அமலில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை முற்றிலும் நீக்கப்பட்டு இந்த மூன்று சட்டங்களுக்கும் மாற்றாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் கடந்த 2024 ஜூலை முதல் தேதியில் அமலுக்கு வருவதாக இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. புதிய குற்றவியல் சட்டங்களானது மக்கள் விரோத சட்டங்களாகவும் சுதந்திரமான நீதித்துறைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன எனக் கூறி தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் தன்னிச்சையான அமைப்புகள் ஆகும். மாநில அளவில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation) மற்றும் தமிழகம் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Committee) என்ற இரண்டு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் செயல்படும் தனித்தனியான வழக்கறிஞர் சங்கங்களில் பல சங்கங்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பிலும் பல சங்கங்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவிடம் குழுவிலும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை மாநில அளவில் செயல்படும் வழக்கறிஞர் அமைப்புகள் இரண்டும் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களை தவிர பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் அதனை ஏற்று போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் ஒரே பிரச்சனைக்காக கூட்டமைப்பு தனியாகவும் கூட்டுக் குழு தனியாகவும் போராட்டங்களை அறிவித்து நீதிமன்ற புறக்கணிப்புகளை நடத்துகின்றன.
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி மாநில அளவிலான இரண்டு வழக்கறிஞர் அமைப்புகளும் சட்டம் அமலுக்கு வந்த 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஜூலை மாத இறுதி தேதி வரை வழக்கறிஞர்களை பணியில் இருந்து விலகி இருக்கச் செய்து நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். மேலும், இரண்டு அமைப்புகளும் தனித்தனியாக புது தில்லியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பானது போராட்டத்தை விலக்கிக் கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்வது என்ற முடிவை முதலாவதாக எடுத்தது. இதன்பின்னர் கடந்த மூன்றாம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுவின் பொது குழுவில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பது என்றும் இம்மாத இறுதியில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவது என்றும் தேசிய அளவில் வழக்கறிஞர் சங்கங்களின் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுகள் காரணமாக பல வழக்கறிஞர் சங்கங்களிலும் பல வழக்கறிஞர்கள் இடையேயும் கருத்து வேறுபாடுகள் தோன்றி உள்ளன. ஒரு மாத காலமாக நீதிமன்றங்களுக்கு செல்லாததால் ஏற்பட்ட வருமான இழப்பு என்பது ஒரு புறம் இருக்க நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வராததால் வழக்குகளை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் ஒருதலை பட்சமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ஆகியவற்றை சரி செய்ய மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது வழக்கறிஞர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் மட்டும் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு போராட்டம் நடத்தினால் வெற்றி பெற போவதில்லை என்ற நிலை இருந்தும் வழக்கறிஞர் சங்கங்களின் மாநில அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது சரியல்ல என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்த போது 28 மாநிலங்களில் பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் வெற்றி பெற்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன. இதைப்போல போராட்டத்தை முன்னெடுத்து சொல்வதில் தமிழகம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இத்தகைய கருத்து மோதல்கள் வருங்காலத்தில் வழக்கறிஞர்களின் ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக அமைந்து விடக்கூடாது என்ற கருத்தில் பலர் இருக்கிறார்கள்.
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டம் வெற்றி பெற்று தந்திருக்கிறதா? என்றால் இல்லை என எவராலும் கூற முடியும். ஆனால், போராட்டம் தோல்வி அடைந்திருக்கிறது என்று கூற முடியுமா? இந்திய சுதந்திரப் போராட்டம் நூற்றாண்டுகள் கழித்து வெற்றி பெற்றது. போராட்டத்தை 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் என வர்ணிக்கப்படும் முதலாவது சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதாக ஆதரவு இல்லை. தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு விடுதலைப் போராட்டத்தில் தொடக்க காலத்தில் இல்லை. தேசிய அளவிலான தலைமையும் விடுதலைப் போராட்ட காலத்தின் தொடக்கத்தில் இல்லை. தேசிய அளவிலான ஒருங்கிணைப்பும் தலைமையும் ஏற்பட்டு நாடு முழுவதும் விடுதலை போராட்டம் பரவியதன் காரணமாகவே 100 ஆண்டுகள் கழித்து இந்தியா இங்கிலாந்து இடமிருந்து விடுதலை பெற்றது. எந்த ஒரு போராட்டத்தின் வெற்றியும் எளிதல்ல. ஆனால், இயலாததும் அல்ல. போராட்டத்தால் வெற்றி கிடைக்காத போது ஒற்றுமைக்கு பல அச்சுறுத்தல்கள் ஏற்படுவது இயல்பானது. மாநில அளவில் செயல்படும் வழக்கறிஞர் அமைப்புகள் வழக்கறிஞர்கள் ஒற்றுமையை சிதறவிடாமல் கட்டிக் காப்பது இந்த நேரத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது. சுருங்கக் கூறின், வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று கூறிவிட முடியாது. சில படிப்பினைகளை இந்த போராட்டம் வழக்கறிஞர்களுக்கு வழங்கி உள்ளது.
முதலாவதாக, தற்போதைய அத்தியாவசியமான தேவை என்னவெனில் தமிழகத்தில் செயல்படும் வழக்கறிஞர்களுக்கான இரண்டு மாநில அமைப்புகளும் உடனடியாக ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதை விடுத்து ஒருங்கிணைப்பு குழு மூலமாக மாநில முழுவதும் ஒரே மாதிரியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு முதல் கட்டமாக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவும் கூட்டு மாநாடு ஒன்றை நடத்தலாம்.
இரண்டாவதாக, ஒவ்வொரு சங்கத்திலும் ஜனநாயக பண்புகள் பின்பற்றப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால்தான் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். அசாதாரண சூழ்நிலையை தவிர மற்ற நேரங்களில் மாநில வழக்கறிஞர்கள் அமைப்புகள் தங்களிடம் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் அழைக்காவிட்டாலும் இணையதளம் மூலமாக கூட்டங்களை நடத்தி விவாதித்து பெரும்பான்மை அடிப்படையில் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை கொண்ட கூட்டுக்குழு மாநில வழக்கறிஞர் அமைப்புகளில் ஆலோசனை அமைப்பாக ஏற்படுத்தப்படலாம்.
நான்காவதாக, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கவில்லையா? என்பதை பார்க்கும்போது அவ்வாறான மனநிலை இருந்தாலும் தமிழகம் மற்றும் டெல்லியை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மாநில அளவிலான வழக்கறிஞர்கள் சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில வழக்கறிஞர்கள் அமைப்பை ஏற்படுத்தவும் தேசிய அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தவும் தமிழக மாநில வழக்கறிஞர்கள் அமைப்புகள் உடனடியாக முயற்சிக்க வேண்டும். முதல் கட்டமாக தென்னிந்தியாவில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களின் அமைப்பை உருவாக்கவும் தென்னிந்திய வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக, சட்டக் கல்வியில் தேவையான சீரமைப்புகள், வழக்கறிஞர் தொழிலில் நேர்மையான ஒழுக்க முறைகள் ஆகியவற்றிற்காகவும் வழக்கறிஞர் சங்கங்கள் பாடுபட வேண்டிய தருணம் தற்போது அவசியமானதாக உருவாகியுள்ளது. அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் உதவித்தொகை, நடுத்தர வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வது, மூத்த வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்றால் ஓய்வு கால பயன்கள் என்பவை சாத்தியமானவையே. அவற்றை சிந்தித்து திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே வழக்கறிஞர்கள் தொழில் மரபுகளை பின்பற்றி பணியாற்றுவதில் உறுதித் தன்மை ஏற்படும். இத்தகைய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (social security schemes) பல்வேறு நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.
நடந்து முடிந்துள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகள் மூலமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கண்ட ஐந்து அம்சங்கள் ஆகும். இந்த ஐந்து நடவடிக்கைகளையும் யார் மேற்கொள்வது? என்று பார்த்தால் வழக்கறிஞர் சங்கங்களின் மாநில அமைப்புகள் தங்களது அமைப்பில் உள்ள வழக்கறிஞர் சங்கங்களை அழைத்து குழுக்களை அமைத்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைகள் வரும் போது மட்டும் போராட்டம் நடத்துவது என்ற மனநிலையை தவிர்த்து எப்போதும் விழிப்புடன்! எப்போதும் ஒற்றுமையுடன்! என்ற முழக்கங்களுடன் பயணிக்க தவறினால் எதிர்காலத்தில் வழக்கறிஞர்களின் ஒற்றுமை என்பதும் கேள்விக்குறியாவதோடு சுதந்திரமான நீதித்துறைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக அமையும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.