Advertisement

வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது – வெற்றியைத் தரும் நேர்மறை அணுகுமுறை

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு கண்ணும், ஒரு காலும்தான் இருந்தன. இந்தக் குறைபாடுகள் இருந்தும், அவர் ஒரு திறமையான, இரக்கமான, புத்திசாலித்தனமான அரசராக ஆட்சி புரிந்தார். அந்த அரசரது ஆட்சியின் கீழ் அவரது மக்கள் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அரசர் தன் அரண்மனை நடை கூடத்தின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். திடீரென்று, சுவரில் மாட்டி இருந்த படங்களின் மீது அவரது பார்வை விழுந்தது. அவை அவரது முன்னோர்களின் படங்கள் ஆகும். தன்னைப் போல, தனக்குப் பின் வருகின்ற சந்ததியினர்களும் இதே போல் நடக்கும் போது, தம் முன்னோர்களின் படங்களைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இந்த அரசரது படம் இதுவரை அங்கு போடப்படவில்லை.

அவரது குறைபாடுகளால்,  அதாவது ஒரு கண், ஒரு கால் இல்லாத குறைபாடுள்ள அவரது உருவத்தைப் போடுவது பற்றி அரசர் தயக்கத்தோடு இருந்தார். ஆனால் அன்று தன்னுடைய படத்தையும் போட வேண்டும் என்று, ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார்.  அடுத்த நாள் அந்த நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் அனைவரையும் தன் அவைக்கு வரவழைத்தார். அரண்மனை சுவரில் என்னுடைய அழகான படத்தை போட வேண்டும்.   அதை நீங்கள் யாராவது வரைந்து தர வேண்டும் என்று அறிவித்தார். உங்களில் யாரால் வரைய முடியுமோ அவர்கள் முன்னால் வாருங்கள் என்றார்.    நன்றாக வரைபவருக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும்.

அங்கு வந்திருந்த அனைவருமே திறமையான ஓவியர்கள்தான்.  ஒரு கண், ஒரு கால் இல்லாத அரசரை எப்படி அழகாக வரைய முடியும்? அந்தப் படம், எப்படி அழகாக இருக்க முடியும்? நாம் நன்றாக வரையா விட்டால்,  அரசரின் தண்டனைக்கு ஆளாவோம் என்று பயந்தார்கள். இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்ததால் யாருமே முன்னால் வரவில்லை. யாருக்குமே தைரியம் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைக் கூறி, அமைதியாக மன்னிப்புக் கேட்டு, அறையை விட்டு வெளியேறினார்கள்.

ஒரே ஒரு இளம் வயது ஓவியன் போகாமல் நின்றான். அரசர் அவனிடம், “நீ என்னுடைய படத்தை வரைய தயாராக இருக்கிறாயா?” என்று கேட்டார். அந்த இளம் ஓவியர் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாளே அவர் அரசரின் படத்தை வரைய ஆரம்பித்தார். சில நாள்களுக்குப் பிறகு அரசரது படம் தயாராகி விட்டது. அரசரின் படத்தைத் திறந்து வைப்பதற்கான நாள் வந்தது. அனைவரையும் அரசர் அவைக்கு வரவழைத்தார். படத்தை வரைய மறுத்த அனைத்து ஓவியர்களும் அங்கு இருந்தார்கள். அனைவரும் அரசரின் படத்தைக் காண்பதற்கு, ஆவலாக இருந்தனர்.

அரசரது படம் திறக்கப் பட்ட போது, அரசர் உட்பட அனைவரது கண்களும் ஆச்சரியத்தால் விரிவடைந்தன.    அந்த ஓவியம் மிகவும் அழகாக இருந்தது. அந்தப் படத்தில் மன்னர் ஒரு குதிரையின் மேல் தன் கால்களை இரு பக்கத்திலும் போட்டபடி அமர்ந்து இருந்தார். படத்தில் அரசரது ஒரு கால் மட்டுமே ஒரு பக்கத்தில் இருப்பது போல வரையப்பட்டு இருந்தது. அவரது குதிரையின் மீது இருந்து கொண்டு, அம்பை  குறிபார்த்து எய்துவதற்கு முயற்சி செய்வது போல் படம் வரையப்பட்டு இருந்தது.

அம்பைக் குறிபார்க்கும் போது, ஒரு கண் மூடியபடியே இருக்க வேண்டும். கண் குறைபாடும், கால் குறைபாடும் மிக புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டு, ஓவியர் படத்தை மிக அழகாக வரைந்து இருந்தார். அரசர் படத்தைப் பார்த்து மிகவும் திருப்தி அடைந்தார். தனது குறைபாடுகளை மறைத்து விவேகத்தோடு ஓவியர் அழகாக வரைந்ததைப் பார்த்து மகிழ்ந்தார். ஓவியருக்கு வெகுமதிகள் வழங்கி, தன் அவையில் தலைமை ஓவியராக பதவி வகிக்கும்படி செய்தார்.

ஒவ்வொருவரிடமும் கணக்கில் அடங்காத திறமைகள் இருக்கின்றன. அந்த திறமைகளை, வெளிப்படுத்துவதற்கு நேர்மறையான மனோபாவமும்,  அன்பான நோக்கமும் தேவைப் படுகின்றன. நேர்மறையான அணுகுமுறை இருக்கும் போது, எல்லாவிதமான கடினமான சூழ்நிலைகளையும்  இலகுவாகத் தீர்த்து விடலாம்.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles