இங்கு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வெற்றிக்காக போராடியவர்கள் அல்ல… திறமையை வளர்த்துக் கொள்வதற்காக போராடியவர்கள்…!! ஆக திறமையை வளர்த்துக் கொண்டே சென்றால் வெற்றி தானாக வரும்…! “இது பிரபஞ்ச நீதி”
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
“கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்து விடு” என்ற பாட்டு எப்பொழுதாவது உங்கள் காதிலே விழுந்திருக்கிறதா? கவலை ஒருவிதமான மன நோய். நினைப்புக்கும் நடப்புக்கும் உள்ள வித்தியாசமே கவலை. தனது இயலாமையை எண்ணி வருந்தி அமைதி இழந்து இருக்கும் மனநிலைதான் கவலை.
சில பேருக்கு கவலைப்படுவதற்கு ஏதாவது இல்லை என்றால் கவலை அடைகிறார்கள். இன்னும் சிலரோ கவலைப் படுவதற்கு முன்பே கதறி அழுவார்கள். விருந்தாளியாக நுழையும் கவலை வெகு சீக்கிரத்தில் எஜமான் ஆகிவிடும். கவலைப்பட்டு கவலைப்பட்டு பழக்கத்தால் மனதுக்கு கவலை ஒரு நோயாகவே ஆகி விடுகிறது.
கவலை நாளைய துயரங்களை அழிப்பதில்லை. ஆனால், இன்றைய வலிமையை அழித்து விடுகிறது. கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் சிந்திக்கும் திறனகன்று மன உறுதியும் குலைந்து போய்விடும். எனவே காரணத்தை ஆராய்ந்து அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கவலையிலிருந்து விடுபடுவதே அறிவார்ந்த செயல்.

கவலை வந்துவிட்டதா? கவலைப்படாதீர்கள் போய் தூங்குங்கள். அதனால்தான் வள்ளுவர் கூட இடுக்கண் வருங்கால் வருத்தப்படாமல் “நகுக ” என்று சொல்லுகிறார். கவலைக்கு மருந்து ஒரு செயல்தான். கவலை என்பதை தோளிலே சுமந்து அதன் மீது செலுத்தும் கவனத்தை கடமையின் மீது செலுத்தினால் வெற்றி உறுதி. எது வந்தால் என்ன? எதிர் கொள்ளும் துணிவிருந்தால் போதும். உலகமே எதிரணியாய் ஒன்று திரண்டாலும் துணிந்து செயல்பட்டால் எதிர்ப்புகள் தூள் தூள்தான். சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரைதான் மனிதன். கவலையைப் பற்றி கவலைப் படாதே!
(தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி அவர்களின் வலைதள பதிவு)
ஜூலை – 17 – சர்வதேச நீதிக்கான உலக நாள்
எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ – என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.
நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.