அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “கடந்த வாரம் வரவில்லையே, சாமி”என்றதும் “அதற்கு என்ன தண்டனையா தரப் போகிறாய்?” என செல்லமாக கோபித்துக் கொண்டு கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“பாட்டாளி மக்கள் கட்சியில் தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள நிகழ்வுகளை பார்க்கும்போது பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதனை யாராவது செயல்படுத்தி வருகிறார்கள் என என்ன தோன்றுகிறது. இதே போலவே மதிமுகவில் மல்லை சத்யாவை துரோகி என்று வைகோ வர்ணித்து இருக்கிறார். ஏற்கனவே கரைந்து கொண்டிருக்கும் மதிமுகவையும் இரண்டாக உடைக்க வேலை நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத்தை அதிமுக பாஜக கூட்டணியில் கொண்டு வந்து சேர்க்க அமித்ஷா சிறப்பு நிபுணர் ஒருவரை நியமித்து உள்ளதாக இன்று ஒரு நாள் இதழில் செய்தி வெளியாகியுள்ளது நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “இதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்து அரசியல் வியூகங்களை உருவாக்கி செயல்படுத்தும் கார்ப்பரேட் அரசியலா? சாமி” என்றேன் நான்.
“தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் இத்தகைய பிரச்சாரத்தை பாஜக முன்னெடுப்பதன் மூலம் குறைந்தபட்சம் சட்டமன்றத் தேர்தலில் 50 க்கு குறையாத தொகுதிகளை பெற நெருக்கடி கொடுப்பதாக இருக்குமோ எனஅரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி. “இருக்கலாம் சாமி” என்றேன் நான்.
“எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் தான் இணைய தயார் என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதோடு மதுரையில் மாநாடு நடத்தி அடுத்த கட்ட முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் வகையில் புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கும் என்றும் இல்லாவிட்டால் எப்பாடுபட்டாவது அண்ணா திமுகவில் அதிமுகவுக்குள் வந்து விட வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் பாஜக இவரை சட்டமன்றத் தேர்தல் தங்களோடு இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்யும் நிலையில் இவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி. “எல்லாம் சதுரங்க ஆட்டம் சாமி” என்றேன் நான்.
“புகார்கள் வந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள 144 மாவட்ட செயலாளர்களையும் நீக்க வேண்டும் என்கிறார் திருமாவளவன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறுவது எங்கள் வேதவாக்கு என்று மத்திய அமைச்சர் முருகன் கூறிய நிலையில் தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி என்ற இபிஎஸ் கருத்து எங்களுக்கு வேத வாக்கு என்று அதிமுக முனுசாமி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின் என்று நயினார் நாகேந்திரன் கேட்க அண்ணா திமுகவை அமித்சா கிள்ளுக்கீரையாக கருதுகிறார் என்று திருமாவளவன் சொல்லுகிறார். இந்த செய்திகளை படிக்கும் போது தலை சுற்றுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “தங்களுக்கே தலை சுற்றுகிறது என்றால் எனக்கு மயக்கம் வருகிறது” என்றேன் நான்
“தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 46 சேவைகள் மற்றும் நகர்புறங்களில் 13 துறைகளின் மூலமாக வழங்கப்படும் 43 சேவைகள் ஆகியவற்றை விரைவாக வழங்கவும் குடிமக்களின் குறைகளை அறியவும் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை நடத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கியுள்ளார். இத்தகைய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் புகார் மீது 45 நாட்களில் முடிவு காணப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினால் அந்த பெருமை தமிழக முதலமைச்சரை சேரும். புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி மாநில சேவை உரிமை ஆணையம் போன்ற புதிய அமைப்பு ஏற்படுத்துவதில் நிதிச் சுமை போன்ற சிரமங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சேவை உரிமை அலுவலர் மற்றும் குடிமக்களின் குறைதீர் அலுவலரை நியமித்து மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வழி வகுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான மேல்முறையீட்டு மன்றமாக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை அறிவிக்கலாம். கடந்த தேர்தலுக்கு முன்பாக சேவை உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்படும் என்றும் திமுக கூறிய நிலையில் மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்தினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்றார் வாக்காளர் சாமி. “நீங்களும் சட்ட நிபுணராகி விட்டீர்களா சாமி” என்றேன் நான்.
“பாராளுமன்றத்தில் ராஜ்யசபாவில் 238 எம்பி-கள் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் நிபுணர்களை நியமிக்க 12 எம்பி இடங்கள் உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த நியமன எம்பி பதவிகளில் நால்வர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், இவர்கள் நால்வருக்கும் பாஜக கட்சியின் பின்புலம் உள்ளதாகவும் பொதுவான நிபுணர்களை நியமிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மூன்று மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் என்றார் வாக்காளர் சாமி. “தமிழகத்தில் ஒரே நாளில் 39 டிஎஸ்பி களும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளும் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் சாமி” என்றேன் நான்.
“75 வயது நிறைவடைந்து விட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது வரும் செப்டம்பரில் 75 வயதை நிறைவேறும் பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச தொடங்கியுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை பார்த்தாலும் அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் 75 வயதை நிறைவு செய்ததும் அரசியலில் இருந்து அவர்களுக்கு பாஜக ஓய்வு அளித்துள்ளது. இருப்பினும், அந்தக் கட்சியின் அமைப்பு விதிகளில் 75 வயதில் கட்சியின் தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை” என கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அவ்வப்போது அரசியல் செய்திகளை வழங்கும் வாக்காளர் சாமிக்கு நன்றி.