Advertisement

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை  சரியானதா? அரசியல் தந்திரமா?

கடந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் மத்தியில் ஆளும் கட்சியால் அறுதி பெரும்பான்மை பெற இயலவில்லை. பிற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்துள்ளது. இத்தகைய நிலை ஆளும் கட்சிக்கு ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில் ஒரு சில மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை. இந்நிலையில் தற்போது மத்தியில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்தியில் ஆளும் கட்சி தலைவர்களால் எழுப்பப்படுகிறது. 

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக பதவி வைக்கும் ஒருவர் மேற்கு வங்கத்தில் வடக்கில் உள்ள எட்டு மாவட்டங்களை இணைத்து தனியாக மாநிலம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளார். இதனை எதிர்த்து மேற்குவங்க சட்டசபையில் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க தேவையில்லை என்று சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு தமிழகத்தில் உள்ள மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு மாநிலம் என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் “சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரித்தால் ஒரு மாநிலத்திற்கு ஒரு ரூ 15,000 கோடி மட்டுமல்ல ரூ 20,000 கோடியாக கூட நிதியைப் பெற்றுத் தருவோம்” என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட மத்தியில் ஆளும் கட்சி வெற்றி பெறாததால் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய ஆளும் கட்சி தலைவர்கள் முன் வைக்கிறார்களா? என்பதை கவனிக்க வேண்டியதாக உள்ளது.

கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. மொழிவாரி மாநிலக் கொள்கை தேசத்தின் கூட்டாட்சிக்கு சிறந்தது என்ற கருத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பஞ்சாபி மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் வாழும் பகுதி பஞ்சாப் மாநிலமாகவும் குஜராத்தி மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் வாழும் பகுதி குஜராத் மாநிலமாகவும் பிகாரி மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் வாழும் பகுதி பீகார் மாநிலமாகவும் வங்காளி மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் வாழும் பகுதி மேற்கு வங்காளமாகவும் இருந்து வருகிறது. இதைப் போலவே அஸ்ஸாம், ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அசாமி, ஒடிசா, மராத்தி மொழிகளை தாய் மொழிகளாக கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

மிகப்பெரிய மாநிலங்களாக உள்ளதால் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுவதாக கூறி கடந்த 2000 ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலமும் மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலமும் பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலமும் உருவாக்கப்பட்டது. மக்களிடையே பிரிவினை கோரிக்கை அதிகரித்ததால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்தியில் ஆளும் அரசியல் கட்சியின் தலைவர்கள் பேசும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் நிர்வாக வசதிக்காகவா? அல்லது ஒரே மாநிலமாக இருந்தால் மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் ஆளும் மத்தியில் ஆளும் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதாலா? என்பதற்கான பதிலை மக்கள் அறிந்தே உள்ளார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்களில் மக்கள் ஒரே மொழியை தாய்மொழியாக கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த கூடும். மொழிவாரி மாநில கொள்கைக்கு எதிராக ஒரே மொழி பேசும் மாநிலங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து மாநிலங்களாக அமைப்பது என்பது மொழி உணர்வை மறக்க செய்வதற்கான நடவடிக்கைகளாக அமையும். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மொழி என்ற கொள்கையை திணிப்பதற்கு எளிதான வழியாக மாநிலங்களை பிரிப்பது என்ற கொள்கையை சிலர் முன்வைக்கக் கூடும். 

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களை போன்ற சிறிய பகுதிகளை கூட மாநிலங்களாக மாற்றியமைப்பதன் மூலம் மாநிலங்கள் நகராட்சி போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் மாநிலங்களுக்கான சுயாட்சி, மாநிலங்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்கு உள்ளாகும் இந்தியா என்ற தேசம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையால் கட்டப்பட்டுள்ளது. இதனை மாற்றி இந்தியாவுக்கு ஒவ்வாத ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் நடவடிக்கையில் ஒன்றாகவே மாநிலங்களை பிரிக்கும் கொள்கை அமையும்.  இதனால் மாநிலங்களை மீண்டும் மீண்டும் பிரிப்பது என்பது தேவையில்லை. மீண்டும் ஒரு மாநிலத்தை பிரித்தால் பல மாநிலங்களில் மாநிலக் கோரிக்கைகள் எழுவதோடு மக்களிடையே பிரிவினைவாதம் தோன்றும் என்பதை மறுக்க இயலாது. அரசியல் லாபங்களுக்காக மாநில பிரிவினை கோரிக்கைகளை முன் வைக்க வேண்டாம் என்று மக்கள் அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

(பூங்கா இதழில் வெளியாகும் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் கட்டுரை ஆசிரியர்களின் அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்து  சுதந்திரத்தின்படியான சொந்த அபிப்பிராயங்கள் ஆகும் – பூங்கா இதழ் ஆசிரியர்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles