தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுகின்றனவா?
தமிழக முதல்வரின் தலைமையில் நடைபெறும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவிற்கு சென்னை வருகிறார் பாஜகவின் மூத்த தலைவரும் பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங். இந்த விழாவிற்கு பாஜகவின் மாநில தலைவரை தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்ததை ஏற்று விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திராவிட சித்தாந்தம் பிளவை ஏற்படுத்தக் கூடியது என சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பேசிய நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்தனர். ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. மாறாக, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த சுதந்திர தின ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் முக்கிய அமைச்சர்களுடன் கலந்து கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்றதை தொடர்ந்து கட்சியின் அமைப்பை வலுப்படுத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் அதன் தலைவர் தொல். திருமாவளவன். இந்நிலையில் தமிழகத்தில் தலித் ஒருவரால் முதலமைச்சராக முடியாது என இவர் கருத்து தெரிவித்திருந்தார். தலித்துகள் எங்களை ஆதரித்தால் பாட்டாளி மக்கள் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். அவ்வாறு ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வன்னியர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாயம் என்பதைப் போலவே தலித்துகள் தமிழகத்தில் மிகப்பெரிய சமூகத் தொகுப்பு என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சியையும் பிடிக்கவும் முடியும் – தலித் ஒருவரை முதலமைச்சராகவும் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 -ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில் 200 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வியூகங்களை திமுக அமைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தங்களது தலைமையிலான அணியில் ஓரிரு கட்சிகளை கொண்டுவர தமிழக வெற்றிக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. நாம் தமிழகம் கட்சியின் தலைவர் சீமான் எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. வழக்கம் போல தனித்துப் போட்டியா? அல்லது கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்பதை காலம் விரைவில் சொல்லும்.
விஜயகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதும் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய முடிவை எடுக்கும் என்பதை தேர்தல் நாள் அறிவிக்கப்படும் வரை தெரிந்து கொள்ள இயலாது. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றவர்களின் கட்சிகளின் சத்தம் தற்போது காணவில்லை. தேர்தலுக்கு முன் இவை எப்படி பிரதிபலிக்கும் என்பது தெரியாது.
தற்போது நிலவும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாற்றம் கண்டுள்ளனவா? என யோசிக்க வைப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எவ்வாறு இருப்பினும் 2026 தமிழக சட்டமன்ற களத்தில் திமுக, அஇஅதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு தலைமைகளில் நான்கு கூட்டணிகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எந்த எந்த கூட்டணியில் எந்த எந்த கட்சிகளோ?
கடந்த ஏழு நாட்கள் (11-18 ஆகஸ்ட் 2024)- செய்திகளும் கோணங்களும்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்திற்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு 18, 25 செப்டம்பர், 01 அக்டோபர் ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவும் 04 அக்டோபர் அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதைப்போலவே, ஹரியானா மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
கடந்த வாரத்தில் நமது பூங்கா இதழில் மத்திய தகவல் ஆணையத்தில் எட்டு தகவல் ஆணையர் பதவிகள் காலியாக உள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்செய்தியின் எதிரொலியாக அல்லது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக மத்திய அரசு மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள எட்டு தகவல் ஆணையர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளது. |
பல மாதங்களாக காலியாக இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக அரசு பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரபாகர் அவர்களை தமிழக அரசின் பரிந்துரைப்படி தமிழக ஆளுநர் நியமனம் செய்துள்ளார். |
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பில் நீதித்துறை உறுப்பினர் பதவிக்கான காலியிடத்திற்கு தமிழக முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு கடந்து 2003 ஆம் ஆண்டு தேர்வு செய்து அவரை நியமிக்குமாறு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறான பரிந்துரை செய்யப்பட்ட பல மாதங்கள் கழித்து சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக முன்னாள் நீதிபதி கண்ணம்மா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்திற்கான தேர்தலில் 727 நீதிபதிகள் வாக்களித்து உள்ளார்கள். இதில் 435 வாக்குகளை பெற்ற பா. உ. செம்மல் தலைவராகவும் மாவட்ட நீதிபதி பிரிவில் 572 வாக்குகளைப் பெற்ற டி. பாலு துணை தலைவராகவும் மூத்த சிவில் நீதிபதிகள் பிரிவில் 300 வாக்குகளை பெற்ற ஏ. பசும்பொன் சண்முகையா துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 424 வாக்குகளைப் பெற்ற என். சுரேஷ் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் 202 வாக்குகளை பெற்ற எம். சர்காரியா பானு இணைச் செயலாளராகவும் 456 வாக்குகளை பெற்ற ஆர். சரவண பாபு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று சமூக ஊடகத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. |
சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் பட்டியல் வெளியிடுகிறது. அதன்படி நிகழாண்டு தரவரிசை பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. |
தென் மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் 21 ஏப்ரல் 2021 முதல் 30 ஜூன் 2024 வரை 25,775 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. பொதுவாக, தென் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவுகளில், சென்னையில் இருப்பதுபோல உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் சென்னைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் வழங்கி, மற்ற மாவட்டங்களை, குறிப்பாக தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. போதுமான வசதிகள் இல்லாமல் தரமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. சென்னையில் இருப்பதுபோல, தென் மாவட்ட விசாரணை அமைப்புகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் இருப்பதை உள்துறைச் செயலரும், டிஜிபியும் உறுதிசெய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த வாரத்தில் தெரிவித்துள்ளது.. |
ஒடிசாவின் கட்டாக் நகரில் சுதந்திர தின நிகழ்ச்சியில் ஒடிசாவின் துணை முதல்வர் பிரவதி பரிதா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் துணியில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் தினங்களில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும்” என தெரிவித்தார். இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருக்கிறது. தற்போது ஒடிசாவும் இதில் மூன்றாவது மாநிலமாக இணைந்துள்ளது. கென்யாவின் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாடு இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாதவிடாய் காலத்தில் உலகெங்கும் உள்ள பெண்கள் அனுபவிக்கும் உடல்வலி பற்றியும், மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கோரியும், ஒடிசாவைச் சேர்ந்த ரஞ்ஜிதா பிரியதர்ஷினி சிறுமி குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியா சுமார் ரூ.23,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 85 சதவீதம் எரிபொருள் சார்ந்த பொருட்களே உள்ளன. |
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர்கல்வி மற்றும் வேலைக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 14 லட்சம் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக யுனெஸ்கோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. |
முக்கிய செய்திகளின் தொகுப்பு – பல்கீஸ் பீவி. மு & கே. ஸ்ரீ நித்யா, நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் – பயிற்சி கட்டுரையாளர்கள்/ நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்
Both contents are Informative and well
structured.The news contents are neat and crisp for reading. Nice .Keep going 👍