மனித உரிமைகள்
கடந்த 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஐந்து உறுப்பினர்களும் இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமைப்பாகவும் மனித உரிமை கண்காணிப்பகமாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி கடந்த 02 ஜூன் 2024 அன்று ஓய்வு பெற்ற பின்னர் உறுப்பினராக இருந்து வந்த திருமதி விஜய பாரதி சயானி பொறுப்பு தலைவராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார். தற்போது இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போது 5163 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தகவல் ஆணையம்
வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக தகவல் உரிமைச் சட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டப்படி அமைக்கப்பட்ட தேசிய அளவிலான மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையரும் பத்து தகவல் ஆணையர்களும் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியில் உள்ளார்கள். தேசிய அளவிலான ஆணையத்தில் எட்டு தகவல் ஆணையர்களுக்கான பதவிகள் காலியாக உள்ளன. மத்திய தகவல் ஆணையத்தில் 22,849 புகார்களும் மேல்முறையீடுகளும் நிலுவையில் இருந்து வருகின்றன.
குழந்தைகள் உரிமைகள்
கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஒரு தலைவரும் ஆறு உறுப்பினர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியா முழுவதும் குழந்தை உரிமை மீறல்கள் குறித்த புகார்களை விசாரிப்பது, குழந்தை உரிமை பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல பணிகள் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள். இந்த ஆணையத்தின் கல்வி, இளையோர் நீதி, குழந்தைகள் உளவியல் அல்லது சமூகவியல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்ற பிரிவுகளின் கீழ் நான்கு உறுப்பினர்களுக்கான பதவிகள் காலியாக உள்ளன.
பிற்படுத்தப்பட்டோர்
தேசம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக செயல்படும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசியலமைப்பு அந்தஸ்து பெற்றதாகும். இதில் ஒரு தலைவரும் ஒரு துணைத் தலைவரும் மூன்று உறுப்பினர்களும் இருக்க வேண்டும். இந்நிலையில் இந்த ஆணையத்தில் தலைவர் மட்டும் பணியில் இருந்து வருகிறார். துணை தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கான பதவிகள் காலியிடமாக உள்ளன.
லோக்பால்
லோக்பால் அமைப்பானது இந்தியாவில் ஊழலை ஒழிக்கவும் தூய்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பில் ஒரு தலைவரையும் எட்டு உறுப்பினர்களையும் நியமனம் செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது. தற்போது இந்த அமைப்பில் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளார்கள்.
காலியிடங்கள்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு உறுப்பினர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இதை போலவே தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.
உயர்ந்த நோக்கங்களுக்காகவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக தேசிய அளவிலான அமைப்புகளை பாராளுமன்றம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இத்தகைய உயர் அமைப்புகளில் தலைமை பதவிகள் காலியாக இருந்தால் இந்த அமைப்புகள் திறம்பட செயல்படுவது சிக்கலானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். காலியாக உள்ள உயர் அமைப்புகளின் தலைமை பதவிகளில் தகுந்த நபர்களை விரைவில் மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கட்டுரையில் உள்ள காலி பணியிட விவரங்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் இணையதள பக்கங்களில் நேற்று திரட்டப்பட்டதாகும்.