தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிறப்பு மிக்க நவகிரக கோவில்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நமது பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களில் சூரியன், சந்திரன், குரு பகவான் மற்றும் செவ்வாய் கோவில்களை பற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் நவகிரக கோவில்களில் முக்கியமானதாக விளங்கும் புதன் கோவில் பற்றி இங்கு பார்க்க உள்ளோம். இந்தக் கட்டுரையின் இறுதியில் ஏற்கனவே வெளியான சூரியன், சந்திரன், குரு பகவான் மற்றும் செவ்வாய் கோவில்கள் குறித்த படைப்புகளின் இணைப்புகளும் (links) வழங்கப்பட்டுள்ளன.
புதன் தலம்
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் (Thiruvenkadu) அமைந்துள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலானது (Swetharanyeswarar Temple) நவகிரக தலங்களில் தமிழகத்தில் புதனுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 ஆம் தேவார திருத்தலமாகவும் அம்மனின் 51 சக்திப் பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகவும் உள்ள இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது என்றும், விஜயநகர அரசர்களால் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. துர்க்கை, காளி, நடராஜர், வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் ஆதித்ய சோழன் மற்றும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் இக்கோவிலை பல்வேறு காலகட்டங்களில் புனரமைத்து, சீர் செய்த மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
அமைவிடம்
சீர்காழியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம்பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
ஐராவதம் என்பது நான்கு தந்தங்கள் மற்றும் ஏழு தும்பிக்கைகள் கொண்ட வெள்ளை நிறத்திலான தெய்வீக யானையாகும். திருவெண்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலானது இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. சிவபெருமான் அகோரமூர்த்தியாக அசுரனை ஒரு மரத்தின் அடியில் சிவ பெருமான் வதம் செய்ததாகவும், அந்த இடத்திலேயே திருவெண்காடு தலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. திருவெண்காடு என்பது வடமொழியில் “சுவேதாரண்ய க்ஷேத்திரம்” என்றழைக்கப்படுகின்றது. வால்மீகி ராமாயணத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சிறப்பு
வட இந்தியாவில் உள்ள புனித தலமாக கருதப்படும் காசிக்கு சமமானதாக இந்தியாவில் ஆறு தலங்கள் உண்டு என கூறப்படுகிறது. அதில் ஒன்றாக திருவெண்காடு விளங்குகிறது. காசியில் விஷ்ணு பாதம் (கயா) உள்ளது போல், இங்கு ருத்ர பாதம் (கயா) வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. காசியில் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் ஏழு தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். ஆனால், “திருவெண்காட்டிலுள்ள ருத்ர பாதத்தை வழிபட்டால் காசியைவிட மூன்று மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்” என்கிறார்கள். இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
புதன் பகவான்
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக, இத்தல இறைவனை வணங்கி புதன் அலி தோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. நவகிரகங்களில் புதன் பகவான் நான்காவதாக குறிப்பிடப்படுபவர். இத்தலத்தில் புதன் பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
நவகிரகங்களில் சுபகிரகம் என்ற அந்தஸ்தைப் பெற்ற கிரகம். புதன், பச்சை நிறமுடைய கிரகம் என்கிறார்கள். ஜாதகத்தில் புதனுடைய அனுக்கிரகம் இருந்தால் தான் தொழிலிலும், கல்வியிலும் உயர்வு பெற முடியும். புதனுக்கு சௌம்யன், புத்திதாதா, தனப்பிரதன் என்ற பெயர்களும் உண்டு. புதன் கிரகம் அளப்பரிய ஆற்றல்களைக் கொண்டுள்ளது. அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி, சொல், வாக்கு ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.ஜோதிட சாத்திரப்படி புதன் பகவானை புத்திகாரகன் என்பார்கள். கல்வியையும், ஞானத்தையும் வழங்கும் வித்யாகாரகன் புதன் பகவான். படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது. நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு
இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தலத்தில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ஏழு நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவேதாரண்யேஸ்வரர், அகோரர், நடராஜர் என பல ரூபங்களில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் இங்கு புரிந்ததால் இத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்ணிலிருந்து சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. சுப்பிரமணியர் மண்டபம், ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை தொடர்ந்து அம்பாள் சன்னதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு நடராஜ சபையும், ரகசியமும் உண்டு. சிதம்பரத்தில் உள்ளது போலவே நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். பட்டினத்தார் சிவதீட்சைப் பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான் என்று கூறப்படுகிறது. இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர். தாயார்: பிரம்ம வித்யாம்பிகை, தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வம்.
இத்தலத்தின் வட எல்லைக்கு திருஞான சம்பந்தர் வந்த போது ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் கால் வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். குரலைக் கேட்ட பெரியநாயகி அன்னை இவரை தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் (பிள்ளையிடுக்கி அம்மன்) கோவிலின் பிரகாரத்தில் உள்ளது.
சிறப்பு வழிபாடுகள்
இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும். அதன்பின் சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்களும் 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும்.கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்கிறார்கள். உடலில் நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்க புதன் பகவானை வழிபடுகின்றனர். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம் திருவெண்காடு. இதனைத் தவிர காஞ்சிபுரம் சத்யநாதர் கோவில், திருப்பதி மற்றும் அனைத்து பெருமாள் தலங்கள், குன்றத்தூர்- கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயம், நெல்லை மாவட்டம் திருப்புளியங்குடி ஆகியனவும் புதன் பரிகார தலங்களாக அமைந்துள்ளன.
https://theconsumerpark.com/suriyanar-kovil-sun-temple-tamilnadu
https://theconsumerpark.com/thingalur-chandran-temple-tamil-nadu