புரோ நோட்டு எழுதி கடன் வாங்குவதும் சொத்தை அடமானம் வைத்து பதிவு ஆவணம் செய்து கொடுத்து கடன் வாங்குவதும் காலம் காலமாக இருந்து வரக்கூடிய பழக்கமாகும். சில நேரங்களில் கடன் கொடுத்தவர் அந்த புரோ நோட்டு கடனை அல்லது அடமானமாக பெற்ற சொத்துக்கு கொடுத்த கடனை வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கடன் கணக்கின் உரிமையை மாற்றி (made over) கடனை வசூலிக்கும் உரிமையை வேறு நபர்களுக்கு வழங்குவதும் வழக்கமாக இருக்கக்கூடிய பழக்கமாகும்.
கடனை பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்தாத போது கடன் கொடுத்தவர் அல்லது கடன் கணக்கை மாற்றி பெற்றவர் கடன் பெற்றவரின் மீதும் அவரது சொத்துக்களின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பதும் வழக்கமாக உள்ள நடைமுறையாகும். வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கடன் ஒப்பந்தப்படி தகுந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்த தவறினால் கடன் பெற்றவர்கள் மீதும் அவர்கள் சொத்துக்கள் மீதும் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கையை மேற்கொள்வது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொதுவான நடைமுறையாக இருந்து வந்தது இதில் தற்போது பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தவணை தவறும் கடன்களை வசூலிப்பதற்காக வங்கிகளுக்கு உதவ கடந்த 2002 ஆம் ஆண்டு சர்ப்பசி சட்டம் (SARFAESI Act: Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act)என்பது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கும் கடன்தாரர்கள் வங்கிக்கு பணத்தை செலுத்த தவறினால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நேரடியாக அடமானமாக பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய இந்த சட்டம் வங்கிகளுக்கு வழி வகுத்தது. விவசாய நிலங்கள் மீதான கடன்கள் ஒரு லட்சத்துக்கும் குறைவான கடன்கள் கடன் தொகையில் 80 சதவீதம் திரும்ப செலுத்தப்பட்ட கடன் கணக்குகள் ஆகியவற்றின் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்தச் சட்டத்தின் கீழ் அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி பதிவு செய்யப்பட்டு இயங்க வழி வகுக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை இந்த நிறுவனங்களை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நெறிப்படுத்துகிறது.
அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களின் வேலை என்னவெனில் வங்கிகளில் வராக கடனாக உள்ள கடன் கணக்குகளை வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. பின்னர் கடன் வாங்கியவர்களிடம் தொடர்பு கொண்டு சட்டப்படி பணத்தை வசூலிக்கிறார்கள் வேறு வார்த்தைகளில் சொல்லுவதில் கடன் செலுத்தாத கடன் கணக்குகளை வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றன.
இந்த நிறுவனங்களால் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நேரடியாக தொலைபேசியில் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளப்படுகிறார்கள் அவர்களுடைய பாணியில் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். தங்களது கணக்கு இந்த நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது என்ற தகவல் கூட வங்கியால் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. இவ்வாறு வசூல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்போது வங்கிகளுக்கு சென்று அவர்கள் கேட்டாலும் வங்கியில் தங்களுக்கு தெரியாது என்ற பதிலையே தெரிவிக்கின்றனர். இந்த நிறுவனங்களிடம் கடன் பெற்ற வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கடன் கணக்கை கேட்க கேட்டுப் பெற முடிகிறதா? என்பதும் தெரியவில்லை.
வங்கிகளில் கடன் வாங்கி உள்ளீர்களா? வாங்க போகிறீர்களா? கவனமாக இருங்கள். வங்கியில் கடன் கணக்குகளை விற்பனை செய்தால் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட கடன்தாரருக்கு அறிவிப்பு அனுப்பலாமே!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்வி கடன் பெற்றுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடன் வங்கியில் கடனை செலுத்தி விட்டார். ஆனால், வங்கி வழக்கை வாபஸ் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல் இதுபோன்ற வசூல் நிறுவனங்களுக்கு கடனை விற்று கடன் கணக்கை விற்று விட்டது. இதன் பின்பு பாதிக்கப்பட்டவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.