நகரில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனைக்கு நேர் எதிரில் உள்ள தெருவில் எங்கள் வீடு இருந்தது. நாங்கள் கீழே உள்ள பகுதியில் வாழ்ந்து வந்தோம். மேலே உள்ள அறைகளை அந்த கிளினிக்கின் நோயாளிகளுக்காக வாடகைக்கு விட்டு இருந்தோம். ஒரு கோடை கால மாலை நேரத்தில், நான் இரவு உணவுக்கான தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும்போது, கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. நான் கதவைத் திறந்தேன். பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கும் ஒருவர் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தேன்.
என்னுடைய எட்டு வயது மகனை விட சிறிதளவு உயரமாக இருந்தார். அவரது முகம் சமநிலை அற்று, தலை கீழாக, வீங்கி, வறண்டு சிவந்துபோய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இருப்பினும், அவரது குரல் இனிமையாக இருந்தது. அவர் கூறினார், “நான் உங்களைப் பார்க்க வந்ததன் காரணம், எனக்கு இங்கு ஒரு அறை, இன்று இரவு மட்டும் தங்குவதற்கு வேண்டும். இன்று காலை, ஒரு சிகிட்சைக்காக இங்கு வந்தேன். நான் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து வந்திருக்கிருக்கிறேன். நாளை காலை வரைக்கும், அங்கு திரும்பிப் போவதற்கு பஸ் கிடையாது“.
அவர் என்னிடம் சொன்னார், “நான் மதியத்தில் இருந்தே ஒரு அறைக்காக அலைந்து திரிந்தேன். எனக்கு யாருமே தங்குவதற்கு அறை தரவில்லை. என்னுடைய முகத்தைப் பார்த்து, அவர்கள் மறுத்திருக்கலாம் என யூகித்துக் கொண்டேன். என் முகம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பது எனக்குத் தெரியும். அந்த போர்டிகோவில் இருக்கும் அந்த ஆடும் நாற்காலியில் நான் படுத்துத் தூங்கிக்கொள்கிறேன். என்னுடைய பஸ், அதிகாலையிலேயே கிளம்பி விடும்“.
“உங்களுக்குப் படுப்பதற்கு நாங்கள் படுக்கை ஏற்பாடு செய்கிறோம்” என்று கூறினேன். நான் உள்ளே சென்று இரவு உணவை, தயாரித்து முடித்தேன். நாங்கள் சாப்பிட ரெடியானவுடன், நான் அந்த வயதான மனிதரை, எங்களுடன் சேர்ந்து, உணவு அருந்த அழைத்தேன். “வேண்டாம், உங்களுக்கு நன்றி. நான் நிறையவே சாப்பிட்டு விட்டேன்” என்றார்.
இரவு உணவை முடித்தவுடன் அவரிடம் சிறிது நேரம் பேசுவதற்காக நான் போர்டிகோவிற்கு சென்றேன். அவரிடம், பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே, அந்த சிறிய உடலுக்குள் மிகவும் பரந்த இதயம் ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்தேன். அவர் மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறார். தன்னுடைய மகளையும், அவளுடைய 5 குழந்தைகளையும், இவர்தான் காப்பாற்றி வருகிறார். மகளின் கணவருக்கு முதுகில் ஏற்பட்ட பலத்த காயத்தால், உடல் ஊனமுற்ற, முடவன் போல ஆகி விட்டார். தான் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.
இதை அவர், குறை கூறும் விதமாகக் கூறவில்லை. ஒவ்வொன்றாக கூறும் போது, கடவுளுக்கு முதலில் நன்றி கூறிக்கொண்டு, அவரது ஆசிகள்தான், எனக்குத் தேவை என்றார். அவருக்கு நோய் இருந்தாலும், அதனால் எந்த வலியும் இல்லாமல் இருப்பதற்கு அவர் கடவுளுக்கு நன்றிக் கடன்பட்டு இருப்பதாகக் கூறினார். அவருக்கு தோல் புற்றுநோய் (Skin Cancer) இருந்தாலும், தனது வேலையை செய்வதற்கு, வலிமை கொடுத்ததற்காக அவர், கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
எங்கள் குழந்தையின் அறையில் இருந்த, ஒரு சிறிய கட்டிலை (கேம்ப் காட்) அவருக்குப் படுப்பதற்காகக் கொடுத்தோம். நான் காலையில் எழுந்து வந்தபோது, படுக்கை விரிப்புக்களை ஒழுங்கான முறையில் மடித்து வைத்திருந்தார். போர்ட்டிகோவின் வெளியே நின்று கொண்டிருந்தார். காலை உணவை வேண்டாம் என மறுத்து விட்டார். அவர் பஸ்ஸில் ஏறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, அவர் என்னிடம் ஒரு பெரிய உதவி கேட்பது போல கேட்டார். அவர் கூறினார், “அடுத்த மருத்துவ பரிசோதனைக்காக, நான் வரும் போது, நான் இங்கு தங்கலாமா? நீங்கள் எனக்கு எதுவுமே தர வேண்டாம். இந்த நாற்காலியில் நான் நல்ல முறையில் தூங்கிக் கொள்வேன்” என்றார்.
“உங்கள் குழந்தைகள், என்னிடம் நடந்து கொண்டவிதம், நான் என் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். வளர்ந்தவர்கள்தான் என் முகத்தை வெறுக்கின்றார்கள். ஆனால், குழந்தைகள் மனதில், எதுவுமே நினைப்பது இல்லை.” “நீங்கள் அடுத்த முறையும் இங்கு வரலாம்” என, நான் அவரிடம் கூறினேன்.
அடுத்த முறை அவர் வரும் போது, காலை 7 மணிக்கே வந்து விட்டார். எங்களுக்குப் பரிசாக, மிகப் பெரிய மீனும், நான் பார்த்திராத மிகப் பெரிய அளவிலான சிப்பிகளும் கொண்டு வந்தார். “நான் இன்று காலையில், இங்கு கிளம்புவதற்கு முன்பாக இதைப் பிடித்தேன். அவை நன்றாகவும், புதியதாகவும் இருக்கிறது, என்றார்.” அவரது பஸ் அவர்கள் ஊரில் இருந்து அதிகாலை 04-00 மணிக்கு கிளம்பிவிடும் என்பது எனக்குத் தெரியும். எங்களுக்காக, இதைக் கொண்டு வருவதற்கு, அவர் எத்தனை மணிக்கு சென்றிருக்க வேண்டும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அடுத்தடுத்து, அவர் நிறைய இரவுகள் எங்களுடன் தங்கினார். மீனோ, சிப்பிகளோ அல்லது அவர் தோட்டத்தில் இருந்து காய்கறிகளோ என்று ஏதாவது ஒன்றை ஒரு போதும் அவர் வாங்கி வராத நாளே கிடையாது. சில வேளைகளில், தபாலில், பார்சல்களாக வரும். எப்போதும் ஸ்பெஷல் டெலிவரி என்றே வரும். மீன்களும், சிப்பிகளும், கீரை, பசலைக் கீரைகளால் ஆன பெட்டிகளில் வைத்து வரும். கீரைகள் சுத்தமாகக் கழுவப்பட்டு, புத்தம் புதியதாக இருக்கும். இதை மெயிலில் அனுப்ப அவர், மூன்று மைல் தூரம் நடந்து சென்றாக வேண்டும். அவரிடம் பணம் குறைவாக இருப்பதும் கூட நான் அறிவேன். இது அனைத்தும் சேர்ந்து, அவரது பரிசை மிகவும் விலைமதிப்பு உள்ளதாக்கிவிட்டது.
நான் இந்த பரிசுகளைப் பெறும் போதெல்லாம், சில விசயங்கள், எனது ஞாபகத்திற்கு வரும். எனது அண்டை வீட்டுக்காரர், கூறியதை, நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. அந்த வயதான மீனவர், முதல் நாள் எங்கள் வீட்டில் தங்கி விட்டு, காலையில் சென்றபோது, அவர் கூறினார், “நீங்கள், அந்த மோசமான முகத் தோற்றம் கொண்ட மனிதரை உங்கள் வீட்டில் தங்க வைத்தீர்களா? என்னிடம் அந்த மனிதர், முதலில் உதவி கேட்டார். ஆனால் நான் திருப்பி அனுப்பிவிட்டேன்! இந்த மாதிரி ஆட்களை, நீங்கள் தங்க வைத்தால், நீங்கள் வாடகை ஆட்களை இழக்க வேண்டியதுதான்”.
நாங்கள் வாடகைகளை ஓரிரு முறை இழந்திருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி அறிந்ததற்காக எங்கள் குடும்பம் முழுவதும், எப்போதும் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். அவரிடமிருந்து, நாங்கள் கற்றுக்கொண்டது என்னவெனில், கெட்டவற்றை குறை ஏதும் கூறாமல், ஏற்றுக்கொள்ள வேண்டும்; நல்லதை நன்றியுணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சமீபத்தில், எனது சினேகிதி ஒருத்தியைச் சந்திக்க சென்றேன். அவள் ஒரு பசுமைக் குடில் வைத்திருந்தாள். அவள் வைத்திருக்கும் மலர்களைக் காண்பித்துக் கொண்டு வரும் போது, அங்குள்ளவற்றில், மிகவும் அழகான மலரான கோல்டன் செவ்வந்தி அருகே வந்தோம். அதிலிருந்து நறுமணம் வீசியது. ஆனால், நான் அடைந்த மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்தச் செடி ஒரு வளைந்த, துருப்பிடித்த வாளி ஒன்றில் வளர்ந்து கொண்டிருந்தது. ‘இந்த செடி என்னிடம், இருந்தால், நான் இதை ஒரு மிக அழகான தொட்டியில் வைத்து வளர்த்து இருப்பேன்’ என எனக்குள் நினைத்துக் கொண்டேன். என் சினேகிதி என் மனதை மாற்றினாள்.
அந்த இனிமையான வயதான மீனவனின் ஆன்மா இந்த மாதிரி உடலில் இருப்பதைப் பற்றி கடவுள் ஒன்றும் நினைக்க மாட்டார். நாம் நம் கண்களால் பொருட்களைப் பார்ப்பதுபோல கடவுள் பார்க்க மாட்டார். மனிதர்கள் வெளிப்புற தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறார்கள்; ஆனால், கடவுளின் பார்வையோ உள்ளுக்குள் இருப்பதைத்தான் பார்க்கிறது. நமது கண்கள் உடலைப் பார்ப்பதற்குப் பதிலாக ஆன்மாவை மட்டும் பார்த்தால், நாம் பார்க்கும் ‘அழகு’ என்பதன் பொருள், எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்…