Advertisement

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய் – தேவை கவனம்

புற்றுநோய் (cancer) என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் நோயாகும். டிரில்லியன் கணக்கான உயிரணுக்களால் ஆன மனித உடலில்  எங்கும் புற்றுநோய் ஏற்படலாம். இவ்வாறு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடைந்து கட்டியாக உருமாறுவதன் காரணமாக உடலின் பாகங்கள் செயல்படாத நிலையும் அசாதாரண எதிர் விளைவுகளும் ஏற்படுகின்றன. உலகின் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. 

உலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் 18 லட்சம் மக்களும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் 9,16,000 மக்களும்  கல்லீரல் புற்றுநோயால் 8,30,000 மக்களும்   வயிறு புற்றுநோயால் 7,69,000 மக்களும் மார்பக புற்றுநோயால் 6,85,000 மக்களும் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் கடந்த 1990 ஆம் ஆண்டு 18 லட்சம் மக்கள் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 3 கோடியே 26 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,000 என்று இருக்கும் நிலையில்  2025 ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியாக உயரும் என  இந்திய மருத்துவ கழகத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்தியாவில் ஏறக்குறைய 40% புற்றுநோய்கள் பரவலான புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுகின்றன. இது நுரையீரல், வாய்வழி மற்றும் தொண்டை புற்றுநோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. அதே சமயம் மோசமான உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணிகள் 10% புற்று நோய்களுக்கு காரணமாகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி மூன்று வகையான முக்கிய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. முதலாவதாக, புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு போன்றவற்றால் ஏற்படும் உடல் புற்று நோய்கள், இரண்டாவதாக, அஸ்பெஸ்டாஸ், புகையிலை புகையின் கூறுகள், ஆல்கஹால், அஃப்லாடாக்சின் (உணவு மாசுபாடு) மற்றும் ஆர்சனிக் (குடிநீர் மாசுபாடு) போன்ற இரசாயன புற்றுநோய்கள். மூன்றாவதாக,  சில வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் போன்ற உயிரியல் புற்றுநோய்கள்.

மேலே விளக்கப்பட்டுள்ள காரணங்கள் அனைத்துமே இயற்கையான  வாழ்வியல் முறையில் இருந்து செயற்கையான நுகர்வை மனிதன் மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய காரணங்களாகும்.  அதிக புகையிலை உட்கொள்ளுதல், மதுபானம் அருந்துதல்,  இயற்கையான உணவுகளை விடுத்து   ரசாயனம் மிகுதியான உணவுகளையும் மாசடைந்த குடிநீரையும் மனிதன் எடுத்துக் கொள்வதாலும் தூய்மையற்ற காற்றை சுவாசிப்பதாலும் உயரத்துக்கு ஏற்ப எடை இல்லாமல் மிகக் கூடுதலாக அல்லது குறைவாக இருப்பதாலும் ஏற்படும் உடல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.  

உடலுக்கு தேவையான நார்ச்சத்துள்ள பொருட்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை மிக குறைவாக சாப்பிடுவதாலும் தேவையான உடற்பயிற்சி இல்லாத நிலையிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மிக குறைவாகவே உள்ளன. இந்த சிகிச்சைக்கு ஏற்படும் செலவும் மிக மிக அதிகமாக உள்ளது. புற்றுநோயின் தொடக்க நிலையிலே கண்டறிந்து (early detection) தகுந்த சிகிச்சை வழங்கி நோயை அகற்றுவதால் அமெரிக்காவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் முன்பு இருந்ததை விட குறைக்கப்பட்டுள்ளது.   இதைப்போலவே, இந்தியாவிலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின்  ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்க மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். வருமுன் காப்போம் ! வளமோடு வாழ்வோம்!!

Related Articles

1 COMMENT

  1. ஏன், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்கள் தனியாக பிரிக்க வில்லையா?
    தமிழ்நாட்டில் இரண்டு உயர்நீதிமன்றம் இல்லையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles