Advertisement

பெங்களூர் – மதுரை வந்தே பாரத் ரயிலின் இயக்கம் – மதுரை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்களின் மூன்று கேள்விகள்

பெங்களூருக்கும் மதுரைக்கும் இடையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை இயக்க சோதனை ஓட்டம் நடத்தி முடித்து இருக்கிறது இந்திய ரயில்வே துறை. இந்த ரயிலானது மதுரையில் கிளம்பி திண்டுக்கல்  வழியாக திருச்சி சென்று அங்கிருந்து கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் என ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொலைதூரப் பயணங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி அதிவிரைவு ரயில்களில் பயணிக்கிறார்கள். இந்நிலையில் இயக்கப்படவுள்ள வந்தே பாரத்   அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர் வழியாக பெங்களூர் செல்வதற்கு பதிலாக மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்து திண்டுக்கல் இருந்து கிழக்கு நோக்கி திருச்சிக்குச் சென்று திருச்சியிலிருந்து மீண்டும் மேற்கு நோக்கி கரூர் வந்து பெங்களூருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் போலவே மறு மார்க்கத்திலும் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

திண்டுக்கல்லுக்கும் கரூருக்கும் இடையே உள்ள ரயில் பயண தூரம் 74 கிலோ மீட்டர். அதே சமயம் ரயிலில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து கரூருக்கு வரும்போது ரயில் பயண தூரம் 174 கிலோ மீட்டர். மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையில் நேரடியாக இல்லாமல் சுற்று வழியில் திருச்சி வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் மதுரை திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்கும் பயணிகள் 100 கிலோ மீட்டர் தூரத்தை கூடுதலாக பயணிக்க வேண்டும்.  இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு கூடுதல் நேரமும் பணமும் வீணாகிறது. 

(1) இந்த சூழலில் மதுரைக்கும் பெங்களூருக்கும் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை திருச்சி வழியாக இயக்காமல் கரூரில் இருந்து திண்டுக்கல் வழியாக நேரடியாக இயக்க வேண்டும் என பொதுமக்களிடையே எழுந்துள்ள  கோரிக்கை நியாயமானதாக கருதப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் மக்களின் விருப்பத்திற்கு இணங்க சுற்றுவழி பாதையை தவிர்த்து நேரடியாக ரயிலை இயக்க முன்வருமா?

(2) பெங்களூருக்கும் திருச்சிக்கும் இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக்க விரும்பினால் ரயில்வே நிர்வாகம் ஏன் இந்த நகரங்களுக்கிடையே தனியாக வந்த ரயில் ஒன்றை இயக்கக் கூடாது?

(3) மதுரை – பெங்களூர் இடையே இயக்க உள்ள வந்தே பாரத் ரயிலில் திண்டுக்கல், நாமக்கல் போன்ற நகரங்களில் நிறுத்தமில்லை என்ற செய்திகள் வெளி வருகின்றன. நாமக்கல் முட்டை, லாரி தொழில்களின் மையமாக அகில இந்திய அளவில் விளங்குவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பள்ளிகள் உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பயணிக்கிறார்கள். இவற்றை மனதில் கொண்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் உத்தேசித்துள்ள ரயிலில் ஏன் நாமக்கல், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நிறுத்தம் வழங்கக் கூடாது?

பொதுமக்களின் விருப்பங்களை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்!

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles