இனிய வணக்கம். இன்னொரு புதிய இலக்கையும் நிர்ணயிக்கலாம். புதியதொரு கனவையும் காணலாம். ஏனென்றால் இன்னும் நமக்கு வயதாகிவிடவில்லை – லெஸ் பிரவுன். We are never too old, to set another goal or , to dream a new dream – Les Brown
செய்திகளுக்கு கீழே உங்களுக்கு பிடித்தமான ஒரு நிமிட கட்டுரையும் கதைகளும் தொடர்கின்றன.
16 ஏப்ரல் 2025: சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை அறுப்பது போன்றவை பலாத்கார முயற்சியாக கருத முடியாதா என்பது உள்ளிட்ட இன்றைய செய்திகளில் சில
** மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
** அஇஅதிமுக, பாஜக கூட்டணி அறிவிப்பால் ஓபிஎஸ், சசிகலா, தினகரன், செங்கோட்டையன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று ஜூனியர் விகடன் கருத்து கட்டுரை இணையதள பதிப்பில் கருத்து வெளியாகி உள்ளது. |
** பெண்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி நேற்று சட்டமன்றத்திற்கு வரவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதல் சமரசமாக முடிந்திருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். |
** நேஷனல் ஹரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது டெல்லி நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. |
** அமலாக்கத் துறை மீது தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
** ஆவின் முறையீடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
** தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகத்தின் சார்பில் மறு பதிப்பு செய்யப்பட்ட 300 ஆன்மீக நூல்களை நேற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலர் செயலகத்தில் வெளியிட்டார். |
** கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான மூடா வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
** சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை அறுப்பது போன்றவை பலாத்கார முயற்சியாக கருத முடியாது என்று சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கருத்து தெரிவித்ததை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு பாலியல் வழக்கில் புகார் தந்த பெண்ணை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கடுமையாக கண்டித்துள்ளனர். |
கட்டுரை: உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல! ஒரு நிமிடம் படிக்கலாமே!
நீங்கள் தோல்வியடைந்தது உங்கள் முடிவல்ல, அது வெற்றிக்கான தொடக்கம்! இந்த வரிகளை மனதிற்குள் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு வாழத் தொடங்கினால் – உங்கள் வாழ்க்கை மாறி விடும். தோல்வி வந்தா முடிவா? இல்லை வெற்றிக்கான முதல் படியா? பலருக்கு தோல்வி வந்தால் அவர்கள் வாழ்வில் பின் தங்கிவிடுகிறார்கள். காரணம்? தோல்வியை அவர்கள் நிறுத்தும் புள்ளியாக பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில், தோல்வி என்பது வெற்றிக்கான பயணத்திலிருந்து நாம் தவறவிட்ட உணர்வை உணர வைக்கும் நிறைவான குறிப்பு!
தோல்வி உங்களை உருவாக்கும். தோல்வி உங்களை உடைக்காது. தோல்வி உங்களை செதுக்கும். ஒரு போர் வீரன் போரில் தோல்வியடைந்தால், அடுத்த முறையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அவர் மட்டும் தான் தெரிந்துகொள்வார். நீங்கள் யாரென்று உண்மையில் தெரிந்துகொள்வீர்கள். வெற்றியின் போது எல்லோரும் உங்கள் பக்கம் இருப்பார்கள். ஆனால் தோல்வியின் போது மட்டும் யாரெல்லாம் உண்மையில் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
தோல்வி உங்கள் மனதின் வலிமையை சோதிக்கும் நேரம். தோல்வியால் உங்களுக்கு புதிய பாதைகள் திறக்கும். ஒரே வழியில் வெற்றி வரவில்லை என்றால், புதிய பாதையை உருவாக்குங்கள். உங்கள் கனவுகளை இழக்காமல் தொடரும் வலிமை கிடைக்கும். நினைவில் வையுங்கள்! தோல்வி என்பது கடைசி அத்தியாயம் அல்ல, அது வெற்றியின் ஆரம்பம்! வெற்றிக்கு செல்லும் வழி தோல்வியின் வழியாகத்தான் செல்கிறது!
நம்பிக்கை உங்கள் ஆழமான சக்தி, அதை மட்டும் இழக்காதீர்கள்! தோல்வி வந்தால் சிரிக்கவும் கற்றுக்கொள்வதும் மறக்காமல் மீண்டும் எழுந்து பயணிக்கவும். ஒருநாளில் உங்கள் கதை மற்றவர்களுக்கான வலிமையான எழுச்சியாக மாறும்! நம்புங்கள்! உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல. அது உங்கள் வெற்றியின் முகம் மறைந்திருக்கும் கதையின் ஆரம்பம் மட்டுமே!
கதை: மகனின் ஆசையை அறிந்து அழுத அம்மா! இது கதையல்ல உண்மை! ஒரு நிமிடம் படிக்கலாமே!
அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. அன்றைக்கு இரவுச் சாப்பாடு முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் போனது. அவர் யதேச்சையாகத் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார்.
“ஏய்… என்னாச்சு?’’ “நேத்து நாலாம் கிளாஸ் படிக்கிற பசங்களுக்கு ஒரு ஹோம்வொர்க் கொடுத்திருந்தேன். `என்னோட ஆசை’னு ஒரு தலைப்புக் கொடுத்து, ‘என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’ னு சொல்லியிருந்தேன்…’’ “சரி… அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’ “படிக்கிறேன்… கேட்குறீங்களா?’’ தலையசைத்தார் கணவர், ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். அதில் ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்.
“நான் ஒரு ஸ்மார்ட்போனாகணும்கிறதுதான் என்னோட ஆசை. ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு ஸ்மார்ட்போன் ரொம்பப் பிடிச்சிருக்கு. சில நேரங்கள்ல என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா ஆபிஸ்லருந்து களைச்சுப் போய் வருவாரு; என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, போன்ல பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு. அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பிஸியான வேலையில இருந்தாலும், போன் ஒரு ரிங் அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. ஸ்மார்ட்போன்ல கேம் விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது போன்ல பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு முக்கியமான விஷயமா இருந்தாலும் நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை. அதனால, அம்மாவும் அப்பாவும் என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக நான் ஒரு ஸ்மார்ட்போனா ஆகணும்னு ஆசைப்படுறேன்…’’
இதைக் கேட்ட கணவரும் நெகிழ்ந்துதான் போனார். “சரி… இதை யார் எழுதியிருக்குறது?’’ “நம்ம வீட்டு பையன்தான்.’’ பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமே பாசம்னு நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களே…! பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்.. உங்கள் மொபைலை சற்றே ஒதுக்கி வையுங்கள். பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்கள் எதிர்காலத்தில் எந்த தவறும் செய்யாமல் சிறந்து விளங்க உதவும். வயதான காலத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் உங்களுக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்: கடவுள் எங்கே இருக்கிறார்?
கடவுள் இருக்கும் இடம்? பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள். அவரிடம், ‘எனக்கு அது வேண்டும்; இது வேண்டும் என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள். சலித்துப் போன கடவுள், எத்தனையோ இடம் மாறினார். ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது. தேவர்களிடம் கருத்து கேட்டார்.
“இமயமலைக்கு சென்று விடுங்கள்…” என்றனர் சிலர். “அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே””நிலாவுக்கு செல்லுங்கள்” என்றார் வேறு சிலர். “எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள்… ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்” என்றார் கடவுள். அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தியளிக்கவில்லை.
கடைசியாக ஞானி ஒருவர் ஒரு யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது. “யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதனின் மனம் மட்டுமே. அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது” என்பது தான் அது.கடவுளும் அவ்வாறே செய்தார்.. ஆனால் மனிதன் அதை இன்னும்கூட உணரவில்லை! கடவுள் நம் மனதில் எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்வோம்!
குரல்கள்: இவர்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்!

நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்களை கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கு என்று அதை பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்! மாநில சுயாட்சியை நிலைநாட்டுவோம்! – சட்டமன்றத்தில் நேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருத்து (Hon’ble M.K.Stalin, Chief Minister of Tamil Nadu)

பெண்களை அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னையில் இன்று காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் – அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edapadi Palanisamy, AIADMK General Secretary)

சட்டசபையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் பிரிவினை வாதத்தை முதல்வர் தூண்டுகிறார் – நைனார் நாகேந்திரன் பிஜேபி மாநில தலைவர் (Nainar Nahendran, BJP State President).

மனநிறைவு அடைவதற்காக எல்லா ஆன்மீக மார்க்கங்களையும் நோக்கி மக்கள் பயணிக்கிறார்கள். அனைத்து ஆன்மீக பாதைகளும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆசையை அங்கீகரிக்கின்றன. அதே சமயத்தில் மனிதன் பேராசை கொள்ளக் கூடாது என்று போதிக்கின்றன. பேராசை காரணமாக லஞ்ச லாவண்யமும் ஊழலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதும் நடைபெறுகிறது. ஆன்மீகம் கூறும் பேராசைபடாதே என்பதற்கான பொருள் என்னவெனில் லஞ்சம் வாங்காதே! ஊழல் செய்யாதே! வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காதே! என்பதாகும் – சென்னையில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு குருபூஜையில் பேசிய லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ். (Hon’ble Dr. V.Ramaraj, Tamil Nadu Lokayukta)

பூங்கா இதழ் (The News Park) கருத்து: பூங்கா இதழை புதிய கோணத்தில் வெளிக்கொண்டு வந்துள்ள ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!