இருப்பிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டத்தில் நெவாசா தாலுகாவில் சனி சிக்னாபூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் மும்பையில் இருந்து 248 கிலோ மீட்டர் தொலைவிலும் அகமத் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அவுரங்காபாத் நகரில் இருந்து 84 கிலோ மீட்டர் தொலைவிலும் சாய்பாபா திருத்தலமான ஷீரடியில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2049 வீடுகளில் 8,528 மக்கள் வசிக்கிறார்கள். சனி சிக்னாபூர் கிராமத்திற்கு செல்லும் பாதை கரும்பு வயல்கள் சூழ்ந்ததாக அமைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் கரும்பிலிருந்து சாறு எடுக்க இயந்திரங்களுக்கு பதிலாக காளைகளை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான சாறு எடுக்கும் மையங்கள் ரசவந்தி என்று அழைக்கப்படுகின்றன.
சனீஸ்வரர் கோவில்
சனி சிக்னாபூர் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு அமையப்பெற்ற இந்த கோயிலுக்கு தற்போது தினமும் சுமார் 40,000 பக்தர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. “ஜாக்ருத் தேவஸ்தானம்” (“உயிருள்ள கோவில்”) என அழைக்கப்படும் இந்த கோவிலில் இன்னும் தெய்வம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போது, சனி சிக்னாபூர் கிராமத்தின் வழியாக ஓடிய பனஸ்னாலா ஆற்றின் கரையில் ஒரு கனமான கறுப்புப் பாறை கரை ஒதுங்கியது. உள்ளூர்வாசிகள் 1.5 மீட்டர் பாறாங்கல்லை ஒரு குச்சியால் தொட்டபோது, அதில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்றிரவு, கிராமத் தலைவரின் கனவில் தோன்றிய சனீஸ்வர பகவான் கிராமத்தில் கரை ஒதுங்கிய பாறை அவரது சொந்த சிலை என்பதை வெளிப்படுத்தினார். அதனை கிராமத்தில் வைத்து வழிபட்டால் கிராம மக்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதாகவும் கனவில் சனி பகவான் கிராமத் தலைவரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு கிராமத் தலைவர் ஒப்புக்கொண்ட போது தமது சிலையை பொது இடத்தில் வைக்க வேண்டும் என்றும் மகத்தான சக்திக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருக்கக் கூடாது என்பதால் எவ்வித கதவுகளும் கோவிலை சுற்றி அமைக்கப்படக் கூடாது என்றும் அப்போதுதான் தடையின்றி கிராமத்தை கண்காணிக்க முடியும் என்றும் சனி பகவான் நிபந்தனை விதித்துள்ளார். இந்த புராண கதையின் அடிப்படையிலேயே சனி பகவானின் கோவில் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கதவுகளை அமைக்காமல் தற்போதும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கதவு இல்லா கழிப்பறைகள்
தங்களின் பரிசுத்த பாதுகாவலராக சனி பகவானை கருதும் சனி சிக்னாபூர் கிராம மக்கள் வீடுகளில் கதவுகள் இல்லாத பாரம்பரியத்தை தலைமுறை தலைமுறையாக தொடர்கிறார்கள். விலை மதிப்பு மிக்க நகைகளையும் பணத்தையும் கதவில்லா வீடுகளிலேயே இங்கு வாழும் மக்கள் வைத்திருக்கிறார்கள் இந்த ஊரில் உள்ள கடைகளிலும் கதவுகள் எதுவும் இல்லை. தெரு நாய்கள் வீட்டுக்குள் வராமல் இருக்க வீட்டின் நுழைவாயிலில் கீழ்புறம் மட்டும் மரப்பலகைகளை சாய்த்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறைகளில் கூட கதவுகள் கிடையாது மாறாக நுழைவாயிலை மறைக்க திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. சமீப காலத்தில் கட்டப்படும் வீடுகளிலும் அமைக்கப்படும் நுழைவாயிலில் கதவுகள் அமைக்கப்படுவதில்லை.
கதவு இல்லா வங்கி
சனி சிக்னாபூர் கிராமத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யுகோ வங்கியிலும் நுழைவாயிலில் கதவு அமைக்கப்படவில்லை. இந்தியாவிலேயே கதவு இல்லாமல் திறக்கப்பட்ட ஒரு வங்கி இதுவாகும். உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கதவு இல்லாமல் உள்ள இந்த வங்கியில் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட கதவு போன்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ள இந்த கண்ணாடி நுழைவாயில் எவ்வித பூட்டும் இல்லாமல் எப்போதும் திறக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது இருப்பினும் பாதுகாப்பு கருதி எளிதில் யாரும் அறியாத வகையில் மின்காந்த பூட்டு (ரிமோட் கண்ட்ரோல் லாக்) இந்த கண்ணாடி நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையம்
சனி சிக்னாபூர் கிராமத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வருகை புரிந்த ஒருவர் தமது காரில் இருந்து காரில் இருந்து பணமும் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ரூபாய் 70 ஆயிரம் தங்க ஆபரணங்களும் திருடு போனதாக புகார் பதிவாகியுள்ளது. இந்த திருட்டு சம்பவங்கள் கிராமத்துக்கு வெளியில் நடைபெற்றதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட காவல் நிலையத்திலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. மேலும், இந்தக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது முதல் கிராம மக்களிடமிருந்து ஒரு புகார் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு, பிட்பாக்கெட், கழுத்தில் அணிந்துள்ள நகைகளை பறித்தல் போன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறுவதாக உள்ளூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
கருத்து மோதல்கள்
இறைவனின் அற்புத சக்திகளைக் காட்டிலும் இந்த கிராமம் தொலைதூரத்தில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் குற்றங்கள் குறைவாக இருப்பதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சமீப காலமாக இந்த கிராமத்தில் வாழும் மக்களில் சிலர் கிராம சபையில் வீடுகளில் கதவுகள் அமைத்துக் கொள்ள அனுமதி கோருகிறார்கள். தமது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் அவரது வீட்டில் மரத்தாலான கதவை அமைத்த மறுநாள் வாகன விபத்தில் இறந்து விட்டதாக இந்த கிராம வாசி ஒருவர் தெரிவிக்கிறார். இந்த சம்பவத்தின் காரணமாக கிராம மக்கள் வீடுகளில் கதவை அமைக்க அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி மறுப்பு
சனி சிக்னாபூர் கிராம சனிபகவான் கோவிலில் கடந்த 300 ஆண்டுகளாக கருவறைக்குள் பெண்கள் நுழைவது அனுமதிக்கப்படுவதில்லை . 26 ஜனவரி 2016 அன்று, 500 க்கும் மேற்பட்ட பெண்கள் குழு கோவிலுக்கு அணிவகுத்து, உள் சன்னதிக்குள் நுழையக் அனுமதி கோரினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பெண்கள் கோவிலின் கருவறைக்குள் நுழைவதை உறுதி செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 8 ஏப்ரல் 2016 அன்று, சனி சிக்னாபூர் அறக்கட்டளை பெண் பக்தர்களை கருவறைக்குள் நுழைய அனுமதித்தது. காலத்துக்கேற்ற மாற்றங்கள் கட்டாயமானது என்பதை இந்த ஊரில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஆக்கத்தில் உதவி: எஸ் தேவதர்ஷினி, நுகர்வோர் பூங்கா & பூங்கா இதழ் இணைய இதழ்களின் பயிற்சி கட்டுரையாளர்/நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி
முந்தைய நோயை தெரிவிக்கவில்லை என சிகிச்சைக்கான பணத்தை மறுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் – சாட்டையை சுழற்றும் நுகர்வோர் நீதிமன்றங்கள் https://theconsumerpark.com/medi-claim-insurance-refusal-pre-existing-disease