நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுமையோடு கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், பொறுமை இல்லாவிட்டால் நாளை அதுவே பெரும் பிரச்சனையாகி விடும் நமது வாழ்வில். பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் போன்றதே. அதன் மேல் கவலை எனும் பேப்பர் வெயிட் வைப்பது நாம் தான். வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை கூட நமக்கு வேண்டாம். வலிகள் இல்லாத வாழ்க்கை கிடைத்தால் அதுவே நமக்குப் போதும்.
இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய ஒரே உண்மை என்னவெனில் இதுவும் கடந்து போகும் – இந்த நிலையும் மாறும் என்பதே, ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம். தோற்றத்தை வைத்து யாரையும் வேண்டாம் என ஒதுக்காதீர்கள். ஒருவேளை, அவருக்குச் சேரவேண்டிய மொத்த அழகையும் கடவுள் அவர் இதயத்தில் வைத்திருக்கலாம். இன்றைக்கு கஷ்டபடுகிறார்கள் என்று யாரையும் ஒதுக்கி விடாதீர்கள் நாளைக்கு உங்களுக்கு உதவும் படி நிலை அவர்களுக்கு மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காற்றிற்கு தாங்காது பறந்திடும் குடைதான் நனையாது நம்மைக் காக்கிறது. பலம் என்பது அதன் பயனைப் பொறுத்தது. எதையும் எளிதில் தொலைத்து விடாதீர்கள். மீண்டும் அது எளிதாகக் கிடைப்பதில்லை. சில விஷயங்கள்,நமக்கு வாழ்க்கையில் தேவையென்றால் பொறுமை மட்டும், இருந்தா போதாது, நாமிருக்கும், இடத்தையும் அதற்கு ஏற்றாற்போல் சற்று, மாற்றிக் கொள்ள தான் வேண்டும்.
நம்மிடம் இருப்பதை பார்க்க தோன்றுவதில்லை. பிறரிடம் இருக்கும் குறைகளை பெரிது படுத்தி பார்க்க தோன்றும். எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள், உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு
ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகளும் தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். வகுப்பிலேயே புத்திசாலியான பையனுக்கு எல்லாக் கேள்விகளுக்கான விடை தெரிந்தாலும், கடைசி கேள்வியைப் பார்த்த போது கவலை அடைந்தான். கடைசிக் கேள்வி என்னவெனில், “தினந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு வரும், முதல் மனிதரின் பெயர் என்ன?“
தேர்வெழுத வந்த குழந்தைகள் அனைவரும் ஒரு பெண்ணைப் பற்றி மட்டுமே எண்ணினர். அந்த பெண், எல்லோரும் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கூடம் வந்து பள்ளியைச் சுத்தம் செய்வாள். மெலிந்த, மங்கலான, உயரமான தோற்றம் கொண்ட அந்தப் பெண் 50 வயதுக்குள் இருப்பாள். இந்த முகமே, அங்கே தேர்வு எழுதிக் கொண்டு இருந்த குழந்தைகளின் கண்கள் முன்பாக இருந்தது. ஆனால், அந்தப் பெண்ணின் பெயர் யாருக்குமே தெரியவில்லை. இந்தக் கேள்விக்கு விடையாக, சில குழந்தைகள் அவளுடைய தோற்றத்தை விவரித்தனர். சிலர் முயற்சி செய்யாமல் இந்தக் கேள்வியையே விட்டு விட்டார்கள்.
தேர்வு முடிந்ததும் குழந்தைகள் ஆசிரியையிடம், “இந்தப் பெண்ணிற்கும், எங்களுடைய பாடத்திற்கும், என்ன தொடர்பு இருக்கின்றது?“ என்று கேட்டார்கள். ஆசிரியை, “உங்களைச் சுற்றி நிறைய மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் முக்கியமான வேலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த கேள்வியைக் கேட்டோம். இன்னும் நீங்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இதன் பொருள் என்னவென்றால், உங்களிடம் விழிப்புணர்வு என்பது இல்லை” என்றார்.
நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, நமக்கு உதவி செய்து கொண்டு இருப்பவர்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அமைதியான வாழ்க்கைக்கு தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.