ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதியை உலகம் மகிழ்ச்சி தினமாக கொண்டாட வேண்டும் என்று இந்தியாவை ஒட்டி இமயமலை பிரதேசத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தும் மக்களை கொண்டுள்ள பூடான் நாடானது ஐக்கிய நாடுகள் சபையை கடந்த 2012 ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இது மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் அதன் பங்கைக் கொண்டாடவும் அனுசரிக்கப்படுகிறது.
மகிழ்ச்சியாக இருங்கள்
உலக மகிழ்ச்சி தினம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது. அந்த கருப்பொருளை முன்னிறுத்தி, மகிழ்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்புங்கள்“ என்பதாகும்.
உலக மகிழ்ச்சி குறியீடு
சமீபத்தில் 2025-க்கான உலக மகிழ்ச்சி குறியீட்டை(Happiness Index) ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டு தீர்வுகள் வலை அமைப்பு (Sustainable Development Solutions Network – UNSDSN)) மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் இணைந்து மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினத்தன்று வெளியிட்டது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் பற்றிய உணர்வுகள் உள்ளிட்டவற்றின் கடந்த மூன்று ஆண்டு தரவுகளின் அடிப்படையில் மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு 118 ஆம் இடம்
2025-க்கான அறிக்கையில், 147 நாடுகள் பங்கேற்ற ஆய்வில் பின்லாந்து தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக மகிழ்ச்சி குறியீட்டில் முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டுக்கான மகிழ்ச்சி குறியீட்டில் டென்மார்க் இரண்டாவது இடத்தையும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் ஸ்வீடன் நான்காவது இடத்தையும் நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. நமது இந்தியா 147 நாடுகளில் 118 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் இடத்தை நினைக்கும்போது சற்று மனக்குறைவாக தான் உள்ளது.
மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது வெற்றியின் தொடக்கமாக உள்ளது பெரிய மனிதர்கள், மகான்கள் வெற்றியாளர்கள் எவரையும் சந்தித்தால் அவர்களின் அடிப்படை குணங்களில் சிரிப்பு முக்கிய அம்சமாக இருக்கும். வாழ்வை அவர்கள் சோதனைகளாக பார்ப்பதில்லை. சாதனைகளின் வாய்க்கால்களாக பார்க்கிறார்கள். மகிழ்ச்சி என்ற விசிறியால் சோதனைகளை விலக்கி கொண்டே முன் சென்றுவிடுகின்றார்கள். இனிப்பாய் விருந்து ஆரம்பிப்பது நமது சம்பிரதாயம். வாழ்வில் சிரிப்புடன் எதையும் ஆரம்பிப்பது, அதை நீடித்து வெற்றி பெற உதவும் நல்ல தொடக்கமாகும்.
சிரிப்பு
இரு மனிதர்களின் அறிமுகம் புன்னகையில் துவங்குகிறது. அந்த உறவில் சிரிப்பு நிலை பெறும் வரை, உறவில் வசந்தம் நீடிக்கிறது. சிரிப்பு மற்றவர்களை கவர்கிறதோ, இல்லையோ நிச்சயமாக சிரிப்பவனை மகிழ்வான உள்நிலையில் நீடிக்க வைக்கிறது. சிரிப்பே மனிதரின் முகவரி ஆக உள்ளது. புகைப்படங்களில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முகம் அழகாக இருக்க புன்னகை புரியுங்கள் (smile please)என்று போட்டோ எடுக்கும் அன்பர் உங்களை சொல்வது உங்களுக்கு நினைவிருக்கிறதா? சிரிக்கும் போது தான் நம் அழகு பல மடங்கு கூடுகிறது. சிரிக்கும்போது நம்முள் நன்மை தரக்கூடிய டோபமைன் (dopamine) என்னும் வேதியல் பொருட்கள் சுரக்கின்றன. இவை உற்சாகத்தை தருகின்றன. இதனால் தென்றலில் மென்மையுறும் செடிகள் போல நம்முடைய உடலும் மென்மையுறுகிறது. எனவேதான், நன்கு சிரிக்கும் மனிதர்கள் இளமையுடன் இருக்கிறார்கள்.
வள்ளுவன் கூற்று
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். (குறள் 621)
துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்பதே மேற்கண்ட குரலில் வள்ளுவன் காட்டும் வழியாகும்
பல வேலைகளில், இது சாத்தியமா? நடைமுறையில் இவ்வாறு முடியுமா? ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லிவிட்டு போய்விட்டாரோ என்று நினைத்துக் கொள்வோம், இல்லையா? சிரிப்பதும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் ஒரு செய்கை தான். சிரிப்பதால் முகமும், உடலும் புதிய தெம்பை, முனைப்பை பெறுகின்றன. சிரிப்பு, வரும் துன்பத்தையோ அல்லது வந்த துன்பங்களையோ விரட்டுகிறது.
தனி கவர்ச்சி
நாம் முகத்தை மாற்ற முடியாது. பெரிய மூக்கு, ஒட்டிய கண்ணம், பொருத்தம் இல்லாத காது,சிறு கண்கள் என வடிவமைப்பு அமைந்திருக்கலாம் ஆனால் சிரிப்பு எனும் நகையை அணிந்து கொண்டால் நம் முகம் தனி கவர்ச்சி பெற்று விடுகிறது. நம் முகம் மாறுகின்றது.எனவே சிரிப்பைபோன்ற கவர்ச்சிப் பொருள் வேறு எது இருக்கிறது? சிலர் எதை சொன்னாலும் சிரிப்பாய் இருக்கிறது. மற்றவரிடம் சிரிப்பு வரவழைப்பது என்பது ஒரு நளினமான கலை. மற்றவர்களை சிரிக்க வைக்க நம்மால் முடியவில்லை என்றால் போகட்டும். நமக்குள் நாம் சிரிக்க பெரிய திறமை ஒன்றும் தேவையில்லை.
மனதின் சக்தி
காரணம் இல்லாமல் சிரிப்பவன் பைத்தியம். ஆனால், தனிமையில் காரணமே இல்லாமல் சிரிக்கலாம், கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது, குளியல் அறையில் கதவை அடைத்துக் கொண்டு கொண்டு காரணம் இல்லாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும். தொடர்ந்த சிரிப்பு நம்ம இளமையாக்குகின்றது. புது உற்சாகத்தை தருகிறது. காரணத்தோடு சிரித்தால் தான் சக்தி வரும் என்று இல்லை. சிரித்தாலே போதும் நம் மனதிற்கு உடம்பிற்கும் சக்தி பெருகுகின்றது. காரணத்தோடு சிரிக்கிறோமோ, இல்லை என்பது நம் மூளைக்கு தேவை இல்லை. சிரிக்கும்போது நல்லது செய்யும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. முகத்தின் தசைநார்கள் வலுப்பெறுகின்றன. சிரிப்புக்கு உடல் நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சிரிப்பு நம் எல்லைகளை உருவாக்கும் வாய்ப்பு. மனதை பூங்காவாக மாற்றும் தென்றல். அதை பழகுவோம். இன்னும் அதிகமாக!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிரிப்பு உடல் நலமிக்கும் நலனுக்கும் நட்புக்கும் நல்லது. ஆனால், மகிழ்ச்சி குறியீடு என்பது மக்களின் வாழ்க்கை தரத்தை வைத்து கணக்கிடப்படுவது.