Thursday, May 29, 2025
spot_img

தமிழகத்தில் உள்ள மூடுபனிமலையான கொழுக்குமலைதான் உலகின் மிக உயரமான தேயிலை தோட்டம்.

தொலைதூர மலைகளின் களிப்பூட்டும் காட்சியில் திளைத்து, அங்கிருந்து மூடுபனி மலைகளுக்கு செல்ல விரும்பினால்,கொழுக்குமலை, வார இறுதி விடுமுறை நாட்களுக்கு மிகச்சரியான இடமாகும்.  செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கொழுக்குமலைக்கு செல்வது சரியான தருணமாக கூறப்படுகிறது. கொழுக்கு என்றால் கூர்மையான அல்லது உயரமான அமைவிடம் என்று பொருள். இந்த மலையின் நிலவும் மூடுபனி காரணமாக இந்த மலைக்கு மூடு பனி மலை என்ற பெயரும் உள்ளது.

அமைவிடம்

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கொட்டகுடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் கொழுக்குமலை. போடிக்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி அருகே அமைந்துள்ளது.  கொழுக்குமலையானது கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் இயற்கையின் மிக அழகிய காட்சிகளுடன் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிக உயரமான தேயிலை தோட்டமாக போற்றப்படுகிறது.

தேனியில் இருந்து 65 கிலோமீட்டர் ஜீப் மூலமாக பயணம் செய்து கொழுக்குமலையை அடையலாம். போடியிலிருந்து கொழுக்குமலைக்கு நேரடிப் பேருந்து வசதிகள் இல்லை. போடி நகரத்திலிருந்து போடி மெட்டு வரை பேருந்து மூலம் சென்று, போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவின் சூரியநெல்லிக்குச் சென்ற பின், ஜீப்கள் மூலம் கொழுக்குமலை செல்லலாம். கொளுக்குமலை அருகே 6.6 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி நகரமும் 32 கிலோமீட்டர் தொலைவில் மூணார் நகரமும் அமைந்துள்ளன. மூணார் அல்லது சூரியநெல்லி வழியாக கொளுக்குமலைக்கு சாலை வசதி உள்ளது.

பொதுவாக இங்கு செல்வதற்கு மூணாறு வழிதான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. பேருந்து மூலமாக மூணாறில் இருந்து கொழுக்குமலை செல்வதெனினும் அல்லது தேனியில் இருந்து கொழுக்குமலை செல்வதெனினும் மூணாறு மற்றும் தேனி இடையே இயக்கப்படும் பேருந்துகள் மூலமாக பயணித்து பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சூர்யநெல்லி எனும் குறுநகருக்கு ஆட்டோ கிடைக்கும். கொழுக்கு மலையின் நுழைவாயிலான சூர்யநெல்லியிலிருந்துதான் கொழுக்கு மலைக்கு ஜீப்புகள் கிடைக்கின்றன. 

மக்கள்

கொழுக்குமலையில் வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாக தேயிலை விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இயற்கையோடு பின்னிப்பிணைந்துள்ள வாழ்க்கை முறை, எளிய வீடுகள், விவசாயம் சார்ந்த அன்றாட வாழ்க்கை மற்றும் விருந்தோம்பல் ஆகியவையும் கடின உழைப்பும் இங்கு வாழும் மக்களின் அடையாளங்களாகும். 

சூரிய உதயம்

கொழுக்குமலையின் அழகான காட்சியை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது கட்டாயமாக பார்க்க வேண்டும். கைக்கெட்டும் தொலைவில் மேகக்கூட்டம் திரண்டு நிற்கும் அதிகாலைப் பொழுதில் சூரிய உதயத்தைக் காண்பது அற்புதமாக இருக்கும். கிழக்கு அடிவானத்தில் உள்ள மலைகளில் முதல் சூரியக் கதிர்கள் கசியும் போது, வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறும். சூரியன் மெதுவாக எழுந்து மேலேச் செல்லும் போது, ​​தொலைவில் உள்ள அழகிய மலைகள் இயற்கையின் போர்வையிலிருந்து வெளியேறி, சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும். இம்மலையில் சூரிய உதயத்தைக் காண பல இடங்களிருப்பினும், இங்குள்ள புலி முகம் முகம் கொண்ட ‘புலிப்பாறை’ எனுமிடத்தின் பின்னால் நின்று பார்த்தால், புலியின் வாயிலிருந்து சூரியக் கதிர்கள் வெளி வருவது போன்று தோன்றும்.  

கடற்கரைகளில் நின்று சூரியன் தோற்றம் மறைவைக் கண்டு ரசிப்பதற்கு மாறாக மலையுச்சியிலிருந்து சூரியன் தோற்றம், மறைவைக் காண்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். விடியற்காலையின் அமைதியையும், இரவின் நட்சத்திர வெளிச்சத்தையும் அனுபவிக்க இங்கு தங்குவது ஒரு அரிய வாய்ப்பாகும்.

மலையேற்றம்

கொழுக்கு மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டுமென்றால் மலையேற்றம் (trekking) மூலமாகத்தான் செல்ல முடியும். கொழுக்குமலை அடிவாரம் வரை ஜீப்பில் செல்லலாம். கொழுக்குமலையைச் சுற்றி பல்வேறு அளவிலான மலையேற்றப் பாதைகள் உள்ளன. அடர்ந்த சோலை மரங்கள், உயர்ந்த புல்வெளிகள் மற்றும் சிறு அருவிகள் வழியாக செல்லும் இந்த பயணங்கள் இயற்கையின் அழகை முழுமையாக அனுபவிக்க உதவும். உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடன் பாதுகாப்பான மலையேற்றத்தை மேற்கொள்ளலாம்.

நகர வாழ்க்கையின் இரைச்சலில் இருந்து விடுபட்டு மாசற்ற சூழல் கொண்ட அமைதியான இயற்கை தலமாக கொழுக்குமலை விளங்குகிறது. சாகச விரும்பிகளுக்கு மலையேற்றம் மேற்கொள்ளவும் மற்றும் முகாமிடவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையில் அமைந்துள்ள கொழுக்குமலை ஏற்ற இடமாகும். போஸ் சிகரம் கொழுக்கு மலையில் உயரமான சிகரம் ஆகும் மலையற்ற பயிற்சிக்கு செல்பவர்கள் இங்கு செல்கிறார்கள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொழுக்குமலைக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொழுக்குமலைக்கு வந்து செல்கிறார்கள். இந்த பகுதி மலையற்ற பயிற்சிக்கு செல்வதற்கு உலக புகழ் பெற்றது.

இயற்கை

கொழுக்குமலை வெறும் ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, அது இயற்கையின் மடியில் அமைந்திருக்கும், மேகங்கள் நம்மை தழுவி செல்லும் ஒரு தனித்துவமான உலகம். 2016 மீட்டர் உயரத்திலுள்ள கொழுக்குமலை அடிவாரத்தில்தான் அற்புதமான காட்சிமுனை இருக்கிறது. சிங்கப்பாறை என்று சொல்லப்படக்கூடிய பாறை ஒன்று அந்த இடத்தின் அடையாளமாக உள்ளது.

மலைப்பகுதியில் பொதுவான கரும்பறவைகள், கருஞ்சாம்பல் வாலாட்டிகள், மலபார் பாடும் வகைக் குருவிகள், மலை மைனாக்கள், கிழக்கத்திய வெள்ளைக்கண் குருவிகள், கொண்டலாத்திகள் போன்ற பறவைகளும், நீலகிரிக் கருங்குரங்கு, இந்திய இராட்சத அணில்கள், நீலகிரி வரையாடு போன்ற விலங்குகளும் இருக்கின்றன.  கொழுக்குமலை மற்றும் அதை சுற்றியுள்ள காடுகள் பல்வேறு வகையான உள்ளூர் மற்றும் வலசை வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது. 

அமைதியாக நடந்து செல்லும் போது காட்டு யானைகள், காட்டெருமைகள் மற்றும் பல்வேறு சிறிய வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குரங்கணி, மூணாறு, டாப் ஸ்டேசன் போடிமெட்டு எனும் ஊர்களைக் கொழுக்கு மலையிலிருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும்.  

தேயிலை

1900-களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட கொழுக்குமலை தேயிலை தோட்டம். போடிநாயக்கனூரைச் சேர்ந்த செட்டியார் சகோதரர்கள் என்பவர்களை உதவியாளர்களாகக் கொண்டு 1920 முதல் 1927 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆங்கிலேயர்களால் இந்தத் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. 1927 முதல் 1932 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் தேயிலைச் செடிகள் நடவு செய்யப்பட்டன. தேயிலைத் தோட்டத் தொழில் பணிகள் 1936 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இங்கிருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குதிரை வண்டிகளைக் கொண்டும் மற்றும் தலைச் சுமையைப் பயன்படுத்தியும் கொண்டு செல்லப்பட்டக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டன. 

இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே (Orthodox) செயல்படுகிறது. சிறிய மலைக்கிராமமான கொழுக்குமலையில் 81 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கிறது. நவீன இயந்திரங்களின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. கை தேர்ந்த தொழிலாளர்கள் கைமுறையாக தேயிலை இலைகளைப் பறித்து, அவற்றை கவனமாக உலர்த்தி, நொதிக்க வைத்து, உருட்டி, தரம் பிரித்து தேயிலைத்தூள் தயாரிக்கின்றனர். இந்த உழைப்பான பாரம்பரிய முறை தேயிலையின் தனித்துவமான நறுமணம், சுவை மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. 

மலையுச்சியில் மிக உயரமான இடத்தில் இத்தோட்டம் அமைந்திருப்பதால், இங்கு தேயிலைச் செடிகள் மிக மெதுவாகவே வளர்கின்றன. அதிகமான உயரத்தில் வளரும் தேயிலை என்பதால் இத்தேயிலையின் தரமும் உயர்வாகவே இருக்கிறது. உலகில் மரபு வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் சில தேயிலைத் தோட்டங்களில், இத்தேயிலைத் தோட்டமும் ஒன்றாக இருக்கிறது. கொழுக்கு மலையில் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள பழைமையான தேயிலை தொழிற்சாலைக்கு செல்ல நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

எதிர்பார்ப்பு

கொழுக்கு மலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உண்ணும் வகையிலான எளிய உணவுகளே உணவகங்களில் கிடைக்கின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளும் குறைவாக உள்ளன. தனியார் தேயிலைத் தோட்டங்களில் சொகுசு தங்கும் இடங்கள் உள்ளன. இங்கே தங்கி, குளிரில் காத்திருந்து சூரிய உதயத்தை பார்ப்பதற்கு உதவியாக கொழுக்கு மலையில் தனியார் நிறுவனங்கள் கூடாரங்களை அமைத்து வாடகைக்கு விடுகின்றனர்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சாலை வசதி, தங்குமிடம் மற்றும் உணவக வசதிகளை மேம்படுத்துவது தேவையான ஒன்றாக உள்ளது. மலையேற்ற பிரியர்களுக்கு வசதியாக தகுந்தவாறான   வழித்தடங்களை அமைத்து சரியான பயிற்சியாளர்கள் மூலம் பாதுகாப்பான மலையேற்றத்தை சுற்றுலா வாசிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles