Advertisement

கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கட்டும்! தண்டனை கிடைக்கட்டும்! கொலையான குடும்பத்துக்கு என்ன கிடைக்கிறது? – வீ. ராமராஜ் அவர்களால் 1996 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. தற்போதும் பதில் இல்லை

மனிதன் வாழ்க்கை வளம் பெற தேவைப்படும் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப இயற்றும் பொறுப்பு மக்கள் மன்றங்களுக்கு எப்போதும் உரியதாகும். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா. காவல்துறையின் அதிகாரங்களையும் பணிகளையும் பாதுகாத்தல், துப்புத் துலக்குதல், குற்றம் நிகழாமல் தடுத்தல், முறைப்படுத்துதல் என நான்கு வகைபடுத்தலாம். ஆனால், எஞ்சி நிற்கும் ஐந்தாவது பணி என்னவெனில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (victims of crimes) உதவுவதாகும்.

பொதுவாக, குற்ற நிகழ்வுகள் ஏற்படும் போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர். நாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. ஒரு விபத்து நேரிடும் போது காவல்துறையினர் புகாரின் பேரிலோ, தன்னிச்சையாகவோ வாகன ஓட்டுனரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். விபத்தினால் கொடுங்காயம், எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் போது பாதிப்பு அடைகின்றவர்களுக்கு (victims of road accidents) இழப்பீட்டுத் தொகையை வழங்க மோட்டார் வாகன சட்டம் வழி செய்து உள்ளது. பெரும்பாலும் வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டினை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.

தண்ணீரைக் கலந்து பாலை விற்கும் ஒருவரை உணவு ஆய்வாளர் கையும் களவுமாக பிடித்து கலப்படக்காரர் மீது உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்கிறார்.  உணவு ஆய்வாளர் தாம் மாதிரிக்காக எடுத்த பாலை பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டு, சாட்சிகளின் பட்டியலை தயாரித்து, குற்றச்சாட்டினை தாக்கல் செய்து கலப்படக்காரர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியா? நிரபராதியா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் மற்றும் வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால், கலப்பட பாலை விலை கொடுத்து வாங்கி பாதிக்கப்பட்டவர் தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பரிகாரம் தேடி எந்த ஒரு நடவடிக்கையும் கலப்படம் சுலபமாக மேற்கொள்ள முடியாத நிலை 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இருந்தது. ஆனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக நுகர்வோர் பாதிக்கப்படும் போது பாதிப்புக்கு உள்ளாகும் நுகர்வோர் (consumer victims) இழப்பீடு பெறக்கூடிய நிலை ஏற்பட்டது.

கொலை குற்றம் நிகழ்கின்ற போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் வைப்பார்கள். கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர வழக்கறிஞரை வைத்து தான் குற்றவாளி அல்ல என்பதற்கு வாதாட சட்டத்தில் இடம் தரப்பட்டுள்ளது. வழக்கை நடத்த வசதியற்றவர்களுக்கு இலவச சட்ட உதவி வாய்ப்புகளும் இருக்கின்றன. 

ஒரு கொலை குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது ஏதேனும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் மீதான விசாரணை நடைபெறும் போது அவர் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவதும் குற்றவாளி என்றால் சிறையில் அடைக்கப்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு ஏழை குடும்பத்தின் தலைவன் கொலை செய்யப்படும் போது, குற்ற செய்கையால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தின் நிலை என்ன? இதே போல நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு குற்றங்களின் காரணமாக பாதிக்கப்பட்டவரின் (victims of crimes) கதி என்ன என்பது முக்கியமான கேள்வியாகும்.  

குற்றங்களால் கொடுங்காயம் அல்லது உடல் உறுப்புகள் இழப்பு போன்றவை ஏற்படும் போது குற்றவாளிக்கு தண்டனை அளிப்பதை காட்டிலும் அவசியமானது பாதிப்படைந்தவருக்கு மருத்துவ உதவியும் இழப்பீடு வழங்குவதாகும். பாதிக்கப்படுவோர் அனைவரும் உடனடி மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதி படைத்தவர்களாகவும் எதிர்கால இழப்புகளை தாங்கிக் கொள்ள கூடியவர்களாகவும் இருக்க முடியாது. நாளுக்கு நாள் சமூக குற்றங்களும் தனிமனித குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இன்றைய திரைப்படங்கள் பலவற்றில் சித்தரிக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப பாதிக்கப்பட்டோருக்கு குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கான உதவி நடவடிக்கைகள் (victims assistance) மற்றும் உதவி நிதி (victims fund) போன்ற திட்டங்கள் உடனடி தேவையாகும்.

குற்றங்களால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ உலக அளவில் சர்வதேச மாநாடுகள் நடைபெற்று சர்வதேச வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குற்ற செயல்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு கிடைக்க முழுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். இத்தகைய சட்டத்தை தேவையான வடிவில் உடனடியாக உருவாக்குவதும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி அமைப்புகளை ஏற்படுத்துவது தற்போதைய தேவையானது தேவையாகும்.

“நன்றி:  தினமணி 27.  மே 1996” 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles