அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்” என்றதும் கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகளுக்கான தேர்வு எழுத தமிழகத்தை சார்ந்த 1,500 விண்ணப்பதாரர்களுக்கு ஹைதராபாத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளது ரயில்வே துறை. இதனால் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு வாய்ப்புகள் பறிபோகும் என்பதால் தமிழகத்துக்கு அவருடைய தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைத்திருந்தார். பல்வேறு தேர்வுகள் இருப்பதால் ஹைதராபாத்தில் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது என்று வாரிய தலைவர் பதிலளித்திருந்தார். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஏற்படுத்தித் தர முடியாது என்ற ரயில்வே வாரியத்தின் பதில் சரியானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி. “உண்மைதானே சாமி! தமிழகத்தில் தேர்வு மையங்களை ஏற்படுத்தித் தர இல்லாத கல்லூரிகளா?” என்றேன் நான். (படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

“அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குமாறு தமிழக ஆளுநரிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்த கோரிக்கையை கோரிக்கை மீது எவ்வித முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார் தமிழக ஆளுநர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “அரசின் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியுமா? சாமி” என்றேன் நான்.
“நமது தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம் டெல்லியில் தகவல் தொடர்புக்கு பயன் உள்ளதாக இந்தி இருப்பதால் இந்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தி தேசிய மொழி என்று இந்திய அரசியலமைப்பில் இல்லை என்பது அவருக்கு தெரியாதோ? என்றார் வாக்காளர் சாமி. “மத்திய ஆளும் கூட்டணியில் இருப்பவர் அப்படித்தானே பேசுவார் சாமி! உங்களுக்கு புரியாதோ?” என்றேன் நான்.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுன் விலகியது முதல் மாநில ஆளும் கட்சியை விமர்சித்து தங்கள் கட்சி முழங்குவதில்லை என்று அந்த கட்சி தொண்டர்களுக்கு வருத்தம் இருப்பதாக சமீபத்தில் இணையதளம் முடக்கப்பட்டு மீண்ட பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “தலைமையின் அறிவுறுத்தலையும் மீறி மாநில ஆளும் கட்சியை விமர்சித்ததால் தானே அந்த பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் எப்படி ஆளும் தரப்பை எதிர்த்து அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவார்கள்? அவர்கள் கட்சியில் இருக்க வேண்டுமல்லவா? சாமி” என்றேன் நான்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் தனித்துப் போட்டியிட்டதாலும் இதனால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்பட்டதாலும் திமுக ஆட்சிக்கு வந்தது என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு பேசி உள்ளார் சீமான். வரும் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுவேன் என்று பலமுறை கூறிவிட்டார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார் வாக்காளர் சாமி. “சீமான் தனித்துப் போட்டியிடுவதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியைப் பிடிக்க கூடாது அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதாலோ, என்னவோ?” என்றேன் நான்.
“அதிமுக தலைமை தமக்கு தங்கள் கட்சிக்கு வரும் ஜூலை மாதத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டு வழங்குவார் என்ற நம்பிக்கையை தேமுதிக இழந்து விட்டதாலோ, என்னவோ? அந்த கட்சியின் தலைவி திமுக அரசின் வரவு செலவு திட்டத்தை வரவேற்றுப் பேசி உள்ளார். இவரது பேச்சு தேமுதிகவிற்கு தடத்தை மாற்றுவதாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை போலவே அதே ராஜ்ய சபா சீட்டை அதிமுகவுடன் பேசி பெற்று விடலாம் என்று இருந்த பாமகவுக்கு அதனை வழங்க அதிமுக மறுத்தாலோ, என்னவோ? சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாமக புறக்கணித்து விட்டது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பாமக அறிவித்துவிட்டாலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் தடம் எங்கு செல்கிறது? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி. “அதிமுகவின் மூத்த தலைவர் கே. எஸ். செங்கோட்டையன் அவர்களது மகனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டதாகவும் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்ததாகவும் அதனால் தான் அவர் கலகம் செய்து வருகிறார் என்றும் ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஆனால், இது உண்மையா? என்று அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும்” என்றேன் நான்.
“தமிழக சட்டமன்ற சபாநாயகர் மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறாது எனத் தெரிந்திருந்தும் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்ற கேள்வி பலருக்கு உண்டு. அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால் அவர்களது பதவி பறிக்கப்படும் என்பது அறிந்ததே. அதிமுக உரிமை மீட்பு குழுவே நடத்தி வரும் ஓபிஎஸ்-ம் அதிமுகவில் தலைமைக்கு அதிருப்தியாக பணியாற்றி வரும் செங்கோட்டையனும் என்ன செய்வார்கள் என்பதை அறிய இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம்! இருவருமே அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஓபிஎஸ் ஒரு படி மேலே சென்று எடப்பாடிக்கு பின் இருக்கையில் அமர்ந்து தீர்மானத்தை ஆதரித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிவிடலாம் என்று இருந்த செங்கோட்டை அவர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை ஆதரித்து பேச வைத்ததாக கூறப்படுகிறது. தீர்மானத்தின் போது வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கி எடப்பாடி அவர்களிடம் செங்கோட்டையன் பேசியுள்ளார். இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது எடப்பாடி தான் தலைவர் என்பதை நிரூபித்துள்ளார் என்றே கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “இதற்குத்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்ததோ, என்னவோ?” என்றேன் நான்.
“ஸ்டாலினும் கேஜ்ரிவால் போல் டாஸ்மாக் ஊழலால் கைதாகவர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்வதாக அறிவித்ததால் தொடை நடுங்கிய திமுக அரசு என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜயின் தமிழக வெற்றி கழகமும் திமுகவும் இணைந்து நாடகமாடுவதாகவும் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“மதுபான விற்பனையில் ஊழல் நடைபெற்றதாக பிரச்சாரத்தை நடத்தி டெல்லியில் கெஜ்ரிவால் அரசை கீழே இறங்கியதை போல தமிழகத்தில் பொய்யான பிரச்சாரத்தை நடத்தி திமுகவை அசைத்து விட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். பிஜேபியும் திமுகவும் ஒன்று சேர்ந்து கொண்டு நாடகம் ஆடுவதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பதிலளித்துள்ளது. இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள் சாமி!” என்றேன் நான்.
“தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து ஆதவ் அர்ஜுன் செய்யப்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்து ஒன்று பரவியது. ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று அந்த கட்சியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “ஆதவ் அர்ஜுன் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக செய்தியை பரப்பியது, யாரோ? சாமி. அவர் தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதை மறந்து விடக்கூடாது” என்றேன் நான்.
“இன்னும் சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஒருங்கிணைப்பை வழி நடத்த வேண்டும் என்றும் பொதுவுடமை சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள் என்றார் வாக்காளர் சாமி. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சரத் பாவாரின் கட்சியும் மம்தா பானர்ஜி கட்சியும் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் கட்சியும் ஆந்திராவில் ராஜசேகர் கட்சியும் ஏன் இன்னும் சொல்லப்போனால் கேசரிவால் கட்சியும் ஒரிசாவில் நவீன் பட்நாயக்கன் கட்சியும் போன்றவையும் ஒரே கட்சியாக மாற வேண்டும் என்று மக்கள் கருதலாம், சாமி நடக்கவா போகிறது?” என்றேன் நான்.
“விண்வெளியில் உள்ள நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு பிரச்சினைகளால் அங்கு இருந்து திரும்பி வர இயலவில்லை இந்நிலையில் ஒன்பது மாதங்கள் கழித்து அவர் பூமிக்கு இன்று வர உள்ளதாக தெரிகிறது” என்று கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: வந்தாரய்யா! வாக்காளர் சாமி. இன்றைய கருத்து மூட்டைகளை கொட்டியதற்கு நன்றி ஐயா.