Advertisement

தமிழகத்தில் இந்தி பேசும் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதா? தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறைகிறதா? 

கடந்த மாதம் நானும் கண்ணனும் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களின் நிலை குறித்து அறிய பல இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டோம்.  இதில் ஏற்பட்ட அனுபவங்களை பார்க்கும் போது தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் (physical labour resource) குறைகிறதா? என்ற கேள்வி எங்களிடம் இருந்தது.

தமிழகத்தில் தென் மாவட்டமான தென்காசிக்கு அருகே உள்ள கடையம் என்ற பகுதியில் பல இடங்களில் செங்கல் சூளைகள் உள்ளன. அங்கு வேலை பார்க்கும் பலர் இந்தி பேசும் தொழிலாளர்களாக உள்ளனர் என்பதை நேரில் அறிய முடிந்தது. செங்கல் சூளைகளில் உரிமையாளர்களிடம் விவரம் கேட்ட போது இந்தி பேசும் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்  கொண்டால்   குறைந்த ஊதியத்தில் அதிக உடல் உழைப்பு கிடைக்கிறது.     அவர்கள் வேலைக்கு  விடுமுறை எடுத்துக் கொள்வதும் கிடையாது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்று தெரிவித்தார். இதே வேலையை தமிழ் மக்களுக்கு வழங்கலாமே என்ற கருத்தை முன் வைத்த போது  தமிழக கூலி தொழிலாளர்கள் கடின உழைப்புகளை செய்வதற்கு முன்பு போல முன் வருவதில்லை என்பதோடு அவ்வாறு வந்தாலும் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்துக் கொள்வதால் கடுமையாக தொழில் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களிலும் இந்தி பேசும் தொழிலாளர்கள் உணவகங்களில் பணியாற்றுவதை பார்க்க முடிகிறது.  பழனி, உடுமலைப்பேட்டை போன்ற நகரங்களிலும்   அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள சிறு சிறு தொழிற்சாலைகளிலும் இந்தி பேசும் தொழிலாளர்கள் பணியாற்றுவதை காண முடிகிறது.  

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள பெரும்பாலான கோழிப்பண்ணைகளில் இந்தி பேசும் தொழிலாளர்களே பணி புரிகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. இது குறித்து கோழி பண்ணை உரிமையாளர்களிடம் கேட்டபோது தங்களுக்கு தமிழக தொழிலாளர்கள், இந்தி பேசும் தொழிலாளர்கள் என்று வித்தியாசம் இல்லை என்றும் தமிழக தொழிலாளர்கள் முன்பு போல வேலைக்கு வரும்போது உடல் உழைப்பை வழங்க தயாராக இல்லை என்று குறிப்பிட்டதோடு இந்தி பேசும் தொழிலாளர்கள் இல்லையென்றால் தங்களது தொழில் முற்றிலும் நசுங்கிவிடும் என தெரிவித்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றுவதை பார்க்க முடிந்தது. தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் பின்னலாடை தொழிற்சாலைகளை பெரும்பாலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். தமிழக தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் திருப்பூரில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. பெருந்துறை போன்ற சிறு நகரங்களில் கூட இந்தி பேசுபவர்களுக்கு வாரம் ஒரு முறை தனி சந்தை நடைபெறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.

தற்போது, ஓசூரில் உள்ள பல தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் ஹிந்தி பேசும் தொழிலாளர்களாகவே தற்போது உள்ளனர். விவசாய தொழில்களிலும் தச்சு தொழில் (carperntor), வண்ணம் பூசும் தொழில் (painting) உள்ளிட்ட சிறு தொழில்களிலும் இந்தி பேசும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து இருக்கிறது. 

“தமிழகத்தில் தொழிலாளர்கள் கடின வேலைகளை செய்ய முன் வருவதில்லை வேலைக்கு வந்தாலும் வேலையில் அர்ப்பணித்து முழுமையாக பணியாற்றுவதில்லை நான்கு நாள் வேலைக்கு வந்தால் 3 நாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள் அதிக முன் பணம் கேட்கிறார்கள்   முன்பணத்தை பெற்றுக்கொண்டு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். இது போன்ற காரணங்களால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தி பேசும் தொழிலாளர்களிடம் இத்தகைய பிரச்சனைகள் இல்லை” என்று இந்தி பேசும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு சிலரோ இன்னும் ஒரு படி மேலே சென்று இந்தி பேசும் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் பல தொழில்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தமிழக உடல் உழைப்பு தொழிலாளர்களின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்தி பேசும் தொழிலாளர்களை பணிகளுக்கு அமர்த்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த சுற்றுப்பயணத்தின் போது பலரும் கருத்து தெரிவித்தனர். உடல் உழைப்பை மட்டுமே தொழிலாக கொண்டு இருந்த தமிழக மக்கள் சொந்த விவசாயம், சுய தொழில், அரசு பணி போன்றவற்றிற்கு சென்று விட்டதால் உடல் உழைப்பு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா?  என்ற கேள்வியை முன் வைக்கும் போது அப்படி எல்லாம் இல்லை உழைக்காமல் பணம் பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு சமீப ஆண்டுகளாக வளர்ந்து விட்டது என்ற பதில் கிடைக்கிறது.   

தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறைகிறதா? என்பது குறித்த ஆய்வை தமிழக அரசு உடனடியாக மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. தமிழக தொழிலாளர்களின் உடல் உழைப்பு வளம் குறையுமாயின் அவர்களது  வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும்  கண்டறிந்து சரியாக அவர்களை வழிநடத்த வேண்டியது உடனடி தேவையாகும்.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles