கட்டுப்பாடான சுதந்திரம் இன்றைய இளைய தலைமுறை பொதுவெளிகளிலும் ஏன் இல்லங்களில் கூட அவர்கள் நடந்து கொள்ளுகின்ற விதத்தை உற்றுநோக்குகின்ற பொழுது எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ என்று வருத்தப்படவே வைக்கிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமான வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும் என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு விவசாயி புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதைச் சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும், உரமாகச் சாணத்தையும் போட்டார்.
இதைப் பார்த்த அருகே இருந்த ஒரு காட்டுச் செடி இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு தேவையா? எங்களைப் பார், நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கிறாய் என கேலியும் கிண்டலும் செய்தது.
ஆலமரக் கன்று யோசிக்க ஆரம்பித்தது. நானும் பல செடிகளைப் போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன? எப்படியாவது இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது,
மறுநாள் அந்த காட்டுச் செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப் பட்டது. அதில் காட்டுச் செடியும் வெட்டி எறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன், இது என்ன செடியப்பா ? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சு வச்சிருக்கீங்க ?என்று கேட்க…
இதுவா இது ஆலமரக் குச்சி. இது மற்ற செடிகள் மாதிரி சீக்கிரமாக வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல, பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதனால் தான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி. அந்த ஆலமரக் கன்று தன்னைக் கட்டி வைத்திருக்கும் குச்சியும் சுற்றி இருக்கும் வலையும் தான் இன்னும் நன்றாக வளர்வதற்குத்தானே தவிர சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.
இதுவா சிக்கனம்?
எனக்கொரு நண்பர் உண்டு. மாநிலத்தின் தலைசிறந்த கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஒரு காலத்தில் நல்ல தொழில் முனைவராக இருந்தவர் அவரோடு உடன் இருப்பதே கௌரவம் என்ற காலமும் இருந்தது. அவருக்கு என்ன பிறழ்வு ஏற்பட்டதோ, இப்போதெல்லாம் எக்கணமும் சிக்கனம்! சிக்கனம்!
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
மொட்டை அடித்திருக்கிறாரா, முடிவெட்டி இருக்கிறாரா என்று தெரியாத அளவு சலூனில் முடி திருத்துவதிலும் சிக்கனம், அதுவும் வருடத்திற்கு இருமுறை, எளிதில் கரையாத குளிக்கும் சோப், ஒரு தடவை சமையல் செய்தால் மூன்று நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது, டும்பத்துல யாருக்காவது பிறந்தநாள் வந்தால் …அம்மா உணவகத்தில் மூணு வேளையும் ட்ரீட், முன்பதிவு இல்லாத ரயில் பயணம், மினிமம் ரீசார்ஜ் செய்து எல்லோருக்கும் மிஸ்டு கால் (அவங்க கூப்பிடுவாங்கல்ல)
துவைத்த துணியை அயன் பண்ணாமல் நன்றாக மடித்து மெத்தை தலையணைக்கு அடியில் வைத்தல், அலுவலகத்தில் காப்பின்னா நிறைய குடிக்கலாம், ஆனால் வெளியே குடிப்பதே இல்லை, தொழில் பார்க்கிற இடத்திலிருந்து வீட்டுக்கு வர எவ்வளவு லிப்ட் கேட்க முடியுமோ அவ்வளவு லிப்ட் கேட்டு ஓசியிலேயே வந்து சேர்றது (அப்பத்தான் பெட்ரோல், பஸ் காசு மிச்சமாகும்), தினசரி பேப்பரை பக்கத்துல இருக்கிற டீ கடையில போயி டீ குடிக்காமல் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறது, சமையலறையை தவிர வீட்டில் வேறு இடங்களில் ஜீரோ வாட்ஸ் பல்பு, செருப்பு அதிகமா தேயாம இருக்கணும்னா குறைந்த தூரம் போவதற்கு வெறும் காலிலேயே போவது, முடிஞ்ச அளவு அன்னதானம் போடுவதை அறிந்து அங்கே செல்வது, உறவு /நட்பு வட்டாரங்களில் யாராவது வீட்டுக்கு வருகிறேன் என்று ஃபோன் செய்தால் அடடா, இப்பத்தான கடைவீதிக்கு வந்தேன் வர கொஞ்சம் லேட் ஆகும் ….என்ற பதிலை ரெடிமேடாக வைத்திருப்பது.
பெரிய அளவுல நடக்குற விசேஷங்கள்ல அழைப்பை பற்றி கவலைப்படாமல் ஆசீர்வாதம் பண்ண ஃபுல் குடும்பமும் விசேஷம் முடியும் வரை போறது. (நேரடியா டைனிங்), இப்படியான வாழ்க்கை முறைக்கு மாறிட்டாருங்க இதுக்கு பேரு சிக்கனமா? கஞ்சத்தனமா ?ன்னு எனக்கு புரியலங்க.
பரவாயில்லயே, இது கூட நல்லாத்தான் இருக்குதுன்னு., உங்களுக்கு ஏதாவது புடிச்சிருக்கா? சிக்கனம் என்பது தேவையில்லாத செலவுகளை குறைப்பது மட்டுமே! பணமிருந்தும் தேவையான செலவுகளை கூட செய்யாமல் மிச்சப்படுத்துவது சிக்கனம் அல்ல. அதற்கு பெயர் என்னவென்று உங்களுக்கே தெரியும். தேவைக்கான செலவு செய்வதற்கு கூட பணம் இல்லாவிட்டால் அவசிய தேவைகளை தவிர மற்றவற்றை செய்யாமல் தவிர்க்கலாம். அதனை விட ஒரு படி மேலானது தேவையான அளவுக்கு பணத்தை சம்பாதிக்க கற்றுக் கொள்வதே! வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்!
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சுதந்திரமும் சிக்கனமும் அவசியமானதுதான். ஆனால், ஒவ்வொன்றும் சில வரையறைகளுக்குள் இருக்க வேண்டும். நாம் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சுதந்திரத்தில் சில ஒழுக்க கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். சிக்கனம் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்து விடவும் கூடாது. பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமாக ஆடி விடவும் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.