Advertisement

1. சமாளிப்பதற்கு உரிய   மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் – 2. 1940-1980 பிறந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை படித்து மகிழுங்கள்

சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்!

திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தாயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள். இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார். அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.

சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள். முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார். கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார். காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.

அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது. இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது. மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது என்று கூறினார் தாய். உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது. எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

1940-1980 பிறந்தவர்கள் அனுபவித்த மறக்கமுடியாத அனுபவங்கள்

#அது_ஒரு_கனாக்காலம். 6 மணி சங்கு .. 10 மணி சங்கு … 1 மணி சங்கு … 5 மணி சங்கு .. 8 மணி சங்கு… சங்கு ஊதலை கேட்டு நேரம் தெரிந்துகொண்ட காலம்..! மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்து நேரம்.. காலம்.. தெரிந்து கொண்ட காலம் …!

கைக்கடிகாரம் அரிதாக இருந்த காலம்… கைக்கடிகாரம் கட்டியவர்களை வசதி படைத்தவர்களாக பார்த்த காலம்…! கைக்கடிகாரத்தை தினமும் கீ கொடுத்து .. வைண்டிங் செய்து.. நேரம் பார்த்து ..அதனை பொக்கிஷமாக வைத்திருந்த காலம்.!

நாட்டு ஓடு வீடுகள் அதன் நடுவில் முற்றம் .. மழை பெய்தால் குற்றால அருவி போல் கொட்டும் காலம். பெரிய கூட்டுக் குடும்பங்கள். ஓயாத பிள்ளைகள் சத்தம். சாணி தரையில் தவழ்ந்து நகர்ந்த சிறு குழந்தைகள் …! பிள்ளைகள் நிறைந்த சலசலப்பான வீடுகள் …! பிள்ளைகளெல்லாம் வீட்டின் நடு கூடத்தில் … ஒன்றாக விளையாடி.. கதை பேசி.. பாய் விரித்து.. ஏழரை மணிக்கெல்லாம் தூங்கி ..காலை ஆறு மணிக்கு முன் எழுந்த காலம்…!

வீட்டுக்கு ஒரு மாடு … மாட்டு கொட்டகை … கறந்த பாலில் தயிர் உரைக்கு ஊற்றி காலையில் மத்தை வைத்து மோர் கடைந்து … திரண்ட வெண்ணையில் நெய் உருக்கிய காலம் ..!வீட்டு முன் .. பெண்கள் சாணி தெளித்து.. அதிகாலையில் கோலம் போட்ட நாட்கள் ..! சாணி பூசிய அடுப்பாங்கரை .. கரி படிந்த சமையக்கட்டு … சாணி மொழுகி.. கோலம் போட்ட அடுப்பை …. தரையில் உட்கார்ந்து .. ஊதாங்குழாயில் ஊதி … புகையுடன் போராடி .. விறகை பற்றவைத்து .. சமையல் செய்த காலம்…!

பெரியவர்களை .. . பட்டப்பெயர்… சொல்லி மரியாதையாக கூப்பிட்ட காலம் ..! பிள்ளைக் குட்டிகள் பிறக்கும் போது .. வீட்டிலேயே பிரசவம் … மிட் வைப் (midwife) என்று சொல்லக்கூடிய நர்சு அம்மாக்கள்.. செலவில்லாமல் பிரசவம் பார்த்த காலம் ..! ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம் வீட்டில்.. பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரியில்லை என்றால்.. ஐயங்கடை தெரு பிள்ளை வைத்தியர் வீட்டுக்கு சென்ற காலம் ..!

எல்லாம் பாட்டி வைத்தியம் தான் .. காது வலி என்றால் மிளகாய் கூட்டில் காய்ந்த நல்லஎண்ணையை காதில் ஊற்றிய காலம் … வயிற்று போக்குக்கு கடுக்காயை ..நீர் கோர்த்து ..கல்லில் தேய்த்து ..வழித்து ..தண்ணீர் கலந்து சங்கில் கொடுத்த காலம். புண், கீறல், காயம், பூச்சிக்கடிக்கு …கைவசம் தெரிந்த ஒரே மருந்து .. “சைபால்” டப்பா மருந்து தான்..! குப்புசாமி, கோவிந்தசாமி, அந்தோணிசாமி என்ற எல்லா சாமிகளின் பெயரை வைத்து கூப்பிட்ட காலம்..!

வீட்டிலேயே வடகம் …முறுக்கு அச்சில் விரித்த துணியில் பிழிந்து … அதனுடன் தாளிக்கிற வடகம் உருட்டி வெயிலில் காய போட்ட காலம்…! வீட்டில் பச்சரிசி வாங்கி ஊறப்போட்டு காயவைத்து உலக்கையில் இடித்து முறுக்கு சுட்ட காலம்…! பூச்சந்தையில்.. கோடையில்.. பெரிய குடைமிளகாய்.. சின்ன குடைமிளகாய் வாங்கி.. ஈக்கு குச்சியில் குத்தி .. உப்பு ..புளிச்சத்தயிரில் .. புரட்டி .. ..ஊறப்போட்டு .. காயவைத்த காலம் ..!

பெண்கள் நேரம் கிடைக்கும் கிடைக்கும்போதெல்லாம் கம்பிளி நூலினை வாங்கி ஸ்வெட்டர் நிட்டிங் செய்த காலம்…பூச்சந்தையில் சேர் கணக்கில் மல்லிகை பூ மற்றும் கனகாம்பரம் வாங்கி.. வீட்டிலேயே.. பூ பிண்ணிய காலம்..!

டெலிகிராம் தந்தி வந்தால் வீடே கூடி என்ன செய்தி வந்துள்ளது என்று ஆர்வத்துடன் கேட்ட சமயம்…! 

பொழுதுபோக்கு … தாயம் .. பல்லாங்குழி…! சட்டினி .. துவையல் .. குழம்பு மிளகாய் கொத்தமல்லி, அரைப்பதற்கு அம்மி குழவி..! தோசை இட்லி மாவுக்கு ஆட்டுக்கல்… தோசை ஊற்றுவதற்கு கல்லில் செதுக்கிய தோசைக்கல்..! கூவி விற்ற கொக்கு, மணிப்புறா, கௌதாரி, உள்ளான் மற்றும் காட்டு முயல்கள்..! விறகு வண்டிகளில் .. முந்திரி விறகு .. சவுக்கு மிலாறு .. துவரை மிலாறு வாங்கின காலம் …!

பெரிய திண்ணை வீடுகள்.. நடந்து செல்பவர்கள் தைரியமாக வீடுகளில் செம்பு தண்ணி வாங்கி குடித்து .. திண்ணையில் ஓய்வெடுத்து சென்ற காலம்…!

பள்ளிகளுக்கு ஒரு சின்ன மஞ்ச பையில் .. சிலேட்டு, சிலேட்டு குச்சி இரண்டு மூன்று புத்தகங்கள் ..ஸ்கூல் பாக் பற்றி தெரியாத காலம்

பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி .. பெஞ்சு மேல் ஏறி நின்ற காலம்…! பள்ளிப்பருவத்தில் சில்லு, பளிங்கி, பம்பரம் விளையாடிய காலம்..! “சாட் – பூட் – த்திரி” போட்டு … ஐஸ் பாய்.. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலம்..!

பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு..ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; 1960களில் குச்சி ஐஸ் அறிமுகம் .. சைக்கிள் ஹாண்டல் பாரில்… இரண்டு பெரிய பிளாஸ்க் கேண்கள் மாட்டி .. “ஐஸ் ப்ரூட் .. ஐஸ் ப்ரூட்” என்று தெருக்களில் கூவி விற்ற காலம் .. ஐஸ் ப்ரூட் .. சேமியா ஐஸ் வாங்கி.. சொட்ட சொட்ட உறிஞ்சி சாப்பிட்டு.. யூனிபார்ம் சட்டைகளெல்லாம் சிவப்பு கலர் கறையாக மாறின காலம்..!

மரங்களில் ஏறி குரங்கு விளையாட்டு..! பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம். ..! டி.வி., செல்போன் இல்லாத காரணத்தால்.. கதை சொல்பவர்களுக்கு நல்ல மவுசு … குறிப்பாக சினிமா கதை கேட்பதென்றால் ஆர்வமுடன் கேட்ட காலம்…! “புல் புல் தாரா”வை நண்பரிடம் வாங்கி.. நம்பரை பார்த்து…கற்று .. சினிமா பாட்டு வாசித்த காலம் …!

சைக்கிள் டியூப் ரப்பரில் உண்டிவில் செய்து சிட்டுக்குருவிகளை வேட்டையாடிய காலம்..! சைக்கிளில் ஊர் சுற்றிய காலம் …  சைக்கிள் கம்பெனியில் வாடகை சைக்கிளை எடுத்து ..மாரியங்கோயிலுக்கு சென்று … விளாரி செடி …வாதா மடக்கி செடியில் கோத்த மாரியம்மன் கோவில் குச்சி முறுக்கு வாங்கி… சைக்கிள் ஹாண்ட் பாரில் கொடி போல் சொருகி சாப்பிட்ட காலம் ….!

சைக்கிளில் டைனமோ லைட்.. எண்ணெய் லைட் பொருத்தி ஒட்டிய காலம் சைக்கிள் ரிம்மில் குச்சியை வைத்து ரோட்டில் ஒட்டிய காலம்..! குரங்கு பெடல் போட்டு .. சைக்கிள் ஓட்ட கற்ற காலம் ..! சினிமா பைத்தியங்களாக .. ஒரு சினிமா விடாமல் .. நாலணா தரை டிக்கெட்டில் சினிமா பார்த்த காலம்.. படம் பார்த்த பிறகு அந்த பட பாட்டு புத்தகங்களை வாங்கி … சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய காலம் ..!

ஒரு டூரிங் டாக்கீஸ் கூட விடாமல் .. மணலில் உட்கார்ந்து .. கருப்பு வெள்ளை … MGR, சிவாஜி .. சினிமா படங்கள் பார்த்த காலம்..! பெட்ரோமாக்ஸ் லைட்டு .. பாண்டு வாத்தியங்களுடன் … சினிமா பிட் நோடீஸ் கொடுத்து .. அனைத்து வீதிகளையம் சுற்றி வந்த தள்ளு வண்டி தட்டி சினிமா விளம்பரங்கள் ..! சுவரெல்லாம் .. .. “விரைவில் வருகிறது” … “10-10-’63 முதல்” .. “10வது வாரம்” … “கடைசி வாரம்” … ஸ்லிப் ஒட்டிய … வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள் நிறைந்திருந்த காலம்..!

பூரண மதுவிலக்கு.. குடிப்பழக்கம் என்னவென்று தெரியாத காலகட்டம்.. திருட்டுத்தனமாக சாராயம்காச்சி … சைக்கிள் டியூபில் நிரப்பி .. இடுப்பில் சுற்றி .. வந்து விற்றதை கண்ட காலம்..! கரி என்ஜின் பொருத்திய ரயில் வண்டியில் பயணம் செய்து தலைமுடியில் எல்லாம் கரித்தூள் ஆகிய காலம் ..!

சுவரெல்லாம் கரியில் எழுதிய விளம்பரங்கள் … தாஜ் மஹால் பீடி .. 555 பீடி ….. 1431 பயோரியா பற்பொடி .. NVS .. TAS ரத்தினம் பட்டினம் பொடி .. பெரியவர்கள்.. வாழை பட்டையில் லேபிள் ஒட்டி கட்டிய மூக்குப்பொடி பொட்டலம் வாங்கி … உறிஞ்சி .. பொடி போட்ட காலம்..!

லாரி டயரில்.. தோல் வார் கோத்த செருப்பு வாங்கி … எங்கு போனாலும் நடந்து சென்ற காலம் ..! போன் அபூர்வமாக இருந்த காலம்.. பக்கத்து பணக்கார வீட்டு போனை நம்பி வாழ்ந்த காலம் ..அவ்வீட்டின் பக்கத்து வீட்டுக்கோ எதிர் வீட்டுக்கோ போன் வந்தால் …தெரு வாசலில் நின்று எதிர் வீட்டுக்கு கேட்கும்படி “உங்க வீட்டுக்கு போன் வந்திருக்கு … சீக்கரம் வந்து பேசுங்க … லைனில் இருக்கிறார்கள் ..’ என்று கூப்பிட்ட காலம் ..!

மாட்டு வண்டி .. குதிரை வண்டியில் … சவாரி செய்த காலம் .. கார்கள் கிராமத்திற்கு சென்றால் “”பிளசர்” வந்திருக்கு” என்று ஆச்சிரியமாக பார்த்த காலம் ..! சிறுவர்கள் மேல் வார் பொருந்திய அரை டவுசர் ..அரை டிராயர் ..போட்ட காலம் ..! தினந்தோறும் .. மக்கள் கூடி .. ஆல் இந்தியா ரேடியோ .. ஆகாஷவாணி ஆறரை மணி நியூஸ் கேட்ட காலம்..

“நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றி போக மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாக்கிப் போகும் காலத்தின் சுழற்சியால்..! காலம் _மாறுவதற்கே காலம் .. !

பொருளூர் செல்வா
பொருளூர் செல்வா
கட்டுரையாளர் சமூக அறிவியல் சிந்தனையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles