Advertisement

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள் – ஒரு நிமிடம் படியுங்கள்

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்

கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்…தேசிய நெடுஞ்சாலையில்…! நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது… பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது! ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள். ஒரு விலையுயர்ந்த காரில்…இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது! அது உங்களுக்குப் பிடிக்கவில்லை! வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள். அவரும் உயர்த்தியிருப்பார் போல…! இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக …!

சளைத்தவரா நீங்கள்…? வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள். அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார். நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி… 120ஐத் தொடுகிறீர்கள். இப்படியே போனால்….. முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இந்நிலையில்….உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!! இப்போது…..உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா…? அல்லது அந்த இளைஞரா…? நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி…பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்… இப்போதோ…ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்…கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! காரணம்…. வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்! தனக்கு எது தேவை… எது வேண்டும்… தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி…அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து…தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு…பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்! உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்! நாமே ஓட்ட வேண்டும்! வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்! அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை… நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது… நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை… எல்லையை…எளிதாக… பாதுகாப்பாக…. சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை

வயதான  தந்தையுடன் மகன் ஒருவர் வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது, சுமார் ஒரு மணி நேரம் ஆனது அவரது நண்பருக்கு பணம் அனுப்பி பின் அவருடைய ரிடயர்மென்ட் பணம் தொடர்பாக பேசி வீடு வந்து சேர! ஆவல் மிகுதியில் அப்பாவிடம், ஏன் நீங்கள் ஆன்லைன்ல நெட் பேங்கிங் பண்ண கூடாது, நீங்க வங்கிக்கு போக தேவை இல்லை, நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை, உங்கள் நேரமும் வீண் ஆகாது என்று  மகன் யோசனை சொல்ல!

அதற்கு அவரது  அப்பா! ” மகனே! இந்த நெட் பேங்கிங் இருந்தால் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல தேவை இல்லை ஆனால் வீட்டில் முடங்கி போவேன்! இன்று வங்கிக்கு வந்ததால் என் நான்கு நண்பர்களை சந்திக்க முடிந்தது. எங்கள் நட்பை அன்பை பரிமாறி கொள்ள முடிந்தது. வங்கி ஊழியர் ஒருவரின் நட்பும் கிடைத்துள்ளது”.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் உடம்பு சரி இல்லாமல் படுக்கையில் இருந்த போது! நான் எப்பொழுதும் பழம் வாங்கும் கடைக்காரர் என்னை வந்து பார்த்து, அமர்ந்து பேசி ஆறுதல் சொல்லி விட்டு சென்றார்! போன வாரம் உன் அம்மா காலையில் வாக்கிங் செல்லும் போது கால் தடுக்கி கீழே விழ அங்கு இருந்த நம் மளிகை கடை அண்ணாச்சி ஆட்டோ வைத்து அம்மாவை வீட்டில் வந்து விட்டு சென்றார்”.

“இந்த மனித உறவுகள் நீ சொல்லும் ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் -ல் கிடைக்குமா! நான் இருக்கும் இடத்திலேயே எல்லா பொருட்களும் கிடைக்கும் என்பதற்காக உயிரில்லா கணிப்பொறியுடன் உறவை வைத்து கொள்ள வேண்டுமா! நான் சந்திக்கும் மனிதர்கள் நட்பாக, நல்ல உறவுகளாக மாறுகிறார்கள்! இவைகளை உன் அமேசான், பிளிப்கார்ட் தருமா! தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை! மனிதர்களுடன் அதிகம் செலவு செய்ய வேண்டும்” என்று சொல்லி முடித்தார் தந்தை!

பொருளூர் செல்வா
பொருளூர் செல்வா
கட்டுரையாளர் சமூக அறிவியல் சிந்தனையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles