ஏழு கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மக்கள் மூத்த குடிமக்கள் ஆவார்கள். இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில், மொத்த மக்கள் தொகையில் 13.6 சதவீதமாக உள்ள மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2031 ஆம் ஆண்டு 18.2 சதவீதமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதும் அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அவசியமான ஒன்றாகும்.
கடந்த 1991 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மூத்த குடிமக்களுக்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 41 ஆம் கோட்பாடு மூத்த மக்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான கொள்கை வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கையை அமல்படுத்தும் துறையாக மத்திய அரசின் சமூக நீதித்துறை செயல்படுகிறது.
தேசிய அளவில் மூத்த குடிமக்களுக்கான கவுன்சில் கடந்த 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது எனினும் இதன் செயல்பாடுகள் அனைவரும் அறியும் வகையில் இல்லை. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை மூத்த குடிமக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழகத்தில் முதியோர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு மாதிரி கொள்கையை இந்திய அரசியலமைப்பின் 41-ஆம் கோட்பாட்டின்படி உருவாக்கியுள்ளது. மூத்த குடிமக்களின் நலனுக்காக இயக்குநரகம் (directorate) ஒன்றை தமிழகத்தில் உருவாக்க இந்த கொள்கை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் முதியோர் இல்லங்கள் சில உள்ளன. பல தனியார் தன்னார்வ அமைப்புகளுக்கு முதியோர் இல்லங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இவற்றை சமூக நல துறையே கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் சார்பில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படுவது குழந்தைகள் இல்லாதவர்களுக்கும் எவ்வித வசதியும் இல்லாதவர்களுக்கும் உட்பட பலருக்கு உதவிகரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் சார்பில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் மாவட்டங்களில் முதியோர் காப்பகங்களை அமைப்பதற்கு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி விட்டதா? என்பது என்பதும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எப்போது அமல்படுத்தப்படும் என்பதும் தெரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்களை அரசின் சார்பில் அமைப்பதோடு முதியோர் நலக் கொள்கையை வலுப்படுத்தி முதியோர் நலனில் தமிழகம் முன்னோடியாக செயல்படத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
முதியோர் இல்லங்களை கண்காணிக்கவும் முதியோர் உரிமைகளை பாதுகாக்கவும் முதியோர் நலனை வலியுறுத்தவும் முதியோர் நலத்திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தவும் முதியோர்களிடையே உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் முதியோர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதனை செயல்படுத்துவதற்கு முன்பாக இந்த ஆணையத்தை அமைக்கும் வகையில் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்பதே முதியோர்களின் விருப்பமாக உள்ளது. இன்றைய இளைஞர்களும் நடுத்தர மக்களும் நாளைய முதியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாளைய நமது உரிமைகளை இன்றே முதியோர்களுக்கு வழங்குவது அவசியமானதாகும்.