கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கு ஒன்றில் 2007 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிமன்றங்களை உருவாக்கி நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், 2024 ஆம் ஆண்டில் கூட பத்து லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தை நாம் எட்டவில்லை. அதே சமயத்தில், மக்கள் தொகையும் வழக்குகளின் எண்ணிக்கையும் எண்ணிக்கையும் மிக அதிகரித்துள்ளது, இதனால், நீதிபதிகள் அழுத்தத்துக்குள் பணியாற்ற வேண்டியதாக உள்ளது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி கூடுதலாக நீதிமன்றங்களை உருவாக்கி நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் நிலையில், நாடு முழுவதும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 5245 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் உயர் நீதிமன்றங்களில் 364 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் நேற்று பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிவில் அல்லது கிரிமினல் உள்ளிட்ட எந்த ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் ஓராண்டுக்குள்ளாக கிழமை நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட வேண்டும். மேல் முறையீடு உச்சநீதி மன்றம் வரை செய்யப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கில் தீர்வு ஏற்றப்பட வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால்தான் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற நிலையை மாற்ற முடியும். இத்தகைய நிலை உருவாகிட அதிக நீதி நீதிமன்றங்களை உருவாக்கி நீதிபதிகளை நியமிப்பது அவசியமானது. இல்லாவிட்டால் சிவில் வழக்குகளில் கட்டைப் பஞ்சாயத்துகாரர்களின் தலையிடும் கிரிமினல்களின் ஆதிக்கமும் அதிகரிக்கவே செய்யும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனால், பொதுமக்களுக்கு நீதி கிடைக்காமல் போவதோடு சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தி, நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை செய்து, கூடுதல் நீதிபதிகளை நியமித்து, தொழில்நுட்ப வளர்ச்சியை நீதித்துறையில் பயன்படுத்தி வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதை களை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.