Advertisement

புதிய ஹிட்லர் யார் தெரியுமா? தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வக்கீல் இருக்கப் போகிறார் தெரியுமா? என்பது உள்ளிட்ட கருத்து வெடிகளை வீசும் வாக்காளர் சாமி சொல்வதைக்   கேளுங்களேன்!

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர். 

“இஸ்ரேல் ராணுவம் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் முகாமின் நுழைவாயிலை தகர்த்து உள்ளே நுழைந்ததும் அமைதிப்படையை லெபனானை விட்டு வெளியேற இஸ்ரேல் கூறுவதும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை இஸ்ரேல் கண்டித்ததும் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் உச்சகட்டமாக காசாவில் உள்ள மக்களுக்கு குடிநீர், உணவுப்பொருள் உட்பட  அத்தியாவசிய பொருட்கள் எதுவும் சென்றடையாமல் தடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது. பாலஸ்தீன மக்கள் முழுவதும் பட்டினியால் இறந்து விடுவார்களோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இஸ்ரேல் பிரதமரின் நடவடிக்கைகள் எங்கு கொண்டு செல்லும் என்பது தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி. 

“இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஜெர்மனின் அதிபர் ஹிட்லர் யூத மக்களை இனப்படுகொலை செய்ததால் தப்பித்து வந்த யூதர்கள் குடியேறி வாழ்வதற்கு வழங்கப்பட்ட இடம்தான் இன்றைய இஸ்ரேல். இதே இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது என்றும் இஸ்ரேலிய பிரதமர் சர்வாதிகாரியான ஹிட்லரின் மறு உருவம் என்றும் குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன” என்றும் கூறினார் வாக்காளர் சாமி.

“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன? அவை எவ்வாறு ஒரு நாட்டின் வளத்தை எவ்வாறு பாதிக்கின்றன? என்பது குறித்து ஆய்வு செய்தமைக்காக பேராசிரியர்கள் மூவருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருப்பது தற்போதைய உலகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி நாடுகளை எங்கு கொண்டு செல்ல செல்லும்? என்பதை காட்டியதற்காக வழங்கப்பட்ட விருதாக சிந்தனையாளர்கள் பலர் கருத்து தெரிவித்து கொள்கிறார்கள்.” என்றும் கருத்து வெடியை வீசினார் வாக்காளர் சாமி. 

“உலகச் செய்திகளாகவே மூட்டைகளை அவிழ்த்து விடுகிறீர்கள். உள்ளூர் செய்திகள் இல்லையா? சாமி” என்றேன் நான். “பாகிஸ்தானில் நடைபெறும் சங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டிற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சென்றுள்ளார். ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவின் அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறை. இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தளமாக இந்த மாநாடு அமையப்போவதில்லை என்று கருத்து தெரிவித்தார் வாக்காளர் சாமி. 

“மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் நகர்வுகள் விட்டுக் கொடுக்கும் தன்மையில் அமைந்தால் மட்டுமே மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான வெற்றியைப் பெற முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவ்வாறான நகர்வுகள் மூலம் எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் இருக்க ராஜதந்திரங்களும் நடக்கத்தான் செய்யும்” என்றும் கருத்து வெடியை வீசினார் வாக்காளர் சாமி.

“சாமி! நான் உள்ளூர் செய்திகள் என   கூறியது தமிழகச் செய்திகள் இல்லையா? என்று” என்றேன் நான். “தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாட்டுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. தற்போது இயற்கையின் சீற்றம் காரணமாக அறிவிக்கப்பட்ட தேதியில் மாநாடு நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மாநாட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதும் பாதகமாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்குமென? என்று கருத்து தெரிவித்தார் வாக்காளர் சாமி.

“தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில் இருக்க வேண்டிய 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 இடங்கள் காலியாக உள்ளன. இதைப்போலவே, அரசு சட்டக் கல்லூரிகளில் இருக்க வேண்டிய 206 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 70 இடங்கள் காலியாக உள்ளன. பல சட்டக் கல்லூரிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், பெரும்பாலான அரசு சட்டக் கல்லூரியில் ஓரிரு நிரந்தர ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே, பல அரசு சட்டக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் இணை பேராசிரியர்களே பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. தமிழகத்தில் 40-க்கு மேல் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. வருங்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் சட்டத்தில் பட்டம் பெற்றவராக தமிழகத்தில் இருப்பார்” என கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles