1960- களில் இந்தியாவில் மிகப் பெரிய உணவுப் பொருள் உற்பத்தி குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. உற்பத்தி செய்த விளைபொருளுக்கு உற்பத்திக்கு செலவு செய்த தொகை அளவில் கூட பொருள்களை விற்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை என்று விவசாயிகள் தரப்பில் எழுந்த கருத்தையும் அரசு ஆய்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, விவசாயம் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Prices -MSP) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இது கொள்முதல் விலை மற்றும் வெளியீட்டு விலையில் இருந்து வேறுபட்டது. கரும்புக்கு நியாயமான மற்றும் ஊதிய விலையை (Fair and Remunerative Price -FRP) ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.
விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவின் காரணமாக கடந்த 1965 ஆம் ஆண்டு விவசாய விலை ஆணையம் (Agricultural Price Commission – APC) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பானது கடந்த 1985 ஆம் ஆண்டில் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையமாக (Commission for Agricultural Costs and Prices – CACP) மறுசீரமைக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளும் மாநில அரசின் அமைப்புகளும் இணைந்து விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை கணக்கிட பல்வேறு காரணிகளை விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் ஆய்வு செய்கிறது. இருந்த போதும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான கொள்கை ஆவணங்களின் நோக்கம் பல தருணங்களில் தெளிவாக இருப்பதில்லை. இருப்பினும், விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து வழங்கப்படும் அனைத்து பரிந்துரைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சில நேரங்களில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது.
விவசாயிகள் மத்தியில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் நிலவவில்லை. 2013 புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள கிராமப்புற விவசாயக் குடும்பங்களில் உள்ள விவசாயிகளில் 23% பேர் மட்டுமே பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி அறிந்திருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி கரும்புக்கான நியாயமான மற்றும் ஊதிய விலை உள்பட மொத்தம் 23 விளைபொருட்கள் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விவசாயம் உற்பத்தி பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதோடு தொடர்ந்து விவசாயத்தை காக்கவும் (Protect Agriculture) உணவு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இயலும் (Agricultural Food Production) என்பது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உணவு இல்லாமல் உலகில் ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பட்டினி சாவடைகிறார்கள் (hungry death) என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. அத்தியாவசிய உணவு தானியங்களின் (essential commodities) விலை கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்பு பெருமளவு உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் மக்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வருமானம் உயரவில்லை என்பது நாட்டின் தனி மனிதர்களின் சராசரி வருமானத்தின் (average income) மூலம் உணர முடிகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அவசியமான உணவு பிரச்சனைகளை சமாளிக்க அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுகளை விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதே பொருட்களுக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பது நியாயமானது அல்ல என்றும் விவசாய பொருட்களின் ஆதரவு விலையை கூட்டி வழங்கினால் விவசாய உணவு பொருள்களின் விலை சந்தையில் உயரத்தான் செய்யும் என்றும் கருதுவது கருத்தியல் ரீதியாக ஏற்புடையது அல்ல.
விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை விலைக்கு வாங்கும் உள்ளூர் வியாபாரி (local businessman) அவருக்கு ஒரு லாப தொகையை சேர்த்து மொத்த வியாபாரிகளுக்கு (wholesale procurement) விற்பனை செய்கிறார். மொத்த வியாபாரிகள் தங்களுக்கு என ஒரு லாபத்தை நிர்ணயம் செய்து வெளிச்சந்தையில் பொருட்களை விற்கும் மொத்த வியாபாரிகளுக்கு (wholesalers) விற்பனை செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு லாபத்தை சேர்த்து அதே பொருளை சில்லரை விற்பனையாளர்களுக்கு (retail sellers) விற்பனை செய்கிறார்கள். சந்தையில் பொதுமக்களிடம் இதே பொருட்களை விற்கும் சில்லரை விற்பனையாளர்கள் தங்களுக்கான லாபத்தையும் சேர்த்து வைக்க வேண்டியதாக உள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருள்கள் பல இடைத்தரகர்கள் மூலமாக சந்தைக்கு வருவதால் விவசாயிக்கு வழங்கப்பட்ட விலைக்கும் சந்தையில் அதே பொருள் கிடைக்கும் விலைக்கும் மிகுந்த வித்தியாசம் உருவாகிறது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் விவசாய உற்பத்தியாளர்கள் – உணவுப்பொருள் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கத்தை அமைத்து இந்த சங்கங்கள் மூலமாக மட்டுமே விவசாயிகளிடமிருந்து உற்பத்தி பொருட்களை வாங்கி இத்தகைய கூட்டுறவு சங்க நேரடி விற்பனை மையங்கள் மூலமாக மட்டுமே அனைத்து ஊர்களிலும் உணவு தானிய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் முற்றிலும் களையப்படுவார்கள். இதன் மூலம் விவசாயிக்கும் அதிகபட்ச ஆதரவு விலையை அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு வழங்கவும் பொது மக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் உணவு தானியங்களை வழங்கவும் இயலும். இத்தகைய அமைப்பு முறை உருவாக வேண்டும் என்பதே பலரின் கனவாகும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து
விவசாய உற்பத்தியாளர்கள் – உணவுப்பொருள் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கம் மூலமே விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குதல் நுகர்வோரிடம் விற்றல் என்ற நிலை ஏற்பட்டால் விவசாய உற்பத்தியாளர்கள் – உணவுப்பொருள் நுகர்வோர்கள் கூட்டுறவு மூலம் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மையும் படித்த இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு ஏற்படுவதோடு குறிப்பிட்ட வியாபாரிகளிடம் லாபக் குவியல் ஏற்படுவதும் தடுக்கப்படும்!
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!