தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிறப்பு மிக்க நவகிரக கோவில்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நமது பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களில் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் மற்றும் புதன் கோவில்களை பற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் நவகிரக கோவில்களில் முக்கியமானதாக விளங்கும் சுக்கிர பகவான் கோவில் பற்றி இங்கு பார்க்க உள்ளோம். இந்தக் கட்டுரையின் இறுதியில் ஏற்கனவே வெளியான சூரியன், சந்திரன், குரு பகவான் செவ்வாய் மற்றும் புதன் கோவில்கள் குறித்த படைப்புகளின் இணைப்புகளும் (links) வழங்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
சுக்கிர தலம்
நவகிரக தலங்களில் சுக்ரனுக்குரிய பரிகார தலமாக விளங்குவது கஞ்சனூர் அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில். இது சுக்ர பரிகார தலமாக இருந்தாலும் இங்கு சிவபெருமானே, சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36 வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குட்பட்ட கோயிலாகும்.. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் குறித்து பாடப்பட்டுள்ளது. பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது
கோவில் அமைப்பு
திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரங்களை கொண்டதாக இத்தலம் அமைந்துள்ளது. உள் மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இத்தலத்தில், சிவ பெருமான், பிரம்ம தேவருக்கு திருமண கோலத்தில் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.
இறைவன்: அக்னீச்வரர், அம்பாள்: கற்பகாம்பாள், விருட்சம்: புரச மரம், தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பதிகம்: அப்பர், நவக்கிரகத் தலம்: சுக்ரன், நிறம்: வெண்மை, வாகனம்: முதலை, தானியம்: மொச்சை, உணவு: மொச்சைப் பொடி கலந்த சாதம், வச்திரம் (துணி): வெள்ளைத் துணி, மலர்: வெண் தாமரை, இரத்தினம்: வைரம்.
தல வரலாறு
தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்திருந்தாலும் தேவர்கள் மட்டுமே அமிர்தத்தை பருகினர். இதனால் கோபமடைந்த அசுரர்கள் தங்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று முறையிட்டனர். அவரும், தேவர்கள் அனைத்து செல்வ வளங்களையும் இழந்து பூலோகம் சென்று துன்பப்படட்டும் என சாபம் அளித்தார். தேவர்களோ தங்களின் சாபம் நீங்க, வியாச முனிவரிடம் வழி கேட்டனர். உத்திரவாஹினி என அழைக்கப்படும் வடகாவிரியில் சென்று நீராடி, கற்பகாம்பிகை சமேத அக்கினீஸ்வரரை வழிபடும்படி வியாச முனிவர் ஆலோசனை வழங்கினார். அதே போல் தேவர்களும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். சுக்கிரம் அளித்த சாபத்தில் இருந்து தேவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலம் என்பதால் சுக்கிரனால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது.
பிரம்ம தேவர் நடத்திய யாகத்தில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆகுதிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டுமே ஏற்றார் அக்கினி தேவன். இதனால் பாண்டு ரோகம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அக்கினி தேவன், பிரம்ம தேவரிடமே நோய் நீங்க வழி கேட்டார். கஞ்சனூரில் அருள்புரியும் சிவ பெருமானை வழிபடும்படி ஆலோசனை வழங்கினார். அக்கினி தேவரும் இத்தல இறைவனை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்றார். அக்கினி பகவான் வழிபட்டு, நோய் நீங்கியதால் இத்தல இறைவன் அக்கினீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். அக்னி பகவான் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர்.
அக்னி தேவனின் நோய் காரணமாக தான் துவங்கிய யாகத்தை நிறைவு செய்ய முடியாததால் பிரம்ம தேவனின் படைப்பு தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் பிரம்ம தேவரும் இத்தலத்திற்கு வந்து சிவ பெருமானை நோக்கி தவமிருந்து, அருள் பெற்றார். இதனால் இந்த தலத்தில் ஓடும் காவிரி ஆற்றிற்கு பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.
சிவ பெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிய நிலையில் திருக்காட்சி கொடுத்த தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம். பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின், ’மாத்ருஹத்தி’ தோஷத்தை போக்கிய தலம். மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் (உடற்பிணி) நீங்க வழிபட்டார். கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம்.
சிறப்பு
நவகிரகங்களில் யோககாரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குலகுருவாக போற்றப்படுபவர். வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் சரியாக இருந்தால் தான் மண வாழ்க்கை, மகப்பேறு, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அமைய முடியும் என்பது நம்பிக்கை.
உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். பலா மற்றும் புரசு ஆகியன இத்தல விருட்சமாக போற்றப்படுகின்றன. இத்தல விருட்சத்தை ஒரு மண்டல காலம் 16 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சுக்கிர பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கஞ்சனூர் சொல்லப்பட்டாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருபெருவேளூர் (திருவாரூர் மாவட்டம்) அபிமுக்தீஸ்வரர் கோவில், திருவெள்ளியங்குடி (தஞ்சாவூர் மாவட்டம்) கோலவில்லி ராமர் கோவில் போன்ற தலங்களும் சுக்கிர பரிகார தலங்களாக விளங்குகின்றன.
சந்திர பகவானுக்குரிய பரிகாரதலமான கைலாசநாதர் திருக்கோயில் – நுகர்வோர் பூங்கா
நவகிரக கோவில்கள்: சுயம்பு லிங்கமாக தோன்றி ஆலங்குடியில் காட்சி தரும் குரு பகவான் – பூங்கா இதழ்
நவகிரக செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரதலமான வைத்தியநாதர் திருக்கோயில் – பூங்கா இதழ்
நவகிரக கோவில்கள்: திருவெண்காட்டில் அமைந்துள்ள புத்திகாரகன் புதன் பகவான் – பூங்கா இதழ்