ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் தொழில்வளம், விவசாயவளம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரண்டு வளங்களின் மூலம் கிடைக்கும் பொருட்கள் வர்த்தகர்களிடமிருந்தோ அல்லது விவசாயிகளிடமிருந்தோ நேரடியாக சமூகத்தைச் சென்றவடைதில்லை. உற்பத்தி, பொருள் – போக்குவரத்து, விற்பனை என்ற சங்கலிகளால் ஆன பொருளாதாரச் சக்கரம் தொழிலாளிகளின் உழைப்பு என்ற அச்சாணியில் சுற்றுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகில் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிக்க வழிகோலியது. அதிகமான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் குறைந்த கூலியில் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. எனினும் வெளிப்படையாக அவர்கள் தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.
1866 – ல் அமெரிக்காவில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. பிலடெல்பியாவில் உள்ள தையல் தொழிலாளர்களைக் கொண்டு 1869 – ல் உரியா ஸ்மித் ஸ்டீபன் என்பவர் “தொழிலாளர் போர் வீரர்கள்” என்ற தொழிற்சங்கத்தை ரகசியமாகத் தொடங்கினார். 1886 – ல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு உதயமானது. 14 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பில் 3 இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என்பது இக்கூட்டமைப்பின் தலையாய கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை வலியுறுத்தி 1886 மே 1 ஆம் தேதி அமெரிக்காவில் 13ஆயிரம் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 3 இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
சிகாகோ நகரில் உள்ள ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1886 மே 4 ஆம் தேதி சுமார் 1500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர் தொழிலாளர்கள் 4 பேர் கலவரத்தைத் தூண்டியதாக தூக்கிலிடப்பட்டனர். அந்தப் போராட்டத்தின் விளைவாக ஒரு நாளில் 8 மணி நேர உழைப்பு என்பது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு பலரது தியாகத்தால் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது
தொழிலாளர்கள் ஒற்றுமையைப் போற்றவும் அவர்களின் போராட்டத்தைப் பாராட்டவும் இறந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும் 1889 – ல் பாரிசில் கூடிய தொழிலாளர்கள் சம்மேளனத்தில் மே முதல்நாள் தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் மே 1 ஆம் தேதி உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையிலும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் திங்கட்கிழமையிலும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடு சபை இந்த ஆண்டின் தொழிலாளர் தின கொள்கையாக ‘சமூக நீதியும் கண்ணியமான வேலையும் ‘ என அறிவித்துள்ளது.
தேசத்தின் உயர்வு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கையில் உள்ளது. இதனை அனைவரும் உணர வேண்டும்! மே தினத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! தொழிலாளர் நிலை மேம்பட உறுதிகொள்வோம்! ரத்தம் சிந்தி பெற்ற எட்டு மணி நேரம் வேலை உரிமையை மீற ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று இந்த தினத்தில் உறுதிமொழி ஏற்போம்!
இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1950 ஜனவரி 26 – ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் தொழிலாளர் நலன்காக்கும் பல பிரிவுகள் உள்ளன. தொழிலாளர் நலன் என்பது மத்திய மாநில அரசுகளின் இணைவு பட்டியலில் (concurrent list) உள்ளது. அரசியல் அமைப்பின் 16 ஆவது பிரிவு வேலை வாய்ப்பில் சமவாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதையும் 19(1) (இ) ஆவது பிரிவு சங்கம் அமைப்பதற்கான உரிமையையும் 38(2) ஆவது பிரிவு வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களைதல் குறித்தும் 41 ஆவது பிரிவு வேலைவாய்ப்பிற்கான உரிமையையும் 42 ஆவது பிரிவு பணி செய்யும் இடத்தில் வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் 43 ஆவது பிரிவு தரமான வாழ்க்கை நடத்தத் தகுந்த கூலி வழங்கப்பட வேண்டும் என்றும் 43(அ) ஆவது பிரிவு தொழிலாளர் அவரவர் பணி செய்யும் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. 23 ஆவது பிரிவு கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதைத் தடை செய்கிறது – கட்டுரையாளர் வழக்கறிஞர் – முனைவர் டி.ஏ. பிரபாகர், திருநெல்வேலி. |
பூங்கா இதழ் (The News Park) கருத்து: ரத்தம் சிந்தி பெற்ற எட்டு மணி நேரம் வேலை உரிமையை மீற ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று இந்த தினத்தில் உறுதிமொழி ஏற்போம்!.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவரின் தாயார் நூறாவது வயதில் காலமானார்.

தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவராகவும் கோழி தொடர்பான உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் பொன்னி குரூப் ஆப் கம்பெனிசின் நிறுவனர் திரு கே. சிங்கராஜ். அவரது தாயார் திருமதிக்கு காளியம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த ஞாயிறு (27 ஏப்ரல் 2014) மாலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கத்திற்கு ஏராளமான முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.