Advertisement

லஞ்சத்துக்கு எதிரான தேசிய அமைப்பான லோக்பாலில் புகார் செய்வது எப்படி?

கடந்த 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேசிய அளவில் லஞ்சத்துக்கு எதிரான அமைப்பாக லோக்பால் அமைக்கப்பட்டது. லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் நியமனம் செய்யப்படுகிறார். லஞ்ச ஒழிப்பு, பொது நிர்வாகம், நிதி, சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் 25 ஆண்டு கால அனுபவம் பெற்ற நிபுணர்களும் லோக்பாலின் தலைவராக நியமிக்கப்படலாம்.

உறுப்பினர்கள்

இந்த அமைப்பில் நான்கு நீதி துறை சார்ந்த உறுப்பினர்களும் (judicial members) நான்கு நீதித்துறை சாராத உறுப்பினர்களும் (non-judicial members) உள்ளார்கள். லோக்பாலின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் ஆவார்கள். லோக்பாலின் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்  லஞ்ச ஒழிப்பு, பொது நிர்வாகம், நிதி, சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் 25 ஆண்டு கால அனுபவம் பெற்ற நிபுணர்கள் ஆவார்கள்.

அமைப்பு

லோக்பால் நிர்வாகப் பிரிவின் தலைவராக இந்திய அரசின் செயலாளர் அந்தஸ்திலான அலுவலர் செயல்படுகிறார். இந்த பிரிவில் விசாரணை (inquiry), புலனாய்வு (investigation),  குற்றம் சாட்டும் (prosecution) உட்பிரிவுகள் உள்ளன இந்த உட்பிரிவுகளுக்கு இந்திய அரசின் கூடுதல் செயலாளர் அந்தஸ்துக்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  லோக்பால் நீதித்துறை பிரிவில் லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் நீதித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  

பிரதமரையும் விசாரிக்கலாம்

பிரதம அமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அலுவலர் முதல் கடை நிலை ஊழியர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது. இதனைத் தவிர மத்திய அரசின் வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் அமைப்புகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளையும் வெளிநாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கு மேல் நிதி உதவி பெறும் சங்கங்கள் அல்லது   அறக்கட்டளைகள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது.

புகார் செய்யும் முறை

லோக்பால் அமைப்பில் புகார் செய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ள மாதிரியில் புகார் இருக்க வேண்டும். இந்த மாதிரி புகார் லோக்பால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பில் சமர்ப்பிக்கப்படும் புகார் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் கீழ் ஒரு பொது ஊழியருக்கு எதிரான குற்றத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். புகார்களை லோக்பால் அமைப்பிற்கு அஞ்சல் மூலம் அல்லது   கூரியர் மூலம் அல்லது இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.  இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் அசல் புகாரை பதினைந்து நாட்களுக்குள் லோக்பால் அமைப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்தகைய புகார்களை யார் வேண்டுமானாலும் லோக்பால் அமைப்பில் சமர்ப்பிக்கலாம்.  

லோக்பால் அமைப்பின் முகவரி: Lokpal of India, 6, Phase II, Institutional Area, Vasant Kunj, New Delhi-110070. அஞ்சல் உறையின் மீது “லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 கீழ் லோக்பாலுக்கு சமர்ப்பிக்கப்படும் புகார்” என எழுதப்பட வேண்டும்.

விசாரணை

லோக்பால் அமைப்பில்   சமர்ப்பிக்கப்படும் புகார்கள் மீது ஆரம்ப நிலை விசாரணை (preliminary inquiry) நடத்துமாறு லோக்பால் விசாரணை பிரிவிற்கு அல்லது வேறு அரசு அமைப்பிற்கு அல்லது சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு   உத்தரவிடும் அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது. இத்தகைய அறிக்கையை சமர்ப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பொது ஊழியரிடமிருந்தும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்பின் தகுதி வாய்ந்த அலுவலரிடம் இருந்தும் (competent authority)  விசாரணை அமைப்பால் விளக்கம் கேட்கப்படுகிறது. முதல் நிலை விசாரணை அறிக்கையை விசாரணை அமைப்புகள் 60 நாட்களுக்குள் லோக்பால் அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் நிலை விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் விசாரணை அமைப்பால் சமர்ப்பிக்கப்படும்   அறிக்கைகளை லோக்பால் அமைப்பு பரிசீலனை செய்கிறது. இதன் பின்பு தேவைப்பட்டால் முழுமையான விசாரணைக்கு (full investigation) அல்லது அரசு துறை   விசாரணைக்கு (departmental inquiry) உத்தரவிடப்படுகிறது. முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்குகளில் குற்ற பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை அமைப்பிற்கு லோக்பால் உத்தரவுடுகிறது. முழு விசாரணை தேவையில்லை என கருதப்படும் வழக்குகளில் புகார் முடித்து வைக்கப்படுகிறது. உண்மைக்கு புறம்பான புகார்களை   தாக்கல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

லஞ்சம் மற்றும் ஊழலற்ற சமுதாயமே வளர்ச்சி அடையும் என்றால் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  லோக்பால் அமைக்கப்பட்டு   ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles