பல்கீஸ் பீவி.மு, சட்டக் கல்லூரி மாணவி – கல்லூரி நிர்வாகம் சரிவர நிருவகிக்கப்பட வேண்டும்.
கல்லூரி காலம் என்பது பல ஆசைகள், கனவுகளுடன் கால்பதித்து பல நினைவுகளுடன் விடைப்பெறும் இடமாகும். கல்லூரியில் வகுப்பறைக்குள் பல விதமான கலந்துரையாடல்கள், கருத்து பரிமாற்றம் ஏற்படும், அது நம்மை வளமையும்படுத்தும், பக்குவமும்படுத்தும். இவ்வாறான கல்லூரி வாழ்வின் தடைகளாக மாணவ, மாணவியர் சந்திக்கும் பிரச்சனைகள் என எண்ணுகையில் சில கல்லூரி மாணவர்களிடம் கருத்துகள் கேட்டதில் அனைவரும் முதன்மையாக ஒப்பு கொள்ளும் பிரச்சனை, பாலியியல் வன்கொடுமைகள். அவை ஆசிரியரினாலோ, சக மாணவரினாலோ, ஏன் கல்லூரிக்கும் அந்த நபருக்கும் சம்மந்தம் இல்லாத அன்னியனால் கூட பாலியியல் வன்கொடுமைகளுக்கு மாணவிகள் இரையாகப்படுகிறார்கள்.
கல்லூரியில் உள்ள விடுதிகளில் அன்னியர்களை அனுமதிக்க கூடாது. விடுதிகள் சரிவர பாதுகாப்பாக அமைதல் நன்று. மாணவர்கள் என்று பார்க்கையில், அவர்கள் மிக அரிதாகவே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சனம் என பலர் கூறினார்கள். வெளிபுறங்களில் இருந்து வரும் போதைப்பொருள் புழக்கம் கல்லூரிக்குள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்கள் வழி தவறுகிறார்கள்.
பல கல்லூரிகளில் கழிவறைகள், விளையாட்டு மைதானம், நூலகங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன. பொருளாதார சுதந்திரம் என்பதும் மாணவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவை அனைத்திலும் பாதிக்கப்பட கூடியவர்கள் மாணவ, மாணவிகள். இதனால் பலருக்கு கல்லூரி வாழ்க்கை பிடிக்காமல் அவர்கள் அந்த காலங்களில் முடங்கி அவர்களுடைய திறமையை வெளிக்காட்ட முடியாத சூழல் ஏற்படுகிறது.
முதலில் கல்லூரி நிர்வாகம் சரிவர நிருவகிக்கப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. கல்லூரிகளில் ஒரு தவறு நடந்தால் அவற்றை தைரியமாக மாணவ, மாணவியர் வெளிக்காட்ட வேண்டும். வெளிக்காட்டும் நபருக்கு பாதுகாப்பும் வேண்டும். கல்லூரியில் படிக்கும் போதே பொருளாதார சுதந்திரம் பெற, பணத்தை ஈட்ட, பணத்தை சேமிக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நல்ல மாணவராக இருப்பதற்கும், உங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து முடிப்பதற்கும் இடையே ஒரு நல்ல சமநிலை இருக்க வேண்டும். குறையுள்ள கல்வி என்று ஏதுமில்லை நாம் புரிந்து கற்று கொள்ளும் வரை…
எஸ். தக்ஷினா, சட்டக் கல்லூரி மாணவி – பேருந்துகளில் ஏற்படும் சிரமங்கள் அகற்றப்பட வேண்டும்
மாணவிகளுக்கு பொது போக்குவரத்து பேருந்துகளில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் உள்ள அண்ணா அறிஞர் அண்ணா கல்லூரிக்கு தனியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதைப்போலவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுக்கு மாணவிகளுக்கான அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் இதன் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
என் ஜீவிதா, சட்டக் கல்லூரி மாணவி – மன அழுத்தம் நீக்கப்பட வேண்டும்
தேர்வுகளில் தோல்வி, தேர்வு எழுதுவதற்கு முன்பே தோல்வி பயம், பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பு, கற்பதில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தம், போட்டி, சமூக மற்றும் பண பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் பல மாணவ, மாணவியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இவர்களில் சிலர் தற்கொலைக்கும் முயலுகின்றனர். இதனால் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் உளவியல் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
ந. ஞானிதா, சட்டக் கல்லூரி மாணவி – வெறுப்பு பேச்சு ஒழிக்கப்பட வேண்டும்
மாணவ, மாணவியரிடையே ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஜாதி மற்றும் மத குழுக்கள் உருவாவதும் இத்தகைய உணர்வுகளை தூண்டும் பேச்சுக்களும் வெறுப்பு பேச்சுகளும்கல்லூரி வளாகங்களில் ஒழிக்கப்பட வேண்டும். மாணவ மாணவியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்படவும் தேவையான மனப்பான்மையை உருவாக்குவது தற்போதைய தேவையாகும்.
ச. ரம்யா, சட்டக் கல்லூரி மாணவி – வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகள் தேவை
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்பட வேண்டும். பட்டப்படிப்பை படிக்கும் சமயத்திலேயே ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ளும் வகையில் திறன் மேம்பாட்டு தொழிற் பயிற்சிகளையும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வழங்க வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த சில வகுப்புகளையும் கட்டாய உடற்பயிற்சியையும் கல்லூரிகளில் கொண்டு வர வேண்டும்.
சு தேவதர்ஷினி, சட்டக் கல்லூரி மாணவி – ஆய்வு முறைகளும் மாணவ மாணவியர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் படிப்பது மட்டுமல்லாது ஆய்வின் அவசியம் குறித்தும் ஆய்வு முறைகளும் மாணவ மாணவியர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆய்வு பத்திரிகைகளிலும் ஆய்வு மாநாடுகளிலும் கட்டுரைகளை சமர்ப்பிக்க வாய்ப்பும் போதிய உதவிகளும் வழங்கப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தா நவீன், சட்டக் கல்லூரி மாணவர், போதைப்பழக்கம் குறித்த விழிப்புணர்வு வேண்டும்
கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க கல்லூரி முதலாம் ஆண்டில் போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு மற்றும் உளவியல் வகுப்பை அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நடத்த வேண்டும். கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
டி.எஸ்.கீர்த்தனா, சட்டக் கல்லூரி மாணவி – மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவிகளிடம் சில சமூக விரோதிகள், நண்பர்களாகி ஆபாசமான புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இது போன்ற செயல்களால் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயல்கின்றனர். அறியாமல் இத்தகைய நபர்களிடம் மாணவிகள் நண்பர்களாக சமூக வலைத்தளங்களில் இணைவதை தடுக்க மாணவிகளுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தவறுகளை புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி, – படிப்பு வராதவர்களுக்கு உள்ள மற்ற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்
இன்றைய மாணவர்களின் பள்ளி கல்லூரி பருவம் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வு என தேர்வு எழுதுவதிலேயே முடிந்து விடுகிறது. மேலும், அவர்களின் மதிப்பும் திறமையும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தீர்மானிக்கபடுகிறது. படிப்பு வராத மாணவர்களுக்கு வேறு என்ன திறமை இருக்கிறது? என்று பார்க்க தவறி விடுகிறது. இன்று கல்வி என்பது லாபம் ஈட்டும் வியாபாரம் ஆகிவிட்டது. பள்ளி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால், அதற்கு ஏற்ற கல்வி சூழல் அங்கு இருப்பதில்லை.
இரா.இராஜஹரிஹரன், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் – ராக்கிங் ஒழிக்கப்பட வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல கல்லூரிக்கு புதிதாக சேரும் மாணவர்களை கொடுமை செய்யும் ராக்கிங் பழக்கம் தற்போது இல்லை எனக் கருதலாம். ஆனால், பெரு நகரங்களில் உள்ள கல்லூரிகளிலும் தொழில் கல்லூரிகளிலும் ஆங்காங்கே சில கல்லூரிகளிலும் ராக்கிங் கொடுமையை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை முற்றிலும் ஒழிக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எஸ். ஏ. சூரியா, சட்டக் கல்லூரி மாணவர் – கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் மேம்படுத்த வேண்டும்
கல்லூரிகளில் பல்வேறுபட்ட ஜாதி மதம், இனம் மொழி போன்ற அமைப்பில் பிரச்சினைகள் மாணவ மாணவியர்களுக்கு நிலவுகின்றன. பொதுவாக கல்லூரிகளில் பாகுபாடு,வெறுப்பு பேச்சு, பாலியல் தொந்தரவு, போதை பழக்கங்கள் போன்றவை கல்லூரிக்கு உள்ளே மற்றும் வெளியே மாணவ மாணவியர்கள் பெரும் பிரச்சனைகளில் தற்சூழ்நிலைகளில் காலகட்டங்களில் சந்திக்கின்றன இவை சமீப காலங்களில் பெரும் பேச்சு பொருளாக காணப்படுகின்றன. ஆனால் இவற்றைத் தாண்டி சமூக கட்டமைப்பில் கல்லூரிகளில் உள்ளே வெளியே நிலவும் பிரச்சனைகளை நிலவுவது தெரியவில்லை. கல்லூரிக்கு உள்ளே மற்றும் வெளியே மாணவர்கள் தங்களின் கலாச்சாரங்களை மாற்றி அமைக்கும் முறையையும் ஏற்படுத்தப்படுகின்றன இவற்றின் மூலம் அவர்களின் கலாச்சாரமும் சமூகத்தின் பழக்க வழக்கங்களும் சற்று வேறுபடுவதால் அவற்றின் சூழல்களும் பிரச்சனைகளும் பாதிக்கப்படுகின்றது.
வ.கா.காவ்யா, சட்டக் கல்லூரி மாணவி – மாணவ, மாணவிகளின் சக உணர்வு மேம்படுத்த வேண்டும்
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்ற எண்ணம் உதித்திட வேண்டும். அதற்கென “சமூக மதிப்பு கல்வி” என ஒரு பாடத்தை ஏற்படுத்தி மனதளவில் சமம் என்பதை மாணவர்கள் மத்தியில் உணர்த்தி, தாழ்வு மனப்பான்மை, தீண்டாமை போன்றவற்றை விளக்குதலால் மாணவர்களிடம் சக உணர்வு தோன்றும். அத்தகைய எண்ணம் வந்தாலே மாணவர்களுக்கு கல்வி மீது இருக்கும் பற்று உயரும்; மேலும் வேரிலேயே கல்வியால் செதுக்கப்பட்ட இந்த நல்லுணர்வு பலதரப்பட்ட மாணவர்களிடையில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை மேலும் வேரூன்றி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வாசுகி, சட்டக் கல்லூரி மாணவி – சிந்திக்கும் திறன் வளப்படுத்தப்பட வேண்டும்
சிந்திக்கும் திறன் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதம். அனைவருக்கும் இந்த வரப்பிரசாதம் கிடைக்கப்பெற்று இருந்தாலும் அதனை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சிந்திக்கும் திறனை தூண்டுவதன் மூலம் அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதில் மாற்றமில்லை. கல்லூரியில் மாணவ, மாணவிகளின் சிந்திக்கும் திறனை தூண்டும் சக்தி படைத்த அமைப்புகள் என்பதிலும் மாற்றமில்லை.. இத்தகைய சிந்திக்கும் திறனை தூண்டக்கூடிய பணிகளில் கல்லூரி நிர்வாகங்கள் திறம்பட செயல்பட வேண்டும்.
என். தாரணி, சட்டக் கல்லூரி மாணவி – வட்டார பேச்சு மொழிகளை கொச்சைப்படுத்தாதீர்
இந்த நவீன காலங்களிலும் சிறிய கிராமத்தில் பெண்களை மேல் படிப்புக்காக வெளி ஊர்களுக்கு செல்ல பெற்றோர்கள், உறவினர்கள் அனுமதிப்பது இல்லை. மீறி அந்த பெண் கல்லூரியில் கால் பதித்தாள் மொழி வேறுபாடு அதாவது வட்டார மொழிகளில் அவள் பேசுவதால் சக மாணவர்களிடையே கேலி கிண்டல் உள்ளாக்கப்படுகிறாள். மாணவர்கள் பொதுவாக கல்லூரி காலங்களில் நட்பு வட்டாரம் பெருகும், நண்பன் என்றாலே நல்லவன் என்று நினைத்து சில தவறான பழக்கத்தை பழகுவது உண்டு. ஒரு பெண் தனது நண்பர்களுடன் உடன் பாதுகாப்பான சூழலில் வெளியில் சென்றால் தவறான பார்வையும் உண்டு.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: கருத்துக்களை அழகாக எழுத்துக்களில் வடிவமைத்துள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் பயிற்சி கட்டுரையாளர்கள் ஆவார்கள். இவர்களுக்கு சமூக பங்களிப்பு மேலும் வெற்றி பெறவும் தாங்களும் சிறந்த வெற்றியாளர்களாக மாறவும் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் சார்பாக வாழ்த்துக்கள்!
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!
Frnds your opinion is very true. Thank you. Good analyse guys