Advertisement

“இந்தியா” கூட்டணி சேர்ந்துள்ள அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகள் உறுப்பினராக உள்ள சங்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இதைப் போலவே ஒவ்வொரு நாடும்  பொருளாதார வளர்ச்சிக்காக அல்லது அறிவியல் வளர்ச்சிக்காக அல்லது ராணுவ  மேம்பாட்டுக்காக   சில சங்கங்களில், அதாவது கூட்டணிகளில், உறுப்பினராக இருந்து வருகிறது. இத்தகைய நாடுகளின் கூட்டணிகள் பல இயங்கி வருகின்றன.

1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மேற்குலகில் நேட்டோ (NATO – North Atlantic Treaty Organization) என்ற பெயரில் சில நாடுகள் ராணுவ கூட்டணி ஒன்றை அமைத்தன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 32 நாடுகள் தற்போது உள்ளன. இந்த ஆண்டு இந்தக் கூட்டணியில் ஸ்வீடன் இணைந்து இருக்கிறது. நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்ட சில வருடங்களில், 1955 ஆம் ஆண்டு, முன்னாள் சோவியத் ரஷ்யாவின் முயற்சியால் வர்ஷா ஒப்பந்த நாடுகள் என்ற பெயரில் ராணுவ கூட்டணி தொடங்கப்பட்டது.  இந்த கூட்டணி சோவியத் ரஷ்யாவின் மறைவுக்கு பின்னர் கலைக்கப்பட்டு விட்டது. 

உலகில் வளரும் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஜி-20 என்ற நாடுகளின் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த அமைப்பின் தலைமை என்பது ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வழங்கப்பட்ட அடிப்படையில் கடந்த ஆண்டு இந்தியா இந்த அமைப்புக்கு தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. ஜி-20 அமைப்பை போன்றே ரஷ்யா, சைனா போன்ற நாடுகள் முன்னின்று செயல்படும் சங்காய் ஒப்பந்த நாடுகள் அமைப்பிலும் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. 

ஒவ்வொரு நாட்டின் வெளியுறவுத் துறையும் பிற நாடுகளில் உள்ள அரசுகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.  இதே போலவே வெளியுறவுத் துறையின் மற்றொரு முக்கியமான பணி நாடுகள் அமைத்துள்ள பிராந்திய அல்லது வேறு நோக்கத்துக்கான கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகும். 

பிராந்திய அளவில் தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டணியாக விளங்கும் விளங்கும் சார்க் (SAARC – South Asian Association of Reginal Co-operation)) அமைப்பு ஏற்பட இந்தியா முக்கிய காரணமாக இருந்தது. கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சார்க் அமைப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், நேபால் மற்றும் பூட்டான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் நேபாளத்தின் தலைநகர் காத்மெண்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

பிராந்திய அளவில் வங்காள விரிகுடா நாடுகளின் அமைப்பை ஏற்படுத்துவதிலும் இந்தியா முக்கிய பங்காற்றியது. பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC: The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) நாடுகள் எனும் அமைப்பானது கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்த பிம்ஸ்டடெக் அமைப்பில் பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. 

பிம்ஸ்டெக் நாடுகளின் அமைப்பிற்கு உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் தலைமை பதவியை வகிக்கின்றன.  சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் தலைமையில் இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.  வரும் அக்டோபர் மாதத்தில் தாய்லாந்தில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. தெற்காசியாவில் பதட்டத்தை குறைக்கவும் அண்டை நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்தி அமைதியை நிலவச் செய்யவும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இந்திய அரசின் தலையாயப் பணிகளில் ஒன்றாகும்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles