Advertisement

ஒரு நிமிடம் செலவு செய்து படித்து மகிழலாமே! – மனதை தொடும் வலைத்தளத்தில் படித்த – பிடித்த – சில வினாடிகளில் படிக்கக்கூடிய கதை 

ஒரு பனை ஓலைக் குடிசை… உள்ளே நான்கைந்து சட்டி பானை…
வெளியே ஒரு விசுவாசமான நாய்…
பால் கறக்கும் ஒரு பசுமாடு…. 

இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்…
இரண்டு மண்வெட்டி…

பத்து ஆடுகள்….
ஒரு சேவல்…
ஐந்து கோழி… 30 குஞ்சுகள்.

இரண்டு ஏக்கர் நிலம்…. 
அதிலொரு கிணறு….
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்…
 
தென்னை மரத்தடியில்
ஒரு முருங்கை மரத்தோடு,
ஒரு கருவேப்பிலை மரமும்…

பக்கத்தில் பத்து வாழைமரம்…
அடுத்து ஒரு புளியமரம்…
பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்…

விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்…
மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்…
மீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும் சோளமும் கேழ்வரகும்…
தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும். 

இவை மட்டுமே போதும்…
எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க…..
உலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்….
ஒரு சிறுவனின் செருப்பை கடல் அலை அடித்துச் சென்றது…!
அவன் கடற் கரை மணலில் “இக்கடல் ஒரு திருடன்” என எழுதிவைத்தான்…!

ஒரு மீனவனுக்கு அபரிமிதமான மீன்களை கடல் அள்ளிக் கொடுத்தது…!
அவன் கடற் கரையில் “வாரிவழங்கும் கடல் ” என பதிந்து வைத்தான்…!

கடலில் முத்துக்குளிக்கும் ஒருவனுக்கு முத்துக்கள் கிடைத்தன…!
அவன் கடற் கரையில் “வளம் மிக்க கடல் ” என்று எழுதி வைத்தான்…!

இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி மரணித்தான்…!அவனது தாய் ” இது ஒரு கொலைகாரக் கடல் ” என எழுதிவைத்தாள்…!

பின்னர் ஒரு பேரலை வந்து அவர்கள் கரையில் பதிந்து வைத்த யாவற்றையும் அழித்துவிட்டு, கடல் அன்றாடப் பணியை தொடர்ந்தது…!

மனிதர்களின்சில  புரிதல்களை.. மனதுக்குள் கொண்டு செல்லவேண்டியதில்லை…!
அவரவர் தங்களின் அனுபவத்தை மாத்திரமே தெரிவிப்பார்கள்…!

வாழ்க்கையைகடக்க வேண்டுமெனில், பக்குவபடுத்திக் கொண்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியது  தான்…!

ஆனால்,தெளிவான புத்தியோடும், நேர்மையான பார்வையுடனும் ..அவதானமாக பயணிப்பது,மிக முக்கியமாகும்…!
அப்பா மாறவேயில்லை. யாரோட அப்பா எல்லாம் இந்த மாதிரி இருக்காங்க
பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் இன்ஜினியரிங் முடித்து விட்டு பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில் நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய்.

அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும். அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார். அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,”உங்களுக்கு எதாச்சும் வேணுமா” அப்பா பதில் சொல்லவில்லை. அம்மாட்ட பேசு… என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார். 

நானும் அம்மாவிடம், பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல… இவரெல்லாம்…” என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு, மற்ற கதைகளை, அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும் எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.

ஓரிரு நாட்கள் கழித்து என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன். அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்துவது. என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார். 
பணியில் சேர்ந்த தகவலும், சம்பள விவகாரங்களும் அப்பாவிற்கும் தெரியும். அதனால் இனி மாதச் செலவுக்காக அதில் பணம் போட மாட்டார் என நினைத்திருந்தேன். அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக் கொண்டதால் அந்த வங்கிக் கணக்கைப் பார்க்கவில்லை.

முதல் மாதச் சம்பளம் வாங்கி அது தீரும் நிலை வந்து பழைய அக்கவுன்டில் ஏதாவது இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால் அதில் வழக்கம் போல, அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார். 

அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது. அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என் பிறந்த நாளுக்கும் நான் வீட்டிற்கு வரும் முன்னமே துணிமணிகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை…தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார், வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும், ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது, ஆனால் உறுதியாக இருக்கும்.

நான் போகும் பாதை எல்லாம் என் தந்தை போட்டு வைத்தது, எனை சேரும் செல்வம் எல்லாம் அவர் பார்த்து விதைத்தது! கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன். அப்பா மாறவேயில்லை. இது போல் ஆயிரம் அப்பாக்கள்.
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். 

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்குநான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன் தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும் போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்த போதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். 

இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர் “மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.”

அரசர் சொன்னார். “நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத் துண்டுகள் தான் கிடைத்தது.  ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம்” என்றார்.

ஆம்..  அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு. 

டாப்சிலிப்: பொள்ளாச்சி அருகே உள்ள மாசு இல்லாத சொர்க்க பூமி https://theconsumerpark.com/topslip-tamil-nadu-tour-nature

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles