Advertisement

குட்டி தீவில் இந்தியா ரகசிய ராணுவ தளத்தை அமைகிறதா? உண்மைதானா?

அமைவிடம்

இந்திய பெருங்கடலில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டுள்ள அகலேகா தீவுகள் (Agaléga) மொரிசியஸ் நாட்டுக்கு சொந்தமானவை.  மொரிசியஸ் பிரதமர் அலுவலகத்தின் வெளித் தீவுகளின் மேம்பாட்டு குழுமத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அகலேகா தீவுகள் மொரிசியசிற்கு வடக்கே 650 மைல் தொலைவில் உள்ளது. 

பரப்பளவு

6,400 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட அகலகா தீவுகளில் வடக்கு தீவு 12.5 கிலோமீட்டர் நீளமும் தெற்குத் தீவு 1.5 கிலோமீட்டர் நீளமும் உள்ளதாகும். 2023 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புபடி அகலேகா தீவுகளின் மொத்த மக்கள் தொகை 330 மட்டுமே. இங்குள்ள மக்கள் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர். இந்த தீவுகளின் தலைமையமாக விங்ட்-சின்க் என்ற கிராமம் உள்ளது. அகலேகா தீவுகள் மீன்பிடி தொழில், தேங்காய் தொடர்பான தொழிற்சாலைகள் மற்றும் வண்ணப் பல்லி இனங்களுக்கு பெயர் பெற்றது. 

ஒப்பந்தம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் 29 பிப்ரவரி 2024 அன்று, அகலேகாவின் வடக்கு தீவில் 3,000 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடு தளம் மற்றும் செயிண்ட் ஜேம்ஸ் படகுத் தளம் அமைக்க  ஒப்பந்தங்களில் கையொப்பம் செய்தனர். கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு

இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  லட்சத்தீவுகளில் ஐஎன்எஸ் த்வீப்ராக்ஷக், ஐஎன்எஸ் ஜடாயு ஆகிய இரண்டு கடல் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் மொரிசியஸ் தீவில் உள்ள அகலகா தீவுகளின் மேம்பாட்டுக்கு இந்தியா செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சவுத் ஆசியின் வாய்ஸ் என்ற இணையதளம் தெரிவிக்கிறது.

பிபிசி செய்தி

அகலேகா தீவுகள் முழு அளவிலான ராணுவ தளமாக மாறக்கூடும் என அகலேகா தீவை சேர்ந்த சிலர் அச்சத்தில் உள்ளனர் என்று பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குத் தீவின் மையத்தில், வடக்கில் லா ஃபோர்ச்சே மற்றும் தெற்கில் விங்-சிங்க் ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கி, பனை மர வரிசைகளுக்கு நடுவே ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கட்டடம் இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி ஆய்வாளரான சாமுவேல் பேஷ்ஃபீல்ட் தெரிவித்ததாக பிபிசி செய்தி கூறுகிறது.

பி-81 விமானம் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்கும் கடல்வழி தகவல் தொடர்புகளை கண்காணிப்பதற்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஆகும். விமான ஓடுதளத்தில் அந்த விமானம் இருப்பதை தீவுவாசிகள் ஏற்கனவே படம் எடுத்துள்ளனர். வடமேற்கில் புதிய கப்பல் துறை அமைந்துள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்களுக்காகவும் அகலேகாவுக்கு சரக்குகளை கொண்டு வரும் கப்பல்களுக்காகவும் அது பயன்படுத்தப்படலாம் என்று பேஷ்ஃபீல்ட் தெரிவித்ததாக பிபிசி செய்தி கூறுகிறது. “இந்தியர்களுக்கு மட்டுமேயான முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அது மாறும்,” என ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் அகலேகா’ எனும் சங்கத்தின் தலைவர் லாவல் சூப்ரமணியென் (Laval Soopramanien) தெரிவிப்பதாக பிபிசி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.

டியகோ கார்சியா ராணுவ தளம்

மொரீஷியஸின் கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர்.  1965-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட சாகோஸ் தீவில் பெரிய தீவு டியகோ கார்சியா. (Diego Garcia) இங்கிலாந்தின் அனுமதியைப் பெற்று இந்த தீவில் அமெரிக்கா தகவல் தொடர்பு நிலையத்தை அமைத்தது. பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது.

செய்தித் தொடர்பாளர்

அகலேகா தீவுகளில் இருந்து யாரையும் வெளியேறுமாறு கூற மாட்டோம் என்றும் உள்ளூர் மக்கள் விமான நிலையம் மற்றும் துறைமுக பகுதிக்குள் நுழைவது மட்டும் தடுக்கப்படும் என்றும் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை நாட்டுக்கு உதவும் என்றும் மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக பிபிசி தெரிவிக்கிறது. 

பூங்கா இதழ் கருத்து

இந்த தளத்தை “கண்காணிப்பு நிலையம்” என்றும் மொரீஷியஸின் மற்ற இடங்களில் உள்ள, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாதனத்தை ஒத்த கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பும் அதில் இருக்கலாம் என்றும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிராட்டஜிக் ஸ்டடீஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளதும் இந்த தளத்தை ராணுவ பயன்பாட்டு தளமாக அல்லாமல், திறனை மேம்படுத்தும் ஒன்றாக இரு தரப்பும் பார்க்க விரும்புவதாக, லண்டன் கிங்ஸ் காலேஜின் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் தெரிவித்துள்ளதும் உண்மையை படம் பிடித்து காட்டுவதாகும். இந்தியாவும் மொரிசியசும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு நாடுகளாக விளங்குகின்றன. இந்நிலையில் இரண்டு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவது சரியானது அல்ல.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles