இன்று காலை ஐந்து மணிக்கு நானும் வாக்காளர் சாமியும் கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி வயநாடு வரை செல்லலாம் என திட்டமிட்டு காலை 5 மணிக்கு கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சந்திப்பது என பேசி இருந்தோம். சரியாக காலை 5 மணிக்கு பேருந்து நிலையத்துக்கு நான் வந்து விட்டேன். ஆனால், வாக்காளர் சாமியை காணவில்லை. காத்திருப்பதை மறப்பதற்கு ஒரு செய்தித்தாளை வாங்கி படிக்கலாம் என்று ஆரம்பித்தேன்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சர்வதேச 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்கவில்லை. ஒரு வெள்ளிப் பதக்கம் ஐந்து வெண்கல பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்ற வரிகளை படித்து முடித்தேன். அதற்குள் வாக்காளர் சாமி நான் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார். நான் படித்த செய்தியை அவரிடம் கூறி “என்ன சாமி, இந்தியா இவ்வளவு மோசமாக ஒலிம்பிக்கில் உள்ளது” என கேட்டேன்.
“ஒலிம்பிக்கில் இந்திய மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. தவறாக பேசாதே” எனக் கூறி என்னை முறைத்தார் வாக்காளர் சாமி. நானும் கோபமாக, “எப்படி வெற்றி?” எப்படி என கேட்டேன். “2024 ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் கலந்து கொண்டன. மொத்தம் 303 தங்க பதக்கங்களுக்கும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன. கலந்து கொண்ட நாடுகளின் பல நாடுகள் ஒரு பதக்கத்தையும் வெல்லாத நிலையில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. ஏதாவது ஒரு பதக்கத்தையாவது வென்ற நாடு 91 நாடுகளில் இந்தியா 84 ஆம் இடத்தை பிடித்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“இதை எப்படி மகத்தான வெற்றி எனக் கூறுவீர்கள்? சாமி” என கேட்டதற்கு, “உனக்கு என்ன சொன்னாலும் புரியாது. பல நாடுகள் பதக்கங்களையே வெல்லவில்லை. அதைப் பார்க்கும்போது நமக்கு மகத்தான வெற்றி. பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியலில் 91 ஆம் இடம் கடைசி என்ற நிலையில் நாம் கடைசியில் இல்லை. அதற்கு முன்னதாக 84 ஆம் இடத்தைப் பெற்று இருக்கிறோம். இது வெற்றி அல்லவா? ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்கவில்லை என்கிறாய். கலந்து கொண்ட நாடுகளில் 63 நாடுகள் மட்டுமே தங்க பதக்கத்தை பெற்றிருக்கின்றன. 303 தங்கப்பதக்கங்களில் நாம் 69 விளையாட்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு 95 தங்கப்பதக்கங்களுக்கான போட்டியில் மட்டுமே இருந்தோம் உங்களுக்கு தெரியுமா?” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் புகழ்வது போல திட்டுகிறீர்கள். எனக்கு ஒரு சந்தேகம் சாமி. 303 தங்கப் பதக்கங்கள் உள்ள நிலையில் நாம் ஏன் 95 தங்கப்பதக்கங்களுக்கான போட்டியில் மட்டும் கலந்து கொண்டோம்?” என கேட்டதற்கு, “நம் நாட்டில் விளையாட்டுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 3400 கோடி செலவிடப்படுகிறது. ஆனால், ஒலிம்பிக்கில் இரண்டாமிடம் பெற்றுள்ள பக்கத்து நாடான சைனாவில் ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி விளையாட்டுக்காக செலவிடப்படுகிறது. ஒலிம்பிக்கில் நடத்தப்படும் எல்லா வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கும் விளையாட்டு வீரர்களை தயார் செய்து அனுப்பும் அளவிற்கு இந்தியாவில் ஆடுகளங்களும் இல்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. ஒலிம்பிக்கில் இந்தியா மகத்தான வெற்றி பெறும் 145 கோடி மக்களின் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிற்கு கிடைக்காமல் வேறு யாருக்கு வெற்றி கிடைத்து விடும். இந்தியா உலகிலேயே நிலப்பரப்பில் ஏழாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு. இந்தியாவுக்கு வல்லரசு நாடுகள் வரிசையில் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று வீர வசனம் பேசினால் மட்டும் போதாது. உரிய திட்டங்களை தீட்டி வெற்றிக்கான வழிவகைகளை செயல்படுத்த வேண்டும் என்றார் வாக்காளர் சாமி.
“அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு உள்ளாக இந்தியாவில் விளையாட்டு துறைக்கான ஒலிம்பிக் 2028 திட்டத்தை விளையாட்டு துறை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்களுடன் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும். அடுத்த ஒலிம்பிக்கில் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளுக்கும் தேவையான ஆடுகளங்கள், பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், எல்லா மாநிலங்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றார் வாக்காளர் சாமி.
“மாநில அரசுகளும் தங்களது நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் விளையாட்டு களங்களை உருவாக்கவும் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டும். திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமல்ல, ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் நிச்சயமாக அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மிகுந்த வெற்றியை பெறும்” என்றார் வாக்காளர் சாமி.
“விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டால்தான் இந்த வெற்றி சாத்தியமாகும். வசனங்களை பேசுவதை விடுத்து வெற்றியை நோக்கி நகர ஒவ்வொரு மாநிலமும் பாடுபட வேண்டும். விளையாட்டு துறைக்கு பிரத்தியோக அக்கறை காட்டும் தமிழக அரசு அடுத்த ஒலிம்பிக்கில் அதிக வெற்றியாளர்களை பெற்றுத்தர முன்னோடி மாநிலமாக விளங்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி. அப்போது நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்ததால் இந்த உரையாடலை முடித்துக் கொண்டு பேருந்தில் ஏற ஆரம்பித்தோம்.