நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் உள்ளிட்ட இணைய இதழ்களை (online journals) அமைதிக்கான உத்திகள் அமைப்பு (Traquility Strategies) வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கான இணையதள தொடக்க விழா நேற்று நாமக்கல்லில் தனியார் அரங்கில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் டி. ஆர். அருண் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் எழுத்தின் வலிமையைப் பற்றி விரிவாக பேசியதாவது.
எழுத்து என்பது முன்னேற்றத்திற்கான பலம் வாய்ந்த ஆயுதமாகும். எழுத்து திறமையை மாணவர்களும் இளைஞர்களும் வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவதோடு சமூகத்திலும் சிறந்த அங்கீகாரத்தைப் பெற இயலும்.
கதை, கவிதை, பொதுவான கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதை இலக்கியத்திற்கான எழுத்துக்கலை (Literature writing) எனலாம். ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு புத்தகங்கள் திறனாய்வுகள் (Research writing) போன்றவற்றை எழுதுவது ஆய்வுகளுக்கான எழுத்துக்கலை எனலாம். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள், பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள், சங்கங்களின் துணை விதிகள் போன்றவற்றை எழுதுவதை சட்ட எழுத்துக்கலை (Legal writing) எனலாம். சட்டங்கள், சட்ட விதிகள் போன்றவற்றை எழுதுவது சட்டமாக்கல் எழுத்துக்கலை (legislative writing) எனலாம்.
ஒரு துறையில் உயர்ந்த கருத்துக்களை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுவதை நிபுணத்துவ எழுத்துக்கலை (Expert writing) என்றும் அறிவியல் தொடர்பான விவரங்களை எழுதுவதை அறிவியல் எழுத்துக்கலை என்றும் தத்துவார்த்த தர்க்கங்களை முன்வைக்கும் வகையில் எழுதுவதை தத்துவ எழுத்துக்கலை (Philosipical Writing) என்றும் நிர்வாக மேம்பாட்டுக்காக சிறப்பாக எழுதுவதை நிர்வாக எழுத்துக்கலை (Administrative writing) என்றும் கூறலாம். இவ்வாறு பல்வகையான எழுத்துக்கலையில் உள்ள நிலையில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்துள்ள துறையில் சிறந்த எழுத்து திறமை படைத்தவராக வளர்த்துக் கொள்வது அவசியமானதாகும்.
அச்சில் வெளியாகும் தினசரி மற்றும் பருவ பத்திரிகைகள், இணையதளத்தில் வெளியாகும் இதழ்கள் போன்றவற்றில் கதை, கவிதை, கட்டுரை உட்பட எழுதப் பயன்படும் இதழியல் எழுத்துக்கலை (Journalistic writing) உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் திறமை படைத்ததாக திகழ்கிறது.
சித்திரமும் கைப்பழக்கம் – செந்தமிழும் நாபழக்கம் என்பதற்கு ஏற்ப எழுத்தாளர்கள் புதிதாக பிறந்து விடுவதில்லை. தாங்களும் முயற்சித்தால் மிகச்சிறந்த எழுத்தாளர்களாக மாற முடியும். இதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் வெளியாகி வரும் நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றிற்கு தங்கள் கட்டுரைகளை அனுப்பலாம். மக்களுக்கு உபயோகமான, சிறந்த மற்றும் தகுந்த படைப்புகள் இந்த இதழ்களில் வெளியாகி வருகின்றன.
நிகழ்ச்சியில் இணையதள வடிவமைப்பாளர் பி. திபேன் இணையதளத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சட்டக் கல்லூரி விரிவுரையாளரும் வழக்கறிஞருமான சாஜ் முன்னிலை வைத்தார். நிகழ்வில் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழ் ஆசிரியர் கதிர்வேல் வரவேற்புரையும் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவியும் நுகர்வோர் பூங்கா சட்ட பயிற்சி ஆய்வாளருமான சி. தக்சினா நன்றியுரையும் ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் பூங்கா மற்றும் பூங்கா இதழின் சட்ட பயிற்சி கட்டுரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஞானிதா, ரம்யா, தக்சினா, ஜீவிதா, தேவதர்ஷினி, நவீன், சந்தோஷ் குமார், லக்ஷித்தா, ஜனனி, கீர்த்தனா, பல்கீஸ் பீவி, ஸ்ரீ நித்யா, மகித் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
புதிதாக தொடக்கப்பட்டுள்ள அமைதிக்கான உத்திகள் அமைப்பின் இணையதள முகவரி: https://tranquilitystrategies.com