சுகாதாரம் தொடர்பான பணிகளை புரியும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகளை கையாளுபர்கள் ஆகியோர்களை நெறிப்படுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம், பல் மருத்துவ கவுன்சில், இந்திய செவிலியர் கவுன்சில், பார்மசி கவுன்சில் ஆகிய செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான தொழில்களை புரிபவர்களை வரைமுறைபடுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஆணைய சட்டம் (National Commission for Allied and Healthcare Professions (NCAHP) Act, 2021 இயற்றப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வாழ்க்கை அறிவியல் தொடர்பான மையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நிபுணர்கள், ட்ராமா, பர்ன் கேர் மற்றும் சர்ஜிகல்/அனெஸ்தீசியா தொடர்பான தொழில்நுட்ப நிபுணர்கள், பிசியோதெரபி நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், அக்குபேஷனல் தெரபி நிபுணர்கள், சமூக பராமரிப்பு, நடத்தை சுகாதார அறிவியல் மற்றும் பிற வல்லுநர்கள், மருத்துவ கதிரியக்கவியல், இமேஜிங் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் மருத்துவ அசோசியேட்ஸ் மற்றும் சுகாதார தகவல் மேலாண்மை மற்றும் சுகாதார தகவல் வல்லுநர் ஆகியோரின் பணிகளை நெறிப்படுத்துவது சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஆணைய சட்டத்தின் நோக்கமாகும்.
மக்களுக்கு மருத்துவம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், சுகாதாரம் தொடர்பான எந்த ஒரு நெறிமுறை அமைப்புகளுக்குள்ளும் வராத சுகாதாரம் தொடர்பான தொழில்களை புரிபவர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தாதது ஆச்சரியம் அளிக்கிறது.
சட்டத்தில் கூறப்படும் தேசிய ஆணையம் முழுமையான பணிகளை தொடங்கியதாக தெரியவில்லை. இதை போலவே இந்த சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரம் தொடர்பான தொழில் புரிபவர்களுக்கு கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும் இதுவரை 14 மாநிலங்கள் மட்டுமே இத்தகைய கவுன்சில்களை அமைத்துள்ளன. இவையும் சரிவர செயல்படுவதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த 12 ஆகஸ்ட் 2024 அன்று கவலை தெரிவித்தது.
எந்த ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுகாதாரம் தொடர்பான பணிகளை புரியும் வல்லுனர்களை நெறிப்படுத்தவும் சட்டவிரோதமாக இத்தகைய பணிகள் புரிவதை தடுக்கவும் சுகாதாரம் தொடர்பான சட்ட விரோத கல்வி நிலையங்கள் செயல்படுவதை தடுக்கவும் இயற்றப்பட்ட சட்டத்தை மூன்றாண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் இருந்து வருகின்றன என்றும் இது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டான நிலையிலும் தேவையான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இரண்டு வாரங்களுக்குள் மாநிலத்தில் உள்ள சுகாதார துறைகளின் செயலாளர்களை அழைத்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தி சட்டத்தை அமல் படுத்துவதற்கான வழிவகைகளை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 12 ஆகஸ்ட் 2024 அன்று உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. மருத்துவம் தொடர்பான தொழில் புரிவோர்களுக்கு மாநில கவுன்சிலை இரண்டு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவது ஏன் காலதாமதம் செய்யப்படுகிறது? என தெரியவில்லை. இந்த சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.