Saturday, April 26, 2025
spot_img

ஒரு நிமிடக் கதை: அவரை பற்றி எண்ணிப்பார்த்தப்படி படுக்கையில் கிடக்கிறேன். சொல்கிறார்கள்: இருக்க இடம் கொடுத்தால்,குட்டிக்கதையுடன் அனுபவம் பேசுகிறது!

இனிய வணக்கம்…. நாம் என்ன செய்ய விரும்புகிறோம். என்பதை பொறுத்தே நமக்கான வெற்றி அமைகிறது ….வெற்றியடைய இதைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை  ….- மால்கம் போர்ப்ஸ் Success follows doing what we want to do…. There is no other way to be successful…. —   Malcolm Forbes🎋💐🌺🌸☘🎋💐🌺🌸☘🌺

ஒரு நிமிடக் கதை: “நான் இன்னும் அந்த நெலமைக்கு வரல” என்ற முதியவரின் வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்தன. 

கிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கு. என்னோடு சூலூர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி எனதருகே அமர்ந்தார். பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள். உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.

சிங்காநல்லூர் பஸ்ஸ்டாண்டு போகும்லய்யா என்றார் என்னிடம். போகும், நீங்க தஞ்சாவூருங்களா? என்றேன். ஆமாய்யா பயவூட்டுக்கு வந்துட்டு போறேன் என்றார். நீயும் தஞ்சாவூராய்யா என்றவரிடம் தலையாட்டிவிட்டு, பையன் என்ன பண்றாப்ல என்றேன். இங்க தான் ஏதோ மார்பில்ஸ் கம்பெனி வச்சுருக்குறான். ஊர் பக்கமே வரமாட்டங்கிறான் ஏதோ பாக்கணும்போல இருந்துச்சு அதான் ரெண்டு நாளைக்கு முந்தி வந்தேன் பேரன், பேத்திகள கண்ணாற பாத்துட்டு இப்போ போறேன் என்றவரிடம் ஒரு ஏக்கம் தெரிந்தது.

ரெண்டு பொம்பளபுள்ள, ஒரு பய எல்லோருக்கும் கல்யாணம் செஞ்சு வச்ச ரெண்டு வருசத்துல அவ போயிட்டா. அதுக்கப்பறம் நான் மட்டும்தான். மொதல்ல எப்பயாச்சாவதும் எம் பெரிய பொண்ணாவது வந்து பாக்கும். இப்பெல்லாம் யாரும் வர்றது இல்ல என்றார். நான் கேட்காமலேயே. இப்போது எனக்கேதோ அவரிடம் கேட்க வேண்டும்போல் இருந்தது.

பையன் நல்லா பாத்துக்கிறாப்லயா? என்றதும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சைரன் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அவசர ஊர்தி வாகனத்தையே உத்துக் கவனித்துக் கொண்டிருந்தார். காதில் விழவில்லையோ என்ற எண்ணத்தில் நான் மீண்டும் பையன் உங்கள பாத்துக்குறாருல்ல என்றேன். தயக்கத்துடன் ம்ம்ம்ம் என்றவர் சிறிது நேர அமைதிக்கு பிறகு…பாத்துக்கிட்டுதான் இருந்தான். நெலத்தயெல்லாம் எம் மருமவ பேருக்கு மாத்துற வரைக்கும். அதுக்கப்பறம் அவன் ஊருக்கும் வர்றதுல்ல செலவுக்கும் பணம் கொடுக்கிறதுமில்ல. இருக்கிற ரெண்டு பசுமாடு தான் எனக்கிப்ப கஞ்சியூத்துது என்றபோது அவர் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தது.

அவன் என்ன பண்ணுவான் பாவம் அவ ஆட்ன படி ஆடுறான். இப்பக்கூட அவன் வர்றதுக்குள்ள சொல்லாம கெளம்பிவந்துட்டேன். ஏதோ சாட மாடையா அவ கெளம்பித்தொலன்னு பேசறப்பையே கெளம்பிடனுன்னு தான் வந்துட்டேன். இந்த மாதிரி இழுத்துக்கிட்டு கெடக்காமா படுத்திருக்கும்போதே உசுரு போயிடனும்னு தான் வேண்டிகிட்டிருக்கேன் என்று இப்போது தூரத்தில் கேட்கும் ஆம்புலன்சு ஒலியை கவனித்தப்படியே பேசியவரிடம் மேற்கொண்டு பேசி எதையும் கிளற வேண்டாமென்று தோன்றியது.

நான் இறங்கவேண்டிய ராதாராணி தியேட்டர் நிறுத்தம் வந்தும் ஏனோ இறங்கவில்லை. இவரை சிங்காநல்லூர் அழைத்துசென்று பேருந்து ஏற்றிவிடவேண்டும்போல் தோன்றியது அப்படியே அவருடனேயே அமர்ந்துவிட்டேன். ஏனென்று தெரியவில்லை, அவரருகில் அமர்ந்திருப்பது எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது வீசிய வியர்வை நாற்றம், நான் என் அப்பாவிடம் உணர்ந்திருந்ததால் இப்போது வா(பா)சமாக மாறிப்போயிருந்தது.

சிங்காநல்லூர் வந்தறங்கியதும் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள உணவகத்தை காட்டி சாப்பிடலாமா என்றேன். வீட்லேயே சாப்ட்டுதான் பஸ் ஏறினேன் என்று அவர் சொன்ன பதில் பொய்யென்று அவர் முகம் காட்டிக்கொடுத்தது. வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று என்ன வேணுமோ வாங்கிக்க என்ற என்னை வெறிக்க பார்த்துவிட்டு ஒரு தோச மட்டும் போதும் என்றார். இருவரும் வாங்கி சாப்பிட்டோம். அவர் சாப்பிடும் வரை பேசவே இல்லை. பின்னர் அரசு குடிநீர் ஒன்றை வாங்கிக்கொடுத்து தஞ்சை செல்லும் பேருந்து ஒன்றின் இருக்கையில் அந்த தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு கிழே இறங்கி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க எனது பர்சை எடுத்தபோது என் கையை பிடித்து அவர் கசங்கிய பையில் இருந்த கசங்காத ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து தஞ்சாவூர் ஒன்னு என்றார். டிக்கெட் போக மீதம்கொடுத்த ரூபாயில் இருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார்.

தயவு செஞ்சு வாங்கிக்கய்யா நான் இன்னும் அந்த நெலமைக்கு வரல என்றதும், கண்முட்டிய கண்ணீருடனும் உயிர் வீங்க வைக்கும் வலியுடனும் விருவிருவென நடந்து வெளியில் வந்து பேருந்து பிடித்து என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தேன். என் கையில் திணித்து கசங்கிய அந்த 50 ரூபாய் நோட்டை வெறித்து பார்த்தபடியும் அவரை பற்றி எண்ணிப் பார்த்தப்படியு  படுக்கையில் நெடுநேரமாக கிடக்கிறேன். அனைத்தையும் மறந்து.

நான் என் அப்பாவுக்காக எதையுமே செய்யவில்லை. நான் படித்து முடித்து வேலைக்கு போகும் முன்பே இறந்து போனார். அந்த வலி எனக்கு இன்னும் இருந்துகிட்டே இருக்குங்க, பெற்றோரை இன்னும் உயிரோடு விட்டுவைத்திருப்பவர்கள். தயவுசெய்து அவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. மனம் நோக செய்யாதீர்கள்.

*****************************************************************************************

சொல்கிறார்கள்: இருக்க இடம் கொடுத்தால்குட்டிக்கதையுடன் அனுபவம் பேசுகிறது!

சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது போல ஒட்டிப் பழகும் அனைவருமே உள்ளன்போடு இருப்பார்கள் என்பதற்கான நிரந்தர சாத்தியக்கூறு எதுவும் கிடையாது. என்னதான் இளகி உருகி பேசிப் பழகினாலும் சுயநலம் மிக்கவர்களாக சிலர் தங்களது காரியத்திலேயே கண்ணாய் இருப்பார்கள்.

காட்டிலே ஒரு ஞானி தவம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக வரும் விலங்குகள் ஏதேனும் கேட்டால் நிறைவேற்றித் தருவார். ஒரு பொழுது ஒரு சொறி நாய் ஒன்று ஞானியிடம் சென்று என்னை ஒரு ஓநாய் துரத்துகிறது காப்பாற்றுங்கள் என்று கதற கவலைப்படாதே நான் உன்னை ஒரு ஓநாயாக மாற்றி விடுகிறேன் பிறகு உனக்கு தொல்லை இருக்காது என்று ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்ல அந்த சொறி நாய் ஓநாயாக மாறியது .

மனம் போன போக்கில் அச்சமின்றி அக்காட்டிலே வலம் வந்த அந்த ஓநாய் ஒருநாள் ஞானியிடம் சென்று என்னை யானை மிரட்டுகிறது என்று சொல்ல அவரும் மந்திரத்தால் ஓநாயை யானை ஆக்கி விட, அது  யானையாக மாறி மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டிருந்தது. மறுபடியும் ஒரு நாள் ஞானியிடம் ஓடிச் சென்று ஐயா ! என்னை சிங்கம் துரத்துகிறது, அதனிடமிருந்து  காப்பாற்றுங்கள் என்று சொல்ல ஞானி ஒரு வலிமையான சிங்கமாக  மாற்றினார் .

இப்பொழுது அதற்கு தலைக்கனம் வந்தது.  கூடவே ஒரு அச்சமும் வந்தது ஞானியை வேறு யாராவது நாடி சிங்கமாக்க வேண்டினால் அவரும் அவ்வாறு செய்துவிட்டால் தன்னுடைய நிலைமை கவலையாகி விடும். ஆதலால், ஞானி உயிரோடு இருந்தால்தானே வேறு யாரையும் உருமாற்றுவார். எனவே, ஞானியை முடித்துக் கட்ட முடிவு செய்தது அந்த  சிங்கம் ஞானியை கொல்லும் எண்ணத்தோடு ஞானியிடம் நெருங்கிய அந்த வலிமை மிக்க சிங்கத்தை. தனது தவ வலிமையால் உணர்ந்த ஞானி பழைய படியும் மந்திரத்தை ஓதி சொறி நாயாக்கிவிட்டார்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி

கதை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வருகிறது. ஓநாய் இந்த சொறிநாயை விரட்ட இந்த சொறி நாய் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள…. தொங்கு தொங்கு என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படித்தான் சிலருக்கு உதவி செய்யப் போனால் உதவியவரையே ஒரு வழி ஆக்கிட நினைப்பவர்களும் பக்கத்திலே தான் இருக்கிறார்கள். எனவே, எவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை இனமறிந்து இடம் கொடுக்க வேண்டும்!

(தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி அவர்களின் பதிவு)

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதிகளை நல்ல கதைகள் பாடம் நடத்துகின்றன.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
  வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles