கடந்த 1966 ஆம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பட்ட முதலாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் லஞ்ச ஒழிப்புக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா என்ற அமைப்புகளை ஏற்படுத்த 1966 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் அமைக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகள் சட்டம், பொது நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, நிதி போன்ற துறைகளில் அனுபவம் பெற்ற ஒருவரை தலைவராகவும் நாள் வரை உறுப்பினர்களாகவும் நியமிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றது லோக் ஆயுக்தா. லோக் ஆயுக்தா தலைவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் உறுப்பினருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் விசாரணை பிரிவு, நிர்வாகப் பிரிவு, புலனாய்வு பிரிவு ஆகியன உள்ளன. விசாரணை பிரிவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பதிவாளராகவும் நிர்வாகப் பிரிவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செயலாளராகவும் புலனாய்வு பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இயக்குனராகவும் உள்ளார்கள். இந்த அமைப்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள்.
மாநில அரசின் அனைத்து வகையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான லஞ்ச புகார்களையும் மாநில அரசின் உதவி பெறும் அமைப்புகளின் ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்களையும் லோக் ஆயுக்தா சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகையிலான புகார்களையும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்யலாம். குற்ற சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிரச்சினைகளையும் சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ள பிரச்சனைகளையும் குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் செய்ய இயலாது.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா விதிகளில் சொல்லப்பட்டுள்ள மாதிரியில் புகார்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு லோக் ஆயுக்தா முகவரி: Tamil Nadu Lokayukta, Sidco Buildings, 6th & 7th Floor, Thiru. Vi. Ka Industrial Estate, Guindy, Chennai – 600 032.