகாரன் அந்த சுடுகாட்டுக்கு பக்கமா போயிட்டு இருக்குறான். அப்போ அவனுக்கு இந்த குரல் கேட்குது, ” ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்குனு “. பயந்து போன அவன் “ரெண்டு பேய்ங்கதான் செத்த பிணத்தை பங்கு போடுதுனு” நெனச்சிட்டு அங்கிருந்து வேகமா ஓடி போறான்.
தலை தெறிக்க ஓடி போனவன், ஒரு போலி சாமியார்கிட்ட இதுபோல சுடுகாட்டுல ரெண்டு பேய் பிணத்தை பங்கு போடுதுனு சொல்ல. “கவலைப்படாதே மகனே நான் வந்து பார்க்கிறேன்”னு சாமியார் சொல்றார். கூடவே துணைக்கு ஒரு நாயையும் கூட்டிட்டு போறாரு.
இப்போ மூன்று பேரும் சுடுகாட்டுல வந்து அங்க இருக்குற கதவுக்கு பக்கத்துல நிற்குறாங்க. கூட வந்த நாய் தூரத்துல ஒரு பெண் நாய் இருக்குறத உத்து பார்க்குது. இத அந்த சாமியாரும் சரி.. அந்த குடிகாரனும் கவனிக்கல. அந்த நேரத்துல திரும்பும் அந்த குரல் சத்தமா கேட்குது, “ஒண்ணு உனக்கு இன்னொன்னு எனக்குனு ” .
போலி சாமியாரும் அந்த குடிகாரனும் பயத்தோட நிற்க, திரும்ப அதே குரல் கேட்குது அது என்னனா. ” கதவுக்கு பக்கத்துல ரெண்டு இருக்கே அதையும் எடுத்துக்கலாம் ஒண்ணு உனக்கு இன்னோன்னு எனக்கு”னு. அதே நேரம் தூரத்துல வர பெண் நாய பார்த்து இந்த நாய் ஊளையிட நாய் கண்ணுக்கு பேய் தெரியும்னு நெனச்சிட்டு.. அந்த சாமியாரும் குடிகாரனும் ‘அய்யோ அம்மா’னு கத்திக்கிட்டே துண்ட காணோம் துணிய காணோம்னு தலை தெறிக்க வேகமா ஓடுறாங்க.
ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா. விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும். அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.
கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள். ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும். வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.
குறிப்பிட்ட நேரம் வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர். போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.
ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர். மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.
பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது. எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .
இளவரசனை பாராட்டிய பேரரசர் இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம். உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?
என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை, தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை. “எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது”. போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே. தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே. செய்யும் வேலையில் கவனம் வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்று இளவரசனுக்கு விடுதலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் பேரரசர்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பேய் இருக்கிறதா? என்பதை இது போன்ற கதைகள் தான் முடிவு செய்கிறதோ?. இரண்டாவது கதையில் வரும் இளவரசனின் மன உறுதி போல செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தான்.