நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் மத்திய அரசை அமைக்க தேவையான 273 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி 240 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அறுதி பெரும்பான்மை ஆதரவை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கட்சி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை விட சொற்ப இடங்களை குறைவாக பாரதிய ஜனதா கட்சி பெற்ற போது, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் கட்சிகளின் அரசுகள் கவிழ்ந்த வரலாறும் பாரதிய ஜனதா கட்சி மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை இணைத்து ஆட்சி அமைத்த வரலாறும் நினைவு கூறத்தக்கது.
கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எதிர் கட்சிகள் கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த போது கட்சி பிளவு அல்லது கட்சி தாவல் அல்லது எம். எல். ஏ., பதவியில் இருந்து ராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அக்கட்சிக்கு ஆதரவளித்தல் போன்ற மூன்று வகையான அரசியல் நகர்வுகள் மூலம் மாநில அரசுகள் மாற்றப்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது. இதனை ஆபரேஷன் லோட்டஸ் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வர்ணித்துள்ளன.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு மாநிலங்களில் அரசு அமைக்க பிரயோகிக்கப்பட்ட ஆபரேஷன் லோட்டஸ் போன்ற உத்திகள் ஏதேனும் நடைபெறுமா? என்பது பலரின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மை பெறுவதற்கான சாத்திய கூறுகள் பின்வருமாறு.
(1) தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் இல்லாத பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது.
(2) இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள குறைந்த எண்ணிக்கையில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது அல்லது அத்தகைய கட்சிகளில் பிளவு ஏற்பட்டு பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது.
(3) தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்த அளவில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகளின் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது அல்லது அத்தகைய கட்சிகளில் பிளவு ஏற்பட்டு பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது.
(4) பாரதிய ஜனதா கட்சி அல்லாத கட்சியில் உள்ள பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதன் மூலம் அந்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது,
(5) இதர சாத்தியமான வழிகளில் பாராளுமன்ற மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணிக்கையை உயர்த்துவது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்றத்தின் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் ஆறு மாதங்களில் அறுதி பெரும்பான்மை பெறுமா? என்பதை யாராலும் தற்போது கணிக்க இயலாது. எவ்வாறு இருப்பினும் எல்லா அரசியல் கட்சிகளின் தலைமையும் தங்களது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி மாறுவது அல்லது கட்சி பிளவை ஏற்படுத்துவது அல்லது ராஜினாமா செய்வது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் வாக்களித்த மக்களுக்கும் வாய்ப்பு அளித்த கட்சிக்கும் துரோகமானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.