ஹோட்டலில் ரூம் தரவில்லை என்பதற்காக இந்தியா முழுவதும் ஹோட்டல்களை கட்டியவரை குறித்து தெரியுமா?
ஒரு நாள் கடும் மழையில், சாலையில் பேருந்து நிறுத்தும் இடத்தில், ஒரு மூதாட்டி குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர கார் அந்த பேருந்து நிறுத்தும் இடத்தின் ஓரமாக நின்றது. காரில் இருந்த இளைஞர் கண்ணாடியை இறக்கி “அம்மா நீங்க எங்க போகனும்” என்றார். அந்த மூதாட்டியோ, “நான் ரொம்ப தூரம் போகனும் உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம். நான் பஸ் புடிச்சி போயிடறேன்”.
“மழையால் நகரம் முழுவதும் போக்குவரத்து முடங்கி போயிடுத்து. நீங்க எவ்ளோ நேரம் இங்க நின்னாலும் பஸ் வராது. வாடகை ஆட்டோ அல்லது கார் பிடித்துப் போனால்தான் உண்டு” என்றார் அந்த காரில் இருந்தவர். “அதுக்கு என் கைல காசு இல்லைங்க” என்றார் மூதாட்டி. “உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க. என் வீட்டுக்கு பக்கத்துல உங்க வீடு இருந்தால் நான் உங்கள அங்கு இறக்கி விடுகிறேன் ”என்றார் அந்த காரில் இருந்தவர்.
மூதாட்டி- தன் விலாசத்தை அந்த விசால மனம் படைத்த மனிதரிடம் கூறினார். “அந்த இளைஞர் உங்கள் வீட்டிற்கு மிக அருகில் தான் என் வீடு உள்ளது. உங்களை அங்கு இறக்கி விடுறதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை. வண்டியில் ஏறுங்கள்” என்று கூறி அந்த மூதாட்டிக்கு கார் கதவை திறந்து விட்டு அவரை மும்பை சேரி பகுதியில் இறக்கி விட்டார்.
அந்த மூதாட்டி அவருக்கு கை கூப்பி நன்றியை சொல்லி விட்டு உங்க கிட்ட நான் பஸ் ஸ்டாண்ட்லயே கேக்ணும்னு நினைச்சேன். இளைஞர்- என்ன விஷயம் கேளுங்க. மூதாட்டி- உண்மையிலேயே உங்க வீடு இந்த குப்பத்திற்கு பக்கத்துலயா இருக்கு. உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே. இளைஞர்- ஆமாம். அப்படி சொன்னதால் தான நீங்க வண்டில ஏறினீங்க. மூதாட்டி- உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா. இளைஞர்- ஜே ஆர் டி டாட்டா.
இவர் வெளிநாடு சென்ற பொழுது. இந்தியர்களுக்கு ரூம் இல்லை என்று ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லில் சொன்னார்கள். பின்னர் இந்தியா வந்து. இந்தியாவின் முதல் ஸ்டார் ஹோட்டலான தாஜ் கட்டி இந்தியர்களுக்கே இடம் என்றார். இவரை எந்த ஹோட்டல் அவமதித்ததோ, அதே ஹோட்டல் உரிமையாளர் வேலை நிமித்தமாக இந்தியா வந்து தாஜ் ஹோட்டல்லில் ரூம் கேட்டார். அவருக்கு ஜே ஆர் டி டாட்டா ரூம் கொடுக்கவில்லை.
இந்தியாவின் முதல் இரும்பாலையை நிறுவியவரும் இவரே. இந்தியர்கள் தயாரிக்கும் இரும்புகளை பல்லால் கடித்தே உண்ணலாம் என்று வெளி நாட்டவர் முதலில் ஏளனம் செய்து, பின் இவரிடமே ஸ்டீல் ஆர்டர் எடுத்தனர். இவர் பிறந்தது மறைந்தது இரண்டும் நவம்பர் 29 -ல். (World news paper-ல் படித்ததில் பிடித்தது)
நாம் நாத்திகரா? ஆத்திகரா? என்பது முக்கியமில்லை
மனித இனம் தோன்றிய காலம் தொட்டே வாழ்க்கையின் பொருள் இறைவன், ஆன்மா பிறவிகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வினாக்களுக்கு விருப்பப்பட்ட பதில்கள் உருவாகும் பொழுதே ஆத்திகமும் நாத்திகமும் தோன்றின. ஆத்திகமும் நாத்திகமும் இடையறாது பேசு பொருளாகவே இருந்துள்ளது.
வேத காலப் பெருமக்கள் தம்முள்ளே கண்ட அற்புதத்தை “கடவுள்” என்று வியந்தனர். கடவுள் உண்டு என்றவர்கள் ஆத்திகர் ஆகினர். கடவுள் இல்லை என்றவர்கள் நாத்திகர் ஆயினர். நாத்திகர்களின் நம்பிக்கைகள் உலகம் இயற்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அறிவே முதன்மை பகுத்தறிவின் மூலம் வாழ்க்கை நடத்த வேண்டும். சான்றுகளையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதே. உண்மையில் பார்க்கப் போனால் ஆத்திகத்தைப் பற்றியோ நாத்திகத்தைப் பற்றியோ பேசுவது அவரவர் பெற்ற அல்லது இழந்த அனுபவத்தைப் பொறுத்ததே .
மழை எவ்வாறு பெய்கிறது இது ஒரு கேள்வி. படிப்பறிவில்லாத ஒரு ஆத்திகரை கேட்டால் மேலிருந்து ஆண்டவன் குளிக்கிறான் அதுதான் மழை. எல்கேஜி மாணவனை கேட்டால் வானத்துல தேங்கி இருக்கிற தண்ணீர்பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பான். பத்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாக பொழிகிறது என்பான். ஒரு கல்லூரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் பட்டதாரி மாணவனுக்கு சொன்ன விளக்கமும் போதுமானதாக இராது .
அறிவின் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் ஏற்ப விளக்கங்கள் மாறிக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், மழை மட்டும் மாறவில்லை. நம் உடம்பை நாம் காணும் முன்பே நமது இதயம் நமக்காக துடித்துக் கொண்டிருந்தது. நம்மை கேட்காமலேயே நமது கண்கள் காட்சிகளை காண ஆரம்பித்தன. கட்டளை இடாமலேயே காதுகள் கேட்கத் தொடங்கின. நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று நம்மை கேட்காமலேயே வந்தது. நமது உத்தரவு இல்லாமலேயே உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் அதனதன் பணியை செய்து கொண்டு இருந்தன.
காற்றும் மழையும் சூரியனின் வெம்மையும் சந்திரனின் தண்மையும் பஞ்சபூதங்கள் என சொல்லப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியன உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. இறைவன் என்று சொன்னாலும் இயற்கை என்று சொன்னாலும் வேறு ஏதாவது மாற்று பெயர் கொண்டு அழைத்தாலும் ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற அற்புதத்தை மட்டும் மறுக்க முடியாது.
ஒருவரை ஈர்க்கும் இடம் கோயிலாகவோ ஆசிரமமாகவோ ஒரு மலைக் குகையாகவோ இருக்கலாம்.புத்தனை ஈர்த்தது ஒரு மரம்தானே. எனவே, மகான்களோ ஞானிகளோ அல்லது இடங்களோ எது நம்மை ஈர்க்கிறதோ நமக்கான அதிர்வலை மையம் அங்கே இருக்கிறது என்று பொருள் .
இந்த உலகம் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. நாம் எந்த கோணத்தில் இருந்து நோக்கினும் இரு கொள்கைகளும் மனிதர்களின் அறிவியல் தேடலையும் ஆன்மீக விசாரணையையும் காட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தனி நம்பிக்கை, தனி அனுபவம், தனி அனுமானம் இருக்கலாம். நாம் நாத்திகரா? ஆத்திகரா? என்பது முக்கியமில்லை. நாம் மனிதர்களாக ஒருவருக்கொருவர் உள்ளன்புடன் பிறரின் உரிமைகளையும் நம்பிக்கைகளையும் மதித்து வாழ வேண்டும். அதுதான் மனித வாழ்வின் இலக்காகவும் இலக்கணமாகவும் இருக்க வேண்டும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிந்தனை எப்போதும் வளர்ச்சிக்கானதாக அமைய வேண்டும்.