Advertisement

தேவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (MSME) குறைதீர் ஆணையம் 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி (MSMED) சட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களையும் (products) வழங்கும் சேவைகளையும் (services) பெறக்கூடியவர்கள்   பணம் செலுத்துவதற்கு 45 நாட்களுக்கு மேலான  காலதாமதமும் மறுப்பும் (delay and refusal) தெரிவிப்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவுடைய கூடும் என்பதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி (MSMED)  சட்டத்தில் பெசிலிடேசன் கவுன்சில் (facilitation council) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த அமைப்பானது இந்தியா முழுவதும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெசிலிடேசன் கவுன்சில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விதிகளின்படி தொழிற்சாலைகள் ஆணையர் அல்லது தொழில் மற்றும் வணிகத் துறையின் கூடுதல் ஆணையர் பெசிலிடேசன் கவுன்சிலின் தலைவராகவும் ஐந்து உறுப்பினர்களும் இந்த கவுன்சிலில் இருப்பார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதி ஒருவரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதி ஒருவரும் தொழில், நிதி, சட்டம், வணிகம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் இக்குழுவில் உறுப்பினராக இடம் பெறுகிறார்கள். இந்த கவுன்சிலின்   செயலாளராக சென்னை கவுன்சிலுக்கு தொழில் மற்றும்  வணிகத் துறையின் பிராந்திய இயக்குனரும்   கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் செயல்படும் கவுன்சில்களின் செயலாளராக மாவட்ட தொழில் மையத்தின்  பொது மேலாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

சிவில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் போலவே புகாரை பெற்று விசாரணைக்காக எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பவும் விசாரணை நடத்தவும் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவும் இந்த பெசிலிடேசன் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்பானது முழு நேர அமைப்பாக செயல்படவில்லை என்பதோடு இதில் நியமனம் செய்யப்படும் தலைவர் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் மற்ற துறைகளின் முக்கிய அலுவலர்களாக உள்ளனர். இதன் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரால் தாக்கல் செய்யப்படும் புகார்கள் மீது முடிவு மேற்கொள்ளவும் அதனை அமல்படுத்தவும் தக்க நடவடிக்கைகளை எடுப்பதும் கால தாமதமாகிறது. இந்த கவுன்சிலின் தலைவர் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு தன்னாட்சி தன்மை இல்லாத நிலையே உள்ளது ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் பணியாற்றக் கூடியவர்களாக உள்ளார்கள். மேலும், இந்த கவுன்சில்கள் பாதிக்கப்படுவோர் அணுகுவதற்கு வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இல்லாதது பெரும் குறையாக காணப்படுகிறது. இதன் காரணமாக எளிதில் அணுகும் தன்மை இல்லாமல் இந்த கவுன்சில்கள் விளங்குகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்  முனைவோரால் பொருட்கள் அல்லது சேவையை வழங்கிய (supply) பின்னர் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதற்கு பிரச்சனை ஏற்படும் போது தற்போதுள்ள கவுன்சில் முறையில் விரைவான, எளிதான தீர்வு கிடைக்க உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி சட்டத்தை திருத்தி பெலிசிலிடேஷன்  கவுன்சிலுக்கு பதிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைதீர் ஆணையத்தை (MSME disputes redressal commission) அமைக்கலாம்.   அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாமல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் போல தன்னாட்சி பெற்ற   நீதி அமைப்புகளாக செயல்படும் வகையிலும் நிரந்தர தலைவர் மற்றும் உறுப்பினர்களை இந்த ஆணையம் கொண்டிருக்கும் வகையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைதீர் ஆணையமானது அமைக்கப்பட வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறைதீர் ஆணையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும்  அமைப்பதற்கும் அதனை இயக்குவதற்கும் நிதி தேவைப்படுவதால் மாற்று ஏற்பாடாக இந்த ஆணையத்தின்  பொறுப்புக்களை கூடுதல் பொறுப்பாக (additional charge) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணம் வசூல் ஆகாமல் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உள்ளாகும்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட ஆணையங்களை அணுகுவது எளிதானதாக அமையும்.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles