ஒருவர் இலக்கை தீர்மானித்து திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தும் போது எதிர்கொள்ளும் பாதையில் தென்படும் ஒவ்வொரு அம்சத்திலும் அடையாளம் காண்பது என்பது முக்கியமான திறனாகும். அடையாளம் காணும் திறன் திட்டத்துக்கான முடிவுகளை மேற்கொள்வதற்கும் திட்டத்தை செயல்படுத்தும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அகற்றுவதற்கும் மிக உபயோகமானதாகும்.
ஒரு மருத்துவரின் வெற்றி என்பது தன்னிடம் வரக்கூடிய நோயாளிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது? என்பதை அடையாளம் காண்பதில் அவருக்கு உள்ள திறமையாகும். சரியான பிரச்சனையை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் நோயை குணமடைய செய்ய இயலாது. தம்மை அணுகக்கூடிய கட்சிக்காரருக்கு எத்தகைய பிரச்சினை உள்ளது? என்பதையும் அதற்கு எத்தகைய சட்டபூர்வமான தீர்வை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதையும் சரியாக அடையாளம் கண்டு பணியாற்றினால் தான் எந்த ஒரு வழக்கறிஞரும் வெற்றியாளராக முடியும். இதைப் போலவே, நோய்வாய்படுபவர் சரியான மருத்துவரை அடையாளம் அடையாளம் கண்டால் மட்டுமே. சட்டப் பிரச்சனைகளை சந்திப்பவர் சரியான வழக்கறிஞரை அடையாளம் கண்டால் மட்டுமே பிரச்சனைகளை வெல்ல முடியும்.
வீட்டுக்கான மளிகை பொருட்கள் வாங்குவதில் தொடங்கி விமானம் வாங்குவது வரை சரியான விற்பனையாளர் யார்? என அடையாளம் கண்டு பொருட்களை வாங்கினால்தான் நுகர்வோருக்கு பயனுள்ளதாக அமையும். தலை முடி வெட்டுதல், துணி தைத்தல், வங்கியை தேர்வு செய்தல், ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு பாலிசிகளை பெறுதல் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளை பெறும் போதும் சரியான சேவை வழங்குபவரை அடையாளம் காண்பது அவசியமானதாகும்.
அனைத்து பாடங்களிலும் மிக அதிகமான மதிப்பெண்களை பெறுகின்ற ஒரு மாணவர் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களை பெறுகிறார் என்ற நிலையில் மாணவனின் பிரச்சனை என்ன? என்பதை அடையாளம் கண்டு போதிப்பவரே சிறந்த ஆசிரியர் ஆவார். தம்மால் ஏன் அதிக மதிப்பெண்களை பெற இயலவில்லை? என்பதை யோசித்து பிரச்சனையை அடையாளம் கண்டு அந்தப் பிரச்சினையை போக்குவதற்கான வழிமுறைகளை கையாளும் மாணவரே வெற்றி பெற முடியும். அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதும் ஒருவர் பத்து முறை முயற்சி செய்து விட்டேன், வெற்றி பெற இயலவில்லை என வருத்தப்படுகிறார். எவ்வாறு முயற்சித்தீர்கள் என்றால் பத்து முறையும் ஒரே மாதிரியாகவே செயல்பட்டதாக தெரிவிக்கிறார். ஒருமுறை தோல்வி அடைந்தவுடன் தோல்விக்கான காரணங்கள் என்ன? என்பதை அடையாளம் கண்டு அவற்றை போக்க சரியான நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதால்தான் அவரால் வெற்றியை பெற முடியவில்லை.
ஒரு சிறிய வணிகத்தை நல்ல முறையில் திட்டமிட்டு தொடங்கினேன். வெற்றி பெற இயலவில்லை. ஆனால், இதே திட்டத்தை கொண்ட வணிகத்தில் மற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என தொழில் முனைவோர் ஒருவர் தெரிவிக்கிறார். இதன்படி பார்த்தால் திட்டத்தில் அல்ல பிரச்சனை. திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகளின் காரணமாகவே இந்த தொழில் முனைவரால் வெற்றியை காண இயலவில்லை. நடைமுறைகளில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை வென்றால் வெற்றியை அவரால் நிச்சயம் பெற இயலும்.
ஒரு கட்டுரையை எழுத முயற்சித்தேன். சரியான தலைப்பை தலைப்பை தேர்ந்தெடுத்து தரவுகளை சேகரித்தேன். ஆனால், அதனை எழுதுவது எளிதாக அமையவில்லை என ஒருவர் தெரிவிக்கிறார் எந்த ஒரு வேலையும் எளிதாக அமைவதில்லை. எளிதாக வேலையை செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் கண்டால் முடியாது என பலராலும் கூறப்படும் வேலைகளை கூட முடித்துக் காட்டலாம்.
அடையாளம் காண்பது எளிதல்ல. ஆனால், அடையாளம் காண்பது இயலாததும் அல்ல. வாழ்க்கையில் அடையாளம் காணும் திறனை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கட்டுரையை ஓரிரு முறை திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். இந்த கட்டுரையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் வெவ்வேறு விதமான சிந்தனைகள் உங்களுக்கு மனதில் தோன்றுவதோடு இந்த கட்டுரையின் அவசியத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அடையாளம் காணுதலுக்கு தேவையான பண்பு ஆய்ந்தறியும் திறனாகும்.
தொடர்புடைய கட்டுரைகளின் லிங்க் கீழே உள்ளது.
வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது https://theconsumerpark.com/way-to-success |